சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத்தில் இதுவரை நாங்கள் சாதித்தது என்ன? தி.மு.க. எம்.பி.க்கள் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: நாடாளுமன்றத்தில் இதுவரை நாங்கள் சாதித்தது என்ன? என்பது குறித்து விளக்குவது தொடர்பாக திமுகவின் லோக்சபா எம்பிக்கள், ராஜ்யசபா எம்பிக்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

திமுக எம்பிக்கள் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டெல்லிக்குச் செல்லும் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் என்றைக்குமே தமிழக நலனுக்காகப் பாடுபடுபவதோடு - தமிழக மக்களின் பிரச்சினைகளை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஆக்கபூர்வமாக எதிரொலித்து - தங்களுக்குள்ள ஜனநாயகக் கடமையை திறம்பட நிறைவேற்றி வந்திருப்பதை பெருமிதத்துடன் பதிவு செய்ய விரும்புகிறோம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்றிருந்த போது- தமிழகத்திற்குக் கொண்டு வந்த திட்டங்கள் - தொழிற்சாலைகள் - நடைபெற்ற தகவல் தொழில் நுட்பப் புரட்சி அனைத்தும் தமிழக மக்கள் அனைவரும் அறிந்தவையே! தமிழகம், தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாக மாறியது - இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது - நெடுஞ்சாலை பணிகள் உள்ளிட்ட பெருமளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டது எல்லாமே கழகம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த 10 ஆண்டுகளில்தான் தமிழகத்தில் மிக அதிகமாக நடைபெற்றது என்றால் அதை எவரும் மறுக்க இயலாது.
திராவிட முன்னேற்ற கழகம் மத்திய அரசில் பங்கேற்ற நேரத்தில் செய்த சாதனைகளினால்தான், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையும் - பூந்தமல்லி முதல் காஞ்சிபுரம் வரையும் தொழிற்சாலைகளாக இன்றைக்கும் காட்சியளிக்கின்றன. "உற்பத்தியில் பெரிய மாநிலம் தமிழ்நாடு" என்ற பெருமை வருவதற்கு மிக முக்கியக் காரணம் மாநிலத்தில் இருந்த கழக ஆட்சியும் - கழகம் மத்தியில் பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியுமே!

என்ன செய்தோம்

என்ன செய்தோம்

மாநில உரிமை, மாநில நலன் ஆகியவற்றை மனதில் வைத்து, ஆற்றல்மிகு பணியாற்றுவதில் திராவிட முன்னேற்றக் கழகம் நிகர் இல்லாதது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் "மாநிலத்தில் ஊழல் அ.தி.மு.க.வையும் - மத்தியில் மதவெறி பா.ஜ.க.வையும்" தோற்கடித்து - தமிழக மக்களின் அமோக வரவேற்பைப் பெற்று மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம் - அனைத்துப் பிரச்சினைகளிலும் பிரதான எதிர்க்கட்சியாகவே - ஆக்கபூர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் பொறுப்புமிக்க ஜனநாயகக் கடமையின் ஓர் அங்கமாக - 2019லிருந்து திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய பணிகளை - எதிர்க்கட்சி வரிசையில் இருந்து சாதித்த சில முத்தான சாதனைகளை இக்கூட்டம் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறது.

மாநில மொழி

மாநில மொழி

புதிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழித்திட்டத்தை புகுத்தும் நோக்கில் - மூன்றாவது மொழியாக இந்தியைப் படிக்க வேண்டும் என்ற "வரைவு அறிக்கை" வெளியிடப்பட்ட 24 மணிநேரத்தில் - "மூன்றாவது மொழியாக மாநில மொழிகளில் ஒன்றையே கற்கலாம்" என்று புதிய வரைவுக் கல்விக் கொள்கையை திருத்த வைத்தது கழகம். அந்தக் கல்விக் கொள்கையைக் கூட ஆய்வு செய்ய 9 உறுப்பினர்கள் கொண்ட குழுவினை அமைத்து - அதற்கான பரிந்துரை பிரதமரிடம் கொடுக்கப்பட்டது. மாநிலங்களில் இருந்து சரண்டர் செய்யப்படும் மருத்துவக் கல்லூரிக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும், பட்டியலினத்தவருக்கும் இடஒதுக்கீட்டில் இழைக்கப்பட்ட அநீதியை வெளிக்கொண்டு வந்து - அந்த இடஒதுக்கீட்டை வழங்குகிறோம் என்று கொள்கை அளவில் - உயர்நீதிமன்றத்திலும் - உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசை ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்ததோடு மட்டுமின்றி - 2 கோடி கையெழுத்துகளைப் பெற்று குடியரசுத் தலைவரிடம் கொடுத்து இன்றுவரை அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை உருவாக்காத சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. விவசாயிகளின் நலனைக் காவு வாங்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் இரு அவைகளிலும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு - உச்சநீதிமன்றம் மூலம் அந்தச் சட்டங்களுக்குத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை வலுவாக எதிர்த்து - நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தியது - கேள்வி எதுவுமின்றி வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பரூக் அப்துல்லா போன்ற தலைவர்களின் விடுதலைக்காகப் போராடியது. "நீட்" தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டமே நடத்தி - அதை இன்றளவும் வலியுறுத்தி வருகிறது. முத்தலாக் சட்டத்தை இரு அவைகளிலும் கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்தது தி.மு.க.

தேர்தல்

தேர்தல்

ஜி.எஸ்.டி.யில் தமிழகத்திற்கான இழப்பீட்டுத் தொகையை - நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், காவிரியில் மேகதாது அணை கட்டக்கூடாது என பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தி தமிழகத்தின் கருத்தை அறியாமல் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவிக்க வைத்திருக்கிறோம். 15-ஆவது நிதி ஆணையத்தின் விசாரணை வரம்புகளால் தமிழகத்தின் நிதி உரிமை பாதிக்கப்படக் கூடாது என்று வலியுறுத்திருக்கிறோம். சட்டமன்றத்திற்கும் - நாடாளுமன்றத்திற்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறோம்.

தமிழ் மொழி

தமிழ் மொழி

எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதற்கு அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று பிரதமரையே நேரில் சந்தித்து வலியுறுத்தியிருக்கிறோம். அஞ்சல் துறைத் தேர்வுகளைத் தமிழில் நடத்த முடியாது என்ற மத்திய அரசின் முடிவை இருமுறை திரும்பப் பெற வைத்தது, தென்னக ரயில்வேயில் அதிகாரிகளுக்குள் இந்தியில் மட்டுமே கடிதப் போக்குவரத்துச் செய்துகொள்ள வேண்டும் என்பதைத் திரும்பப் பெற வைத்தது, தமிழ் செம்மொழி ஆய்வு மையத்தை மைசூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் இணைக்கும் முயற்சியையும், தமிழை காட்டிலும், சமஸ்கிருத மொழிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதை கண்டித்து அதனை கைவிட வைத்தது, இந்தி தெரியாதவர்கள் ஆலோசனைக் கூட்டத்தை விட்டு வெளியேறலாம் என்ற ஆயுஷ் செயலாளருக்குக் கண்டனம் தெரிவித்தது, பிரதமர் தலைமையில் நடைபெற்ற கோவிட்-19 தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியில் பேசியதற்கு அந்தக் காணொலிக் கருத்தரங்கில் - அதுவும் பிரதமர் முன்னிலையிலேயே கண்டனம் தெரிவித்தது, பிரதமரின் கூட்டத்திலேயே மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுக என்று கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு அவர்கள் கோரிக்கை வைக்க - அவருடையை மைக்ரோ போனை ஆப் செய்ததற்குக் கண்டனம் தெரிவித்தது - மாநிலங்களின் வருவாய் கொரோனாவால் குறைந்திருப்பதால் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலில் பிரதமரிடம் முன் வைத்தது கழகம்தான்! அதனால்தான் இன்றைக்கு மாநிலங்களுக்கு ஓரளவாவது நிதியுதவி அளிக்க மத்திய பா.ஜ.க. அரசு முன்வந்திருக்கிறது.

தமிழக மீனவர்கள்

தமிழக மீனவர்கள்


இலங்கைத் தமிழர்களுக்கான மாகாண கவுன்சில் ஒழிக்கப்படும் என்றதும் முதலில் குரல் கொடுத்தது திராவிட முன்னேற்றக் கழகம்தான். அதன் பிறகுதான் இலங்கை சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழக மீனவர்கள் விடுதலை குறித்தும் - இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு குறித்தும் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி - ஆலோசனை வழங்கி விட்டு திரும்பியிருக்கிறார் என்பதை இந்தக் கூட்டம் பதிவு செய்ய விரும்புகிறது.
இவை அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகம் - ஆளும் பா.ஜ.க.விற்கு எதிர்க் கட்சியாக இருந்து சாதித்தவை! தமிழகத்தில் இருப்பது அ.தி.மு.க. ஆட்சி - அதுவும் கிடைக்கும் நிதிகளில் ஊழல் செய்யும் ஆட்சி என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் - தமிழகத்தின் உரிமைகளுக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் அயராது போராடி வரும் தி.மு.க. எம்.பி.க்களைப் பார்த்து - அதுவும் மத்தியில் ஆளுங்கட்சியாகவே இல்லாமல் - ஆளுங்கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் சாதிக்கும் தி.மு.க. எம்.பி.க்களைப் பார்த்து தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பும் முதலமைச்சர் திரு.பழனிசாமிக்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தி.மு.க. குரல் கொடுக்கும்!

தி.மு.க. குரல் கொடுக்கும்!

மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களையும் - புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கழக உறுப்பினர்கள் வலிமையாக குரல் கொடுப்பார்கள். திரும்பப் பெறும் வரை கழக உறுப்பினர்களின் போராட்டம் நீடிக்கும். திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட எம்.ஆர்.டி.எஸ். திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட துறைமுகத் திட்டங்கள், சேதுசமுத்திரத் திட்டம் ஆகியவற்றை மத்தியில் அமைந்த பா.ஜ.க. அரசு செயல்படுத்தாமலும் - நிதி ஒதுக்காமலும் வஞ்சித்து தமிழக மக்களை புறக்கணித்து வருகிறது. "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவோம்" என்று அறிவித்து விட்டு இன்றுவரை ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை. புதிய இரயில்வே திட்டங்கள் எதுவும் தமிழகத்திற்கு பா.ஜ.க. ஆட்சியில் ஒதுக்கவில்லை. ஏற்கனவே நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களையும் நிறைவேற்றிட முன்வரவில்லை. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை நிறைவேற்ற முன்வரவில்லை. தமிழகம் சந்தித்த பேரிடர்களுக்கு உரிய பேரிடர் நிதி - கொரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த நிதி போன்றவற்றைக் கூட வழங்கிடவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டுகொள்ளவில்லை. வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றால் அதிமுக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் உறவினர்கள்மீது நடத்தப்பட்ட சோதனைகளை கிடப்பில் போட்டு இந்த நான்காண்டு காலம் அதிமுக அரசை பா.ஜ.க. ஆட்சி போல் நடத்தியதே தவிர, அந்த சோதனைகள் மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காமல் அதிமுக அமைச்சர்களையும், முதலமைச்சர் திரு பழனிச்சாமியையும் காப்பாற்றி வருகிறது. இலங்கை கடற்படை மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதலை கண்டிக்கவில்லை. சமீபத்தில் கோட்டைபட்டினம் மீனவர்களை நடுக்கடலில் கொன்ற நிகழ்விற்குகூட பிரதமர் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்குற்ற விசாரணையை இலங்கை அரசு பிசுபிசுக்க வைத்துள்ள நிலையிலும் - ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இப்பிரச்சினை எழுகின்ற நேரத்தில்கூட - மத்திய அரசு இலங்கைக்கு எதிராக கருத்து கூறாமல் மவுனம் சாதிக்கிறது. ஆகவே, இப்பிரச்சினையில் உடனே தலையிடுமாறு பிரதமருக்கு கடிதம் எழுத இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

கேலிக்கூத்து

கேலிக்கூத்து

மத்திய அரசின் நிதி ஆதாரத்திற்கு அதிக பங்களிப்புக் கொடுக்கும் தமிழகத்தின் ஜி.எஸ்.டி. வரி வசூலை வட மாநிலங்களுக்கு செலவிட்டு தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்கிறது. மாநில நிதியுரிமை, கல்வியுரிமை, இட ஒதுக்கீட்டு உரிமை, உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட அனைத்திற்கும் உலை வைப்பது போல் - கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிராக மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு செயல்பட்டு- தமிழ் மொழிக்கு துரோகம் செய்து - தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாகவும் - தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு - "இந்தி பேசும் வடமாநிலங்கள் வாழ்க. தமிழகம் போன்ற தென் மாநிலங்கள் வீழ்க" என்று அனைத்து மாநிலத்திற்கும் பொதுவாக இருக்கும் பிரதமரும் - அவர் தலைமையிலான மத்திய பா,ஜ.க. அரசும் செயல்படுவது கவலையளிக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதியைக் கூட பறித்து - பாராளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக்கி இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுகக்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. பாராளுமன்ற மரபுகளை, ஜனநாயகத்தை, மாநில உரிமைகளை- நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதச்சார்பின்மை, சமூக நீதி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் மத்திய பா.ஜ.க.வின் திட்டமிட்ட அத்துமீறல்களில் இருந்து பாதுகாத்திடவும் - தமிழகத்தின் உரிமைகளை, தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாத்திடவும், தொடர்ந்து பாராளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள் என்று இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

English summary
What have we achieved so far in Parliament? DMK Lok Sabha MPs and Rajya Sabha MPs have given explanations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X