எடப்பாடி பழனிச்சாமி பற்றி நடந்த "டிபேட்.."அதிர்ந்து போன அதிமுக.. பிரபல சேனலுக்கு 48 மணி நேரம் கெடு
சென்னை: எடப்பாடி பழனிசாமி ஒரு தொலைக்காட்சிக்கு, 48 மணி நேரம் கெடு வைத்துள்ளார்.. தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்றிருந்தார்.. அங்கு பல்வேறு சந்திப்புகள், கூட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நடத்தினார்...
எனினும், முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில் அதுகுறித்து நிறைய வதந்திகள் இணையத்தில் பரப்பப்பட்டு கொண்டிருந்தது..
இருக்கு.. கச்சேரி இருக்கு.. சாட்டை எடுக்கும் முதல்வர்.. அட்ராசிட்டி கணவர்கள்.. மேயர் பிரியா வார்னிங்

விமர்சனம்
குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின் தனது தனி விமானத்திற்கு அரசின் பல கோடிகளை செலவிட்டதாக இணையத்தில் வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால் அமைச்சர் தங்கம் தென்னரசோ, இது திமுகவின் கட்சி காசு, தனி விமானத்திற்கு அரசு பணத்தை பயன்படுத்தவில்லை, விமானம் கிடைக்கவில்லை என்பதால் தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளோம் என்று விளக்கம் தந்திருந்தார்.

பாஜக இளைஞர்
அதேபோல, சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி செயலாளர் அருள்பிரசாத் என்பவர் முதல்வர் ஸ்டாலினின் டிரஸ் குறித்து வதந்தி பரப்பினார்.. ஸ்டாலினின் கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி ரூபாய் என்று கிளப்பி விட்டு கொண்டிருந்தார்.. இதையும் பிடிஆர் விடவில்லை... அந்த பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதியமைச்சர் போலீசில் புகார் செய்தார். அதேபோல, துபாயில் முதலீடு செய்வதற்காகவே சென்றதாக எதிர்கட்சியினர் சரமாரியாக குற்றஞ்சாட்டியதற்கும், துபாயில் இருந்து திரும்பிய உடனேயே ஸ்டாலினும் விளக்கம் அளித்திருந்தார்..

எடப்பாடி சுற்றுப்பயணம்
இப்படிப்பட்ட சூழலில்தான், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது மேற்கொண்ட அமெரிக்கா மற்றும் சுற்றுப்பயணம் குறித்து சோஷியல் மீடியாவில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.. சில மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் வெளியிட்டிருந்தனர்.. அந்த வகையில், பிரபல தொலைக்காட்சி ஒன்று, எடப்பாடி பழனிசாமி, அன்று அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டது தொடர்பாக விவாதம் நடத்தியது. அதில், அவர் வெளிநாடுகளில் முதலீடு செய்ய பணம் எடுத்துச் சென்றாரா? என்றும், அவருடன் மகன், மாமனார் ஆகியோர் சென்றார்களா? என்றும் கேள்விகளையும் எழுப்பியிருந்தது.

தொலைக்காட்சி
இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது... எனவேதான் தன்னுடைய வெளிநாட்டு பயணம் குறித்து அவதூறான தகவலை வெளியிட்ட அந்த பிரபல தொலைக்காட்சி நிர்வாகத்தினர் 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி கொந்தளிப்பு
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "30.3.2022 அன்று மாலை முரசு தொலைக்காட்சியில் முரசரங்கம் நிகழ்ச்சியில், நெறியாளர் செந்தில்வேல் என்பவர், நான் தமிழக முதல்வராக இருந்தபோது தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன், அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்ற போது, எனது மகனையும் உறவினர்களையும் அழைத்து சென்றதாகவும், கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்ய சென்றதாகவும் உண்மைக்கு மாறாக, அபாண்டமாக வீண் பழி சுமத்தினார்.

கெடு வைத்த எடப்பாடி
எனது நற்பெயருக்கு களங்கத்தை விளைவித்த அந்த நெறியாளர், மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாகத்தினர் 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.. 48 மணி நேர கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து என்னாகும் என்ற எதிர்பார்ப்பு மீடியா மற்றும் தமிழக அரசியலை சூழ்ந்துள்ளது..!