சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணாத்த டூ அப்பல்லோ.. ஹைதராபாத்தில் நடந்தது என்ன? "திடீரென" ரஜினி யூ-டர்ன் ஏன்? பரபர காரணம்

Google Oneindia Tamil News

சென்னை: தனது உடல்நிலை பற்றி நன்கு தெரிந்து இருந்தும், அரசியலுக்கு வருவதாக அறிவித்தார் ரஜினிகாந்த். ஆனால், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதற்கான பின்னணி காரணம் என்ன என்பது பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

1996 ஆம் ஆண்டில் கருணாநிதி, மூப்பனார் போன்ற பெரிய தலைவர்கள் வலியுறுத்தியும் கூட அரசியலுக்கு வராமல் தவிர்த்தவர் ரஜினிகாந்த்.

தனது படங்கள் பரபரப்பாக பேசப்பட மற்றும் அதிக ரசிகர்களை சென்று சேர்வதற்கு அரசியல் டயலாக்குகளை பேசி உசுப்பேற்றி உள்ளாரே தவிர அரசியலுக்கு வந்து, மதிப்பை கெடுத்துக் கொள்ள கூடாது என்ற விஷயத்தில் அப்பவே ரொம்பவே தெளிவாக இருந்தவர் அவர்.

ராஜ்குமார் பாணி

ராஜ்குமார் பாணி

மக்கள் மத்தியில் நன்கு ரீச் கிடைத்த பிறகும்.. ரசிகர்கள் அவரை நடிகரிலிருந்து, தலைவராக ஏற்றுக் கொண்ட பிறகும் அரசியலுக்கு வருவது இல்லை என்பதில் மட்டும் தெளிவாக இருந்தார் ரஜினி. தமிழகத்தில் ரஜினி எப்படியோ அதைவிடவும் கன்னட மக்களால் அதிகம் மதித்து, கடவுள் அந்தஸ்தில் வைத்து பார்க்கப்பட்டவர் நடிகர் ராஜ்குமார். ஆனால் அவரும் அனைத்து கட்சி தலைவர்களுடனும் அனுசரித்து சென்றாரே தவிர, கட்சி துவங்கவில்லை. எந்த கட்சிக்கும் ஆதரவாக வாய்ஸ் கொடுத்ததும் கிடையாது. பொதுமக்கள் சார்ந்த பிரச்சினைகளில் அவர் குரல் கொடுத்துள்ளார் அந்த குரலுக்கு எந்த கட்சி ஆட்சியாக இருந்தாலும் மதிப்பு கொடுத்து பிரச்சனைகளை தீர்த்து வைத்தன. இதன் காரணமாக மக்கள் மத்தியில் மேலும் மேலும், அவர் மீது நன்மதிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. ராஜ்குமார் உடல்நலக்குறைவால் இறந்தபோது அவரது ரசிகர்கள் மிகப்பெரிய வன்முறையை நடத்தினர். சில ரசிகர்கள் மாரடைப்பால் பலியாகினர். அந்த அளவுக்கு அவர் மீது பற்று வைக்கக் காரணம் அவர் அரசியலிலிருந்து விலகி இருந்ததுதான்.

ரஜினிக்கு அதிகரித்த அழுத்தம்

ரஜினிக்கு அதிகரித்த அழுத்தம்

ரஜினிகாந்தும் அதைப்போல ஒரு நன்மதிப்பு கொண்ட பிம்பமாக இருந்துவிட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் கடந்த சில வருடங்களாகத்தான் அரசியலுக்கு அவரை கொண்டு வந்துவிடவேண்டும் என்ற ஒரு அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. வாக்குகளை சிதறடிப்பது, முடிந்தால், திராவிட கட்சிகளை தோற்கடிப்பது ஆகியவற்றுக்கு இப்போதைக்கு ரஜினிகாந்த் என்ற ஆளுமையை விட்டால் வேறு வழி இல்லை என்பதால்தான் அவரை அரசியலுக்குக் கொண்டு வருவதற்கு தீவிர அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முந்தைய கால கட்டங்களிலும் அரசியலுக்கு வருமாறு அவரை பலரும் கேட்டுக் கொண்டாலும், அது அன்பு கோரிக்கையாக இருந்தது. இந்த முறை அழுத்தம் என்ற அளவுக்கு மாறிப் போனது. இதனால் தான் அரசியலுக்கு வருவதாக அரைகுறை மனதுடன் ரஜினிகாந்த் ஒப்புக் கொண்டார் என்கிறார்கள்.

விருப்பம் இல்லாத அறிவிப்பு

விருப்பம் இல்லாத அறிவிப்பு

ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். கொரோனா நோய் பரவிய காலத்தில் அவர் அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது என்று சமூக வலைத்தளத்தில் ஒரு அறிக்கை பரவியது. இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் இருக்கும் அம்சங்கள் உண்மைதான் என்றும், ஆனால் தான் வெளியிடவில்லை என்றும் தெரிவித்தார். எனவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரசிகர்கள் ஓரளவுக்கு மனதை தேற்ற தொடங்கி விட்டனர். ஆனால் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அழுத்தம் பல முனைகளில் இருந்தும் அவருக்கு சென்றுள்ளது. எனவே வேறு வழியில்லாமல் டிசம்பர் 3ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து அரசியலுக்கு வருவது உறுதி என்றும், டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி அறிவிப்பு பற்றியும், ஜனவரி மாதம் கட்சி துவங்குவேன் என்றும் தெரிவித்தார்.

பதவியை கேட்டு அறிந்த ரஜினி

பதவியை கேட்டு அறிந்த ரஜினி

அந்த செய்தியாளர் சந்திப்பை உன்னிப்பாக பார்த்தவர்கள் ஒரு விஷயத்தை கவனித்தார்கள். கட்சி மேலாளர் என்று தமிழருவி மணியனை அறிமுகம் செய்தார் ரஜினி. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று பாஜகவில் இருந்து பிரிந்து வந்த அர்ஜுன மூர்த்தி என்பவரை அறிவித்தார். ஆனால் செய்தியாளர்களிடம் அதைச் சொல்லும் முன்பாக, "உங்கள் பதவி என்ன" என்று அர்ஜுன மூர்த்தியிடம், ரஜினிகாந்த் கேட்டார். இது அங்கே வைக்கப்பட்டு இருந்த மைக்குகளில் பதிவாகி, ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

விருப்பம் இல்லாமல் கட்சியா?

விருப்பம் இல்லாமல் கட்சியா?

ரஜினிகாந்த் ஒரு கட்சி நிர்வாகியை நியமனம் செய்கிறார். ஆனால் என்ன பதவி என்பது அவருக்கே தெரியவில்லை என்றால் இதன் பின்னணி என்ன? இதில் ரஜினிகாந்துக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை என்பதுதானே பொருள் என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்தன. இந்த நிலையில்தான் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொள்ள ஹைதராபாத் சென்றார். அங்குதான் திருப்புமுனை ஏற்பட்டது.

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம்

இந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்று கூறப்பட்டது. அப்போது சிலர் இப்போது சூட்டிங் செல்வது சரியல்ல என்று எச்சரிக்கை செய்தனர். ஆனால் படக்குழுவில் சிலருக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் ரஜினி. அங்கு அவரது ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பதாக கூறப்பட்டது.

ஓய்வு கட்டாயம்

ஓய்வு கட்டாயம்

மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அம்சங்கள் மிகவும் முக்கியமானது. ரஜினிகாந்த் டென்ஷன் ஆக கூடாது. ஓய்வு தேவை என்று அதில் வரிகள் இடம் பெற்றிருந்தன. இதுதவிர ரஜினியிடமும், அவர் குடும்பத்திடமும், ரஜினிக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால், எப்படியான ஓய்வில் அவர் இருக்க வேண்டும் என்ற அவசியத்தை புட்டு புட்டு வைத்துள்ளனர் டாக்டர்கள்.

உடல்நிலை

உடல்நிலை

அண்ணாத்த படப்பிடிப்பில் ஏற்பட்ட உடல் நிலை மாற்றம், அப்பல்லோ மருத்துவமனை கொடுத்த அறிக்கை.. இது இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் தீவிர அரசியலுக்கு வந்தால் ரஜினிகாந்த் உடல் நிலையில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதியாகத் தெரிந்து விட்டது. எனவே, மருத்துவர்கள் சொன்ன இந்த தகவலை சொல்லி தனக்கு நெருக்கமானவர்களை சமாதானப்படுத்தி, "அப்பாடா" என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் ரஜினிகாந்த் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். மருத்துவர்கள் வார்னிங் கொடுத்துவிட்டார்கள் என்பதால், இதற்குமேல் ரஜினியை வற்புறுத்த வேண்டாம் என்று அவரை சுற்றியுள்ள 'முதல்கட்ட நபர்கள்' முடிவு செய்துவிட்டனர்.

அதிரடி அறிக்கை

அதிரடி அறிக்கை

ஆனாலும் அவர் அரசியலுக்கு வரவேண்டுமென்று விரும்பியவர்கள் திட்டமிட்டபடி 31ஆம் தேதி கட்சியை தொடங்குவார். ட்விட்டரில் அறிவிப்பு வெளியிடுவார் என்று செய்திகளை ஊடகங்களுக்கு கசிய விட்டனர். பொறுத்துப் பார்த்த ரஜினிகாந்த், இதற்கு மேலும் பொறுமையாக இருந்தால், ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து விடுவார்கள் என்பதால் அதிரடி அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார். இதனால் அழுத்தம் கொடுத்தவர்கள் அனைவரும் பெரிய அதிர்ச்சியில் உள்ளனர். மாற்றிப் பேசிவிட்டார் ரஜினி என்று பொருமத் தொடங்கியுள்ளனர்.

ஹைதராபாத் சம்பவம்

ஹைதராபாத் சம்பவம்

விருப்பமில்லாத ஒன்றை செய்யப்போனதால் ஏற்பட்ட மன உளைச்சலால்தான் ரத்த அழுத்தத்தில் ரஜினிக்கு மாறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எது எப்படியோ.., கெட்டதிலும் ஒரு நல்லது என்பதைப் போல, அண்ணாத்த ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற ஒரு மாற்றம், ரஜினிகாந்த், தான் ஆசைப்படியே வாழ்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். புத்தருக்கு போதி மரம் போல, ரஜினிகாந்துக்கு ஹைதராபாத் என்று சொன்னால் அது மிகையல்ல.

English summary
Why actor Rajinikanth changed his political decision after went to Hyderabad? here is the background story.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X