“அய்யோ.. சின்ன சின்ன பசங்க” உயிரைக் குடித்த மது விருந்தில் அதிர்ச்சி.. விசாரணையில் ‘பகீர்’ தகவல்!
சென்னை: சென்னை கோயம்பேடு அருகே அமைந்துள்ள வி.ஆர் மாலில் உள்ள பார் ஒன்றில் நேற்று இரவு நடைபெற்ற மது விருந்தில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் பலியானார்.
அனுமதியின்றி நடந்த இந்த மது விருந்தில் இளைஞர் பலியான நிலையில், 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த பாருக்கும் போலீசார் சீல் வைத்துள்ளனர்.
மேலும், இந்த மதுவிருந்தில் கலந்து கொண்டவர்களில் 89 பேர் 21 வயதுக்கு குறைவானவர்கள் என்றும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
'நமக்கு சிப்ஸ்தான் முக்கியம்’ மாஸ்டர்பிளான் போட்ட குரங்கு.. தோள் கொடுத்த நாய்.. செம!

மது விருந்து
சென்னை கோயம்பேட்டுக்கும், அண்ணா நகருக்கும் இடையே அமைந்துள்ள வி.ஆர் மாலில் உள்ள ஒரு அரங்கில் நேற்று இரவு மது விருந்து நடைபெற்றுள்ளது. இந்த மது விருந்தில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல டி.ஜே ஒருவரை வரவழைத்து, ஆட்டம், பாட்டம் என இரவு முழுவதும் மது விருந்து கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த மது விருந்துக்கு ஆப் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கில் பணம் கட்டி நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து கலந்து கொண்டனர்.

இளைஞர் பலி
இந்த மது விருந்தில் கலந்துகொண்ட சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன் (23) என்ற இளைஞர் அதிகளவில் மது அருந்தியதால் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவர் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். உயிரிழந்த பிரவீன் சென்னையில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அனுமதியின்றி மது விருந்து
இதற்கிடையே அனுமதியின்றி மது விருந்து நடைபெற்றதாக தகவல் வந்த நிலையில் அங்கு சென்ற போலீசார் மது விருந்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கிருந்த 840க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி மது விருந்து நடத்தியதற்காக மது விருந்திற்கு ஏற்பாடு செய்த மேலாளார் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போதை பொருட்கள்
மேலும், இந்த மது விருந்தில் பங்கேற்ற இளைஞர் உயிரிழந்துள்ளதால், விருந்தில் போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் உயிரிழந்த பிரவீனின் நண்பர்கள் மற்றும் மது விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சென்னை மாநகரத்தில் காவல்துறை அனுமதி இல்லாமல் மது விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

3 பேர் கைது
வி.ஆர்.மாலில் அனுமதியின்றி மது விருந்து நடத்தியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதியின்றி நடந்த மதுவிருந்தில் பங்கேற்ற இளைஞர் உயிரிழந்தது குறித்து மதுபானக்கூட மேலாளர்கள் நிகாஷ், பாரதி, ஊழியர் எட்வின் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் மதுவிருந்தில் கலந்து கொண்டவர்களில் 89 பேர் 21 வயதுக்கு குறைவானவர்கள் எனத் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.