வணக்கம்! வாங்க மோடி.. காவி பலூன் பறக்க விட தயாரான பாஜக - தடை விதித்த காவல்துறை
சென்னை: பிரதமர் மோடியை வரவேற்று சென்னையில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வணக்கம் மோடி வாங்க மோடி என்ற வாசகங்கள் எழுதிய பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மத்திய அரசு துறைகள் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று பிரமாண்ட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேரு உள் விளையாட்டு அரங்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகை.. என்னென்ன நலத்திட்டங்கள்?.. தமிழக பாஜக பெருமிதம்!

பாஜக வரவேற்பு
சென்னை பட்டினப்பாக்கத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருகை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் பலூன்களை பறக்க விடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்நிகழ்வில் கலந்து கொண்டு பலன்களை பறக்கவிட இருந்தார். பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி தமிழக காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதனால் நிகழ்வில் பங்கேற்க இருந்த அண்ணாமலை பங்கேற்கவில்லை.

பாஜக காவி பலூன்
இதனைத் தொடர்ந்து பாஜக மாநில நிர்வாகிகள் பலூன்களை கையில் ஏந்தி பிரதமர் தமிழகம் வருவதை முன்னிட்டு வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன், தமிழகத்தில் கூலிப்படையினர் அதிகரித்து வருவதால் 'கோ பேக்மோடி' என்கிற ஹேஷ் டேக் ட்ரெண்ட் செய்வதும் கூலிப்படையே என்று குற்றம்சாட்டினார்

மோடி வருவது எதற்காக?
பிரதமர் மோடியின் வருகையை தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர் துபாய்க்கு குடும்ப சுற்றுலா செல்வதற்காக தமிழகம் வரவில்லை. மாறாக 36,000 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். கடந்த காலங்களிலும் கோ பேக்மொடி என்கிற ஹேஷ்டேக் பாகிஸ்தானில் இருந்து ட்ரெண்ட் செய்யப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று என்று தெரிவித்தார்.

ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்கள்
சென்னை வரும் பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார் மேலும் ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன் உள்ள அறையை பூட்டி சாவி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பலூன்களை பறக்க விடப் போவது இல்லை. கையில் வைத்துக்கொண்டு வரவேற்க உள்ளோம் என்று காவல்துறையிடம் தெரிவித்தனர்.

வணக்கம் மோடி வாங்க மோடி
வணக்கம் மோடி வாங்க மோடி என்ற வாசகம் பொருந்திய பலூன்களை பறக்க விட இருந்தோம். சில பாதுகாப்பு காரணமாக பறக்க விட முடியவில்லை. 1 லட்சம் பலூன்களை தயார் செய்து இருந்தோம். இதை வேறு இடத்திற்கு கொண்டு சென்று பறக்க விட முடியாது. தற்பொழுது இந்த பலூன்களை எதுவுமே செய்ய முடியாது. அப்படியே தான் வைத்து இருக்க போகிறோம் என்று கூறினார். கடந்த முறை மோடி சென்னை வந்த போது எதிர்கட்சியினர் பலரும் கோ பேக் மோடி என்ற வாசகங்கள் அடங்கிய கறுப்பு பலூனை பறக்க விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.