அன்று கரூர் மேட்டரில் போலீஸுக்கு விஜய் நன்றி! இன்று பிளேட்டை திருப்பி..! "ஜனநாயகனின்" இரட்டை பேச்சு
டெல்லி: "காவல் துறை இல்லை என்றால் நான் பைபாஸில் இருந்து கரூர் வேலுசாமிபுரத்திற்கு வந்திருக்கவே முடியாது, காவல்துறைக்கு எனது நன்றி" என அன்று கூறியிருந்த விஜய், இன்று சிபிஐ விசாரணையில், கரூர் நெரிசலில் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறை தவறிவிட்டது என சிபிஐயிடம் விஜய் கூறியதாக பல்வேறு டிவி ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தவெக சார்பில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு விஜய் பகல் 12 மணிக்கு வருவார் என சொல்லப்பட்ட நிலையில் அவர் இரவு 7 மணிக்குத்தான் வந்தார்.

அப்போது அவருக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி அவரது வாகனம் முன்னோக்கி சென்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் விஜய்யின் முகத்தை நன்றாக பக்கத்தில் இருந்து பார்க்கும் எண்ணத்தில் அவரது பிரச்சார வாகனத்திற்கு அனுமதி அளித்த இடத்தில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.
இந்த நிலையில் விஜய்யின் வாகனம் சற்று முன்னோக்கி செல்வதை அறிந்த மக்கள், அவரை பார்க்க முண்டியடித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலருக்கு மூச்சுதிணறி மயங்கி கீழே விழுந்தனராம்.
அப்போது மற்றவர்கள் இவர்களை மிதித்ததால் 41 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த கூட்டத்தின் போது ஒரு குழந்தை மயங்கி கீழே விழுந்தது. அந்த குழந்தையை தேடுங்கள் என விஜய் அறிவித்தார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மேலும் 7 மணி நேரமாக காத்திருந்ததால் விஜய்யிடம் தண்ணீர் கேட்டனர். அப்போது அவர் தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசினார். அதை பிடிக்க முண்டியடித்த போதும் நெரிசல் ஏற்பட்டது.
இப்படியாக 41 பேரை காவு வாங்கிய இந்த கூட்டத்தில் இருந்து சிறிதும் பொறுப்பும் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ், நிர்மல் குமார் உள்ளிட்டோர் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இது அப்பகுதியில் சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூர் கூட்ட நெரிசலில் பாதுகாப்புக்கு இருந்த 500-க்கும் மேற்பட்ட போலீஸார், தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரச்சார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழக ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோரிடம் சிபிஐ டெல்லி அலுவலகத்தில் விசாரணை நடத்தியது.
அது போல் விஜய்யிடம் விசாரணை நடத்த கடந்த 12 ஆம் தேதி சம்மன் அனுப்பியது. அதன் பேரில் விஜய் அன்றைய தினம் ஆஜரானார். அப்போது அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் தனிஅறையில் அமரவைக்கப்பட்டு 50-க்கும் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில்கள் வாங்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக விஜய் டெல்லி சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அப்போது அவரிடம் அவ்வளவு கூட்டத்தினூடே ஏன் வாகனத்தை செலுத்த சொன்னீர்கள், வாகனத்தின் மேலே இருந்த உங்களுக்கு நிலைமை மோசமானது தெரியவில்லையா?
அபாயத்தை தடுக்க என்ன முயற்சி எடுத்தீர்கள்? நிலைமை மோசமடைந்த நிலையிலும் ஏன் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து பேசினீர்கள் என சிபிஐ அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தனர்.
அதற்கு விஜய், "வாகனம் எங்கு செல்ல வேண்டும், எப்படி செல்ல வேண்டும் என காவல் துறை வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றிதான் நடந்து கொண்டோம். கரூர் நெரிசலில் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறை தவறியது என சிபிஐயிடம் விஜய், தமிழக காவல்துறையை குற்றம்சாட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் கரூர் கூட்டத்தில் தமிழக காவல் துறைக்கு விஜய் நன்றி தெரிவித்திருந்த நிலையில் தற்போது முன்னுக்கு பின் முரணாக விஜய் பதில் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் தனது பேச்சை தொடங்குவதற்கு முன்பு காவல் துறைக்கு விஜய் நன்றி தெரிவித்தார். அதுகுறித்து பார்க்கலாம்.
கரூரில் விஜய் பேச ஆரம்பிக்கும் போது, "முதலில் காவல் துறைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். காவல் துறை இல்லை என்றால் அந்த பைபாஸில் இருந்து இந்த ஸ்பாட்டுக்கு வந்திருக்க முடியுமா என்பது எனக்கே தெரியவில்லை. மீண்டும் காவல் துறைக்கு நன்றி (Once again Thank you so much)" என கூறிவிட்டு தனது பேச்சை விஜய் தொடர்ந்தார்.
அதுபோல் அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி விஜய்யின் பிரச்சார வாகனம் சென்ற போது அதை தடுத்து நிறுத்த போலீஸார் முயற்சித்ததையும், அதற்கு தவெக நிர்வாகிகளான புஸ்ஸி, ஆதவ் உள்ளிட்டோர் செவி சாய்க்காததையும் ஹைகோர்ட்டில் நடந்த வழக்கில் காவல் துறை டிஎஸ்பி புட்டு புட்டு வைத்திருந்தார். மேலும் கூட்டத்தில் நிறைய பேர் மயங்கி விழுகிறார்கள், பேச்சை நிறுத்த விஜய்யிடம் சொல்லுமாறு போலீஸார் வாக்கி டாக்கியில் கூறியும் அவரது நிர்வாகிகள் அதை கேட்காமல் விஜய்யை பேசவைத்தனர் போன்ற குற்றச்சாட்டுகள் விஜய் தரப்பினர் மீது இருக்கும் நிலையில் இன்று காவல் துறை மீது பிளேட்டை மாற்றி போடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications