தமிழகத்தில் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைய வீர சபதம் ஏற்போம் - முதல்வர் பழனிச்சாமி சூளுரை
சென்னை: எதிரிகளாலும் பாராட்டப்பட்டவர் முதல்வர் ஜெயலலிதா. அவரது நினைவிடத்தை கனத்த இதயத்துடன் பொதுமக்களுக்கு அர்ப்பணித்துள்ளேன் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மூன்றாவது முறையாக மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம். பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றும் கூறியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா நினைவிடத்தை ஓபிஎஸ் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அதன் பிறகு, ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுக முன்னோடிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவிடத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்,அமைச்சர்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் ஒருவர் பின் ஒருவராக வந்துஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தினர். இதனிடையே ஜெயலலிதா நினைவிட கல்வெட்டும் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சட்டசபை தலைவர் தனபால், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி பேசினார். ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் நடந்த சாதனைகளைப் பட்டியலிட்டார் முதல்வர் பழனிச்சாமி.
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.கவை வழிநடத்தியவர் ஜெயலலிதா. எதிரிகளாலும் பாராட்டப்பட்டவர். பெண்கள் பாதுகாப்புக்கு பல முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தவர். அதிக நாட்கள் ஆட்சியில் இருந்து பெண் முதல்வர் என புகழாரம் சூட்டினார்.
ஜெ. நினைவிடம் திறப்பிலும் எடப்பாடியார் செம வியூகம்.. "அழும் பிள்ளைக்கு" பொம்மைக்கு பதில் சாக்லேட்!
மேலும், உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு தந்தார் என்றும் சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா என்றும் மக்களிடத்தில் தனி இடத்தை பிடித்தவர் என்றும் தெரிவித்தார்.
எதிரிகளாலும் பாராட்டப்பட்டவர் முதல்வர் ஜெயலலிதா. அவரது நினைவிடத்தை கனத்த இதயத்துடன் பொதுமக்களுக்கு அர்ப்பணித்துள்ளேன். தமிழகத்தில் மூன்றாவது முறையாக மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம். பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று பேசினார் முதல்வர் பழனிச்சாமி.