சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருத்தப்பட்ட மோட்டார் வாகன மசோதா நிறைவேற்றப்பட்டால் என்ன நிகழும்?

Google Oneindia Tamil News

சென்னை: மோட்டார் வாகன சட்டத்தின் திருத்த மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது மாநிலங்களவையில் மட்டும் நிறைவேற்றப்படவேண்டும். அப்படி நிறைவேற்றப்பட்டு இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டால் என்ன நிகழும் என்பதை பார்க்கலாம்

கடந்த 2017-ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் இப்போது மீண்டும் 2019-ம் ஆண்டுக்கான மோட்டார் வாகனச் சட்டத்திருத்தமாக மக்களவையில் நீண்டநேர விவாதங்களுக்குப் பிறகு, வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியிருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், ராஜ்யசபாவில் நிராகரிக்கப்பட்டு, 16-வது லோக்சபா நிறைவுபெற்றபோது தகுதி இழந்தது.

what happens if the corrected motor vehicle bill is passed

இந்நிலையில், இந்த மசோதா மீண்டும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த மசோதா சட்டமாகி அமலுக்கு வரும் பட்சத்தில் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்படவிருக்கிறது. இந்த சட்ட திருத்தத்தின்படி, வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறும்போது அதற்கான தண்டனையாக இனி ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம், 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள் அனைத்தும் சட்டப்பிரிவு 200-ன் கீழ் கொண்டுவரப்படும். வாகன ஓட்டிகள் இழைக்கும் சிறிய தவறுகளுக்கான அபராதம் 100 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் வசூலிக்கப்படும் அபராத தொகை, ஏறக்குறைய பத்து மடங்கு அதிகரிக்கப்படும். உதாரணமாக வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டினால் வசூலிக்கப்படும் அபராத தொகை 5௦௦ ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்படும். அதுவே உரிய தகுதியின்றி வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் 500 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும், வாகனத்தை ஆபத்தான வகையில் ஓட்டினால் தற்போது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில் அது 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தற்போது கட்ட வேண்டிய அபராதம் 2 ஆயிரம் ரூபாயாக உள்ள நிலையில் இனிமேல் 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

ஓட்டுநர் உரிமம் ரத்தான பிறகு அதை மீண்டும் புதுப்பிக்க, ஓட்டுநர் புத்தாக்க பயிற்சி எடுக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட உள்ளது. அதோடு ஓட்டுநர் உரிமம் காலாவதியாவதற்கான கால அளவும், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதில் உள்ள கால அளவும் மாற்றி அமைக்கப்படுகிறது.

சீட் பெல்ட் அணியாமல் பயணித்தால் இப்போதுள்ள சட்டப்படி அபராதமாக ரூ.100 கட்டவேண்டும் அதுவே இந்த புதிய சட்ட திருத்தத்தின்படி ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெர்மிட் இல்லாத வாகனங்களை ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் தற்போது விதிக்கப்படும் நிலையில் அது இனிமேல் 10 ஆயிரம் ரூபாய் வரை உயருகிறது. இது போல வாகனங்களில் அதிக சுமை ஏற்றி சென்றால் 100 ரூபாயாக உள்ள அபராத தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்வதுடன் 3 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமத்தை ரத்தும் செய்து விடுவார்கள்.

இன்ஸ்யூரன்ஸ்

இன்ஸ்யூரன்ஸ் இல்லாமல் வண்டிகளை ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். இப்போதுள்ள நிலையில் இந்த அபராதம் ஆயிரம் ரூபாயாக உள்ளது. காப்பீட்டுப் பிரீமியம் கட்டப்படாத நிலையில், காப்பீட்டு நிறுவனம் அதற்குப் பொறுப்பேற்கத் தேவையில்லை. ஒரு விபத்து நடந்த ஆறு மாதத்துக்குள், இழப்பீடு கேட்டு வழக்கு பதிய வேண்டும். ஆறு மாதம் கடந்தால் இழப்பீடு கோர முடியாது. விபத்துக் காப்பீட்டுத் தொகை பெற்ற ஒரு நபர், வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இறந்துவிட்டால், அவரது வாரிசுகள் அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தி காப்பீடு பெறலாம்.

ஒரு வாகனத்திலோ, வாகன உதிரி பாகத்திலோ குறை இருப்பதாகக் குறிப்பட்ட எண்ணிக்கைக்கு மேலான மக்களோ, சோதனை நிறுவனங்களோ புகார் தெரிவிக்கும்பட்சத்தில், விற்பனையான அந்த வாகனத்தை அல்லது உதிரிபாகத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்ட நிறுவனத்ததுக்கு அரசு ஆணையிட முடியும்.

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனங்களை ஓட்டும் போது அவ்வாகனத்தின் உரிமையாளர் அல்லது பாதுகாவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதுடன் 3 ஆண்டு சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டியிருக்கும். அதோடு வாகனத்தை ஓட்டிய சிறுவன் மீது சிறார் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்படுவதோடு அந்த வாகனத்தின் பதிவும் ரத்து செய்யப்படும்.

விபத்துகள்

விதியை மீறி அமைக்கப்பட்ட சாலைகளால் ஒரு விபத்து ஏற்பட்டு அதனால் காயமோ மரணமோ ஏற்பட்டால், அந்தச் சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் அல்லது அதற்குப் பொறுப்பான அதிகாரி அந்த விபத்துக்குப் பொறுப்புடையவராக நடத்தப்படுவார். விபத்து ஏற்படுத்திவிட்டு, ஒருவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுவிட்டால், பாதிக்கப்பட்டவருக்கு அரசு விபத்து திட்ட நிதியிலிருந்து கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை அதிகமாக்கப்பட்டிருக்கிறது.

இதன்படி, விபத்தில் ஒருவர் மரணித்தால் இரண்டு லட்ச ரூபாயும், விபத்தில் காயம் ஏற்பட்டால், அதன் அளவைப் பொறுத்து, 12,500 முதல் 50,000 ரூபாய் வரையிலும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மோட்டார் வாகன விபத்து நிதி, உருவாக்கப்பட்டு ஒருவருக்கு விபத்து நேரும்போது உடனடித் தேவைகளுக்காக இந்த நிதியிலிருந்து பணம் வழங்கப்படும். பின்னர் அந்த வழக்கின் முடிவில், ஒருவருக்கு வழங்கப்படும் தொகையிலிருந்து இந்தத் தொகை கழித்துக் கொள்ளப்படும் .

விபத்தில் ஒருவர், தன்மீது எந்தப் பிழையும் இல்லை என்று நிரூபணம் செய்யும்பட்சத்தில், அந்த விபத்தால் மரணம் ஏற்பட்டிருந்தால் ஐந்து லட்சம் ரூபாயும், அந்த விபத்தால் கை, கால் இழப்பது உள்ளிட்ட தீவிர காயங்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாயும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையாக பெற முடியும். விபத்துக் காலத்தில், அடிபட்டவர்களுக்கு உதவி மருத்துவமனையில் அனுமதிக்கும் 'நல்ல சமாரியன்கள்' சட்ட நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் பாதுகாக்கப்படுவர்.

ஓலா, உபேர் போன்ற டாக்ஸி சேவை செய்யும் நிறுவனங்களுக்கான உரிமம் வழங்குவதும் இந்த சட்டம் மூலம் முறைப்படுத்தப்பட உள்ளது. சட்டப்பிரிவு 200-ன் கீழ் வரும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனையும் வித்தியாசமாக வழங்கப்படவுள்ளது அதாவது இப்படிப்பட்டவர்களுக்கு தண்டனையாக அவர்கள் சமூகச் சேவைப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

English summary
What happens if the corrected Motor Vehicle Bill is passed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X