சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்

ஆளுநர் உரையில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதற்கான தெளிவான செயல்திட்டம் இல்லாததும், சமூகநீதி சார்ந்த வாக்குறுதிகள் இல்லாததும் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக ஆளுநர் உரையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகழ்பாடுவதற்காக எழுதப்பட்ட வரிகளில் பாதியளவுக்குக் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவிக்க எழுதப்படவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.

16ஆவது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று உரையாற்றினார். ஆளுநர் உரை குறித்து எதிர்கட்சியினர் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்; பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரத்தில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதற்கான தெளிவான செயல்திட்டம் இல்லாததும், சமூகநீதி சார்ந்த வாக்குறுதிகள் இல்லாததும் மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றன.

We expected a lot in the Governors speech Stalins praise is high - Dr. Ramdoss

பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்; தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனைக்குழு அமைக்கப்படும்; தமிழக அரசின் பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்பவை உள்ளிட்ட தமிழக அரசின் அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவையே.

தமிழகத்தின் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்திருப்பது நீட் தேர்வு ஆகும். நீட் தேர்விலிருந்து விலக்கு பெருவதற்கான சட்டங்களை நிறைவேற்றி அவற்றுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுனர் அறிவித்துள்ளார்.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு இது தான் இயல்பான நடைமுறை என்றாலும் கூட, கடந்த ஆட்சியில் இதே போன்று நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டங்களை மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது. இத்தகைய சூழலில் புதிதாக நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைப்பதை உறுதி செய்ய எத்தகைய அணுகுமுறையை தமிழக அரசு கடைபிடிக்கப் போகிறது என்பது குறித்த செயல்திட்டம் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3.50 லட்சம் பணியிடங்கள் விரைவாக நிறைவேற்றப்படும்; 2 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் ஆளுனர் உரையில் இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள தொழில்நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் 75 சதவிகிதம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே வழங்க வகை செய்யும் சட்டத்தை இயற்றுவது குறித்தும் எதுவும் தெரிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. கொரோனா தொற்று ஓய்ந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும். 69% இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவையாகும்.

அதே நேரத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த சட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆளுநர் உரையில் எதுவும் அறிவிக்கப்படாதது அரசின் நோக்கங்கள் குறித்த ஐயங்களை ஏற்படுத்துகிறது. இந்த ஐயங்களை போக்கவும், தமிழ்நாட்டில் முழுமையான சமூகநீதியை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஐந்தாண்டுகளுக்கு முன் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், ஆளுனர் உரையில் அது குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்கப்படாதது மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக வாக்குறுதி அளித்த திமுக அது குறித்தும் எதையும் அறிவிக்கவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும்; வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்; பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் மகளிர் சுய உதவிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்; முதியோர் உதவித் தொகை, மீனவர்கள் உதவித்தொகை உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால், அவற்றில் 5 வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகளை வெளியிடாததன் மூலம் மக்களை திமுக அரசு ஏமாற்றியுள்ளது.

சட்டசபைத் தேர்தல் முடிவடைந்து புதிதாக பொறுப்பேற்கும் அரசு அடுத்த 5 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த முடியும். அவை குறித்த விரிவான அறிவிப்புகளை முதலாவது ஆளுனர் உரையில் வெளியிடுவது சாத்தியமில்லை என்றாலும் கூட, குறைந்தபட்சம் அவை கோடிட்டு காட்டப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். அது நியாயமும் கூட. ஆனால், தமிழக ஆளுநர் உரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகழ்பாடுவதற்காக எழுதப்பட்ட வரிகளில் பாதியளவுக்குக் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவிக்க எழுதப்படவில்லை. குறிப்பாக நெல், கரும்புக்கான கொள்முதல் விலைகள் குறித்து எந்த அறிவிப்புகளும் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

சட்டசபையில் நாளை முதல் நடைபெறவுள்ள ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போதாவது தமிழக மக்கள் எதிர்பார்க்கக்கூடிய, பயனுள்ள பல திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட வேண்டும்; நிச்சயம் வெளியிடுவார் என்று நம்புவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
In his speech to the Governor of Tamil Nadu, PMK founder Dr. Ramdoss teased that not even half of the lines written in praise of Chief Minister MK Stalin were not written to announce plans for the development of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X