அதிமுகவுக்கு சசிகலா தலைமையேற்றால்.. டிடிவி தினகரனின் நிலைப்பாடு என்ன?.. பரபரக்கும் யூகங்கள்
சென்னை: அதிமுகவை சசிகலா தலைமையேற்றால் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவை கைப்பற்றும் முடிவில் சசிகலா மிகவும் தீர்க்கமாக இருந்து வருகிறார். இதற்கு அதிமுகவின் ஆணிவேர்கள் என கருதப்படுவோருக்கு தூதுவிடும் படலம் நடைபெறுவதாகவும் தெரிகிறது.
எல்லாம் கனிந்தால் சசிகலா அதிமுகவுக்கு தலைமை தாங்கினால் டிடிவி தினகரன் தனது சித்தியுடன் இணைந்து பயணிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டவுடன் அவர் சிறைக்கு செல்ல நேரிட்டது.
அந்த 3 பேரை தவிர மற்ற MP-க்களுக்கு என்னாச்சு? மிக்சர் சாப்பிட்டு டீ குடிக்க ஒரு கூட்டம்!

புதிய பதவி
அச்சமயத்தில் அதிமுக துணை பொதுச் செயலாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி அதில் டிடிவி தினகரனை அமர வைத்துவிட்டு சென்றார். இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கு, ஹவாலா மோசடி என தினகரனின் பெயர் அடிபட்டது. இதையடுத்து ஆர் கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து அதிமுகவை மீட்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் அமைப்பை டிடிவி தினகரன் தொடங்கினார். தற்போது வரை அந்த அரசியல் அமைப்பிலேயே பயணித்து வருகிறார். இந்த நிலையில் சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் அவருடன் இணைந்து அதிமுகவை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.

சட்டசபை தேர்தல்
மேலும் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அரசியலிலிருந்து விலகுகிறேன் என சசிகலா அறிவித்திருந்தது, டிடிவி தினகரனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அவர் அவ்வாறு அறிவிக்க வேண்டாம் என சொல்லியும் சசிகலா அறிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சி இழப்புக்கு பின்னர் அதிமுகவை கைப்பற்றும் முயற்சிகளில் காய் நகர்த்தி வருகிறார் சசிகலா. ஒரு வேளை தனது ஆட்டத்தில் சசிகலா வென்று அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டால் டிடிவி தினகரன் அதிமுகவில் இணைய மாட்டார் என்றே தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கு காரணம் டிடிவி தினகரன் பாஜகவை பகைத்து கொள்ள விரும்பவில்லை என கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை
தன் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தினகரன் அதிமுகவுடனும் சசிகலாவுடனும் செல்ல மாட்டார் என்றும் அவர் பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவு தருவார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் காற்று வாக்கில் வந்து சேர்கின்றன. மேலும் கடந்த தேர்தலிலேயே பாஜகவுடன் அமமுக கூட்டணிக்கு செல்ல பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அப்போது அதிமுக கூட்டணியில் இருந்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக- பாஜக கூட்டணி நீடிக்குமா
அண்மைக்காலமாக அதிமுகவுடன் பாஜக மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது. 100 நாள் வேலை திட்டத்தில் அதிமுக அரசு ஊழல், அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னேறுவதாக மக்கள் கருதுகிறார்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து உள்ளிட்டவைகளால் அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஒரு வேளை இந்த கூட்டணி முறிந்தால் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தல்களில் பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைக்க வாய்ப்புகள் நிறைய உள்ளன.

சசிகலாவுக்கு அழைப்பில்லை
ஏற்கெனவே அமமுக செயற்குழு கூட்டத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்த போது இந்த கூட்டத்திற்கு சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கவில்லையா என கேட்கப்பட்டது. அதற்கு இது அமமுகவின் செயற்குழு கூட்டம், அவர் அதிமுகவின் பொதுச் செயலாளர், அவரை எப்படி அழைக்க முடியும்?. கட்சியை தாண்டி சித்தி என்ற முறையில் அவருடன் இணக்கமாகவே இருக்கிறோம் என்று தினகரன் தெரிவித்திருந்தார். எனவே சசிகலாவே அதிமுகவை தலைமை தாங்கினாலும் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை அதை எதிர்த்துக் கொண்டு அதிமுகவுடன் தினகரன் கூட்டணி வைக்க மாட்டார் என்றே தெரிகிறது. மேலும் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் தினகரனுக்கு இருக்கும் செல்வாக்கை வரும் தேர்தல்களில் பயன்படுத்த பாஜக முயற்சிக்கும் என்பதால் தமிழகத்தில் அதிமுக, திமுகவை தவிர்த்து மக்கள் செல்வாக்கு உள்ள கட்சி அமமுக என்பதால் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜக தயங்காது என்றே தெரிகிறது.