மீண்டும் ஆளுமையான ஹெச் ராஜா.. ஆரம்பிக்கும் பாஜக உறுப்பினர் சேர்க்கை.. எழுந்த முணுமுணுப்புகள்
சென்னை: தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை 3 மாத படிப்பு படிக்க லண்டன் சென்றுள்ளதால், மாநிலத்தில் பாஜக கட்சி பணிகளை மேற்கொள்வதற்கு ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுதான் இனி முடிவுகளை எடுக்க போகிறது.இந்த சூழலில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அந்த கட்சியில் நடப்பவை குறித்து பார்ப்போம்,.
தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை இந்திய மேலாண்மை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தவர். அதன்பிறகு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ் அதிகாரியானார். கர்நாடக மாநிலத்தில் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வந்த அவர், 5 வருடம் முன்பு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அவர், கடந்த 2020ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜகவில் துணைத் தலைவராக பதவி வகித்த அண்ணாமலை, 2021 சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த சூழலில், லண்டனில் உள்ள புகழ் பெற்ற 'ஆக்ஸ்போர்டு' பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும், 'சர்வதேச அரசியல்' என்ற தலைப்பிலான படிப்பை படிப்பதற்காக அண்ணாமலை தேர்வாகி இருந்தார். 17 வாரங்களை கொண்ட இந்த படிப்புக்காக இந்தியாவில் இருந்து அண்ணாமலையுடன் 12 பேர் தேர்வாகி இருந்தனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் 'செவனிங்' உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) மூலம் 'சர்வதேச அரசியல்' படிப்புக்கு அண்ணாமலை தேர்வான நிலையில், அங்கு சென்று படிப்பதற்காக நேற்று முன்தினம் அதிகாலை விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார்.
அவரை தமிழக பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் வழியனுப்பி வைத்தனர். 3 மாத கால படிப்பை நிறைவு செய்து, டிசம்பர் மாத இறுதியில் அண்ணாமலை மீண்டும் தமிழகம் திரும்ப உள்ளார். இந்நிலையில் லண்டனில் படிப்பைத் தொடர்ந்து கொண்டே, அங்கிருந்தபடியே தமிழக பாஜகவின் அரசியல் பணிகளையும் கவனிக்கிறேன் என கட்சியின் மேலிடத்திடம் அண்ணாமலை கூறியிருந்தாராம். ஆனால் பாஜக மேலிடம் அண்ணாமலையின் கோரிக்கை நிராகரித்தது. அத்துடன் தமிழக பாஜகவின் கட்சி பணிகளை மேற்கொள்வதற்காக, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுவை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அமைத்துள்ளார்.
ஹெச்.ராஜா ஒருங்கிணைப்பாளராகவும், சக்கரவர்த்தி, கனகசபாபதி, முருகானந்தம், ராம சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்தக் குழுதான், கட்சிக் கூட்டங்களை நடத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும் மாநில தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலைக்கு பதில் கிட்டத்தட்ட தலைவர் போல் பதவி வகிக்க போகும், ஹெச் ராஜா கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமித்த கட்சி மேலிடத்திற்கு நன்றி தெரிவித்தார். மேலும் பாஜகவை பொறுத்தவரை யாராக இருந்தாலும் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி புதுப்பிக்கப்படும் என்று கூறிய ஹெச் ராஜா, கட்சியின் தலைமை எதிர்பார்க்கும் வகையில் தமிழகத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து எங்கள் குழு செயல்படும் என்றார்.
தற்போது தமிழக பாஜகவின் கட்சி பணிகள் என்பது, கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதுதான். பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்ப்பு பணி 6 ஆண்டுகளுக்கு ஒருதடவை நடத்தப்படும் என்கிற நிலையில், ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களும் 6 ஆண்டுகளுக்கு ஒருதடவை தங்கள் உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் அந்த வகையில் புதிய உறுப்பினர் சேர்க்கையின்போது, பல லட்சம் பேரை சேர்க்க திட்டமிட்டுள்ளது பாஜக தலைமை.
இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உறுப்பினர் சேர்க்கைக்காக ஆலோசனைக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் திருமண மண்டபங்களில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படியே உறுப்பினர் சேர்க்கை நடத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜூன் மூர்த்தி என்பவர், வரும் ஞாயிறு அன்று இந்த ஆலோசனைக் கூட்டத்தை நட்சத்திர ஓட்டலில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி நட்சத்திர ஓட்டலில் நடத்தினால் மாவட்டத் தலைவர்கள் உள்பட, கட்சி நிர்வாகிகள் எப்படி வருவார்கள் ? என்றும் ஆலோசனை கூட்டம் நடப்பது பொது மக்களுக்கும், தொண்டர்களுக்கும், பாஜக ஆதரவாளர்களுக்கும் எப்படி தெரிய வரும் ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள். ஏனெனில், இது போன்ற ஆலோசனைக் கூட்டங்கள், மாவட்ட அளவில் உள்ள கட்சி அலுவலகத்திலோ அல்லது கல்யாண மண்டபத்திலோ நடைபெறும். அப்போதுதான் நிர்வாகிகளும், தொண்டர்களும் எளிதாக வந்து போவார்கள். ஆனால், நட்சத்திர ஓட்டடலில் நடத்துவது குறித்து முணுமுணுப்புகள் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications