சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிங்கிள் டிக், டபுள் டிக், புளூ டிக்.. நுங்கெடுக்கும் டெக்கிகள்.. வருத்தப்படாத வாட்ஸ் அப் சங்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: வாழ்க்கைன்னா ஆயிரம் இருக்கும்... இந்த டயலாக்கை நீங்க அடிக்கடி கேட்டிருப்பீங்க. இதே டயலாக் வாட்ஸ் அப் குரூப்புகளுக்கும் பொருந்தும்.

இன்னைக்கு ஸ்மார்ட் ஃபோன் வெச்சிருக்கிற எல்லோருமே வாட்ஸ் அப் இல்லாம இருக்கிறதுல்ல. உயிர் வாழ ஆக்சிஜன் தேவைன்ற மாதிரி, ஆன்லைனில் ஆக்டிவா இருக்க வாட்ஸ் அப் அவசியம்னு ஆயிடுச்சி. ஏன்னா பலருக்கு இன்னைக்கு ஆன்லைன் செய்தித்தாள் முதல் புரளி பேசுற டீக்கடை வரை வாட்ஸ் அப் தான் எல்லாமே. ஒரு வகையில அறிவை வளர்க்கிற இந்த வாட்ஸ் அப், பல வகையிலும் வம்புதும்புகளையும் இழுத்துவிட்டுறுதுன்றது தான் இப்ப மேட்டரே.

வாட்ஸ் அப் வம்புகளில் அதிக அதிரடி சரவெடிகள் நடப்பது குரூப்புகளில்தான். இப்பல்லாம் நீங்கள் புதிதாக ஒரு அலுவலகத்தில் சேர்ந்தால், உங்களை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்த அடுத்த நிமிடம், அவர்களின் வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்துவிடுகிறார்கள். அங்கேதான் அலுவலகத்தின் உண்மையான முகம் மெல்ல தெரியவரும். டீம் லீடு ஒரு மொக்கை கடி ஜோக்கை ஃபார்வர்ட் செய்தாலும், கண்ணீர் சிந்த சிரிப்பது, உருண்டு பிரண்டு சிரிப்பது என பல்வேறு சிரிப்பு எமோஜிகளையும், ஜிஃப்களையும் போட்டிபோட்டு போஸ்ட் செய்கிறார்கள் என்றால் இன்க்ரிமெண்ட் லிஸ்ட் தயாராகிறது என்று அர்த்தம். அதுவே இன்க்ரிமெண்ட் எல்லாம் முடிந்து, எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றால், அந்த ஜோக் சீந்துவாரின்றி தேமே என தனியாக நின்று கொண்டிருக்கும். குரூப்பே மயான அமைதியாகிவிடும்.

வணங்கி வாழ்த்துகிறோம்

வணங்கி வாழ்த்துகிறோம்

அதேபோல யார் யாருக்கு நெருக்கம் என்பதை பிறந்தநாள் சமயங்களில் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அன்னாருக்கு பிறந்தநாள், அவரை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் ரேஞ்சுக்கு முதல் போஸ்ட்டை போடுபவர், அந்த அன்னாருக்கு நெருக்கமான மன்னார் என்று புரிந்துகொள்ள வேண்டும். அவரின் அடியொற்றி அடுத்தடுத்து பூங்கொத்துகள், பீர் பாட்டில்கள், கேக்குகள் போன்ற இன்னபிற எமோஜிகளை அதிகம் களமிறக்கி கலக்குபவர்கள் அன்னாரின் அருமை நண்பர்கள் என்பது விளங்கிவிடும். பேருக்கு நானும் வாழ்த்து சொன்னேன் என போஸ்ட் போடுபவர்களை பிறந்தநாள் கொண்டாடும் அன்னார் மனதில் குறித்து வைத்துக் கொள்வார். சொல்லிப் புரிவது பாதி, சொல்லாமல் புரிவது மீதி என்ற விதி இங்கு அப்படியே பொருந்தும்.

முத்தண்ணாக்கள் சங்கமம்

முத்தண்ணாக்கள் சங்கமம்

சில முன்கோப முத்தண்ணாக்கள் இருக்கிறார்கள். குரூப்பில் ஏதாவது சண்டை ஆரம்பித்தால், ஹார்ஷா நாலுவார்த்தை திட்டிட்டு, அடுத்தவன் திட்ரதுக்கு முன்னாடி குரூப்பை விட்டு வெளியேறிவிடுவார்கள். சட்டசபையில் வெளிநடப்பு செய்யும் எதிர்கட்சித் தலைவர் வெளியில் வந்து பத்திரிகையாளர்களிடம் ஏன் வெளிநடப்பு செய்தோம் என்று விளக்குவார். அதைப் போல, வேறு ஒரு குரூப்பில் போய் அந்த குரூப்பில் இருந்து நான் ஏன் வெளியேறினேன் என்று மூச்சுபிடிக்க விளக்கிக் கொண்டிருப்பார். அப்புறம் நாலு பேர் சேர்ந்து அவரை சமாதானம் செய்து, கோவிச்சுகிட்டு வந்த புதுப்பெண்ணை மீண்டும் மாமியார் வீட்டிற்கு அனுப்புவது போல மீண்டும் அந்த கலவர குரூப்பிற்குள் சேர்த்துவிடுவார்கள்.

நீ யார்

நீ யார்

உன் நண்பன் யார் என்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்னு ஒரு அர்த்த பழசான ஸ்டேட்மெண்ட் இருக்கு இல்லியா, அது வாட்ஸ் அப்புக்கும் பொருந்தும். நீங்கள் அலுவலகத்தில் எந்த குரூப்பில் இருக்கிறீர்கள் என்று சொன்னால், உங்களின் அடுத்தகட்ட வளர்ச்சி வாய்ப்புகளை எளிதில் புட்டுபுட்டு வைத்துவிடலாம். வர்ணாஸ்ரம தர்மம் மாதிரி, அலுவலகத்தில் பல கட்ட நிலைகளுக்கு ஏற்ப வாட்ஸ் அப் குரூப்புகள் இருக்கின்றன. அனைவருக்குமான குரூப், உயரதிகாரிகளுக்கான குரூப், முக்கிய முடிவுகளை எடுக்கும் கோர் குரூப்... இப்படி நிறைய இருக்கு. இதில் நீங்கள் எதில் சேர்த்துக் கொள்ளப்படுகிறீர்கள் அல்லது எதில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறீர்கள் என்பதை கவனிப்பது மிக மிக முக்கியம்.

குடும்ப குரூப்புகள்

குடும்ப குரூப்புகள்

அலுவலகத்தில் தான் இப்படி ஆயிரம் அட்டகாசம், வீட்டிலாவது நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தால், அதற்கும் குடும்ப குரூப்புகள் குண்டு வைத்துவிடுகின்றன. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் சேர்ந்து குரூப் ஆரம்பித்துவிட்டார்கள். இதிலும் அம்மா சைட் குரூப், அப்பா சைட் குரூப் என்று இரண்டு அணிகள் இருக்கின்றன. எங்க வீட்டில் பெரிய மாமா ஒருவர் இருக்கிறார். குடும்பத்தில் இருக்கும் நண்டு, சிண்டு எல்லாரையும் இப்படி குரூப்பில் சேர்த்து, சதா கதாகாலட்சேபம் பண்ணிக் கொண்டிருப்பார்.

மாமாக்கள் அத்தைகள்

மாமாக்கள் அத்தைகள்

திடீரென்று நம்ம பார்த்தசாரதிக்கு வர்ர 10ஆம் தேதி சதாபிஷேகம், யாரெல்லாம் வரீங்க, எப்படி வரீங்க என்று ஆட்டத்தை ஆரம்பித்துவைப்பார். அப்புறம் மாமிகள், அத்தைகள் எல்லாம் உள்ளே பூந்து டூர் பிளான் போடுறேன் என்று மெகா சைசில் சந்து புள்ளி கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள். எங்க பெரிய பாட்டி ஒன்னு இருக்கு. டெக்னாலஜி நன்கு தெரிந்த வெரி டெக்கி பாட்டி. ஏன்டா, மாமா போட்ட மெசேஜ் இன்ஃபோல போய் பார்த்தா, இத்தனை பேருக்கு டெலிவரி ஆகியிருக்கு, இத்தனை பேர் படிச்சிருக்கா, ஆனா இரண்டு பேர்தான் ரிப்ளை பண்ணியிருக்கா.. ரேஞ்சுக்கு டேடா அனாலிசிஸ் பண்ணக்கூடிய பாட்டி. சிங்கிள் டிக், டபுள் டிக், புளூ டிக் என்று நுணுக்கமாக பார்த்து நம்மை நுங்கெடுத்துவிடுவார்கள்.

அதையும் தாண்டி தேவையானது

அதையும் தாண்டி தேவையானது

என் நண்பர் ஒருத்தர் ஒரு ஆன்மீக வாட்ஸ் அப் குரூப் நடத்துறார். மனுஷன் பயங்கர ஸ்ட்ரிக்ட். யாரையாவது சேர்க்கிறதுக்கு முன்னாடி, அவங்களோட ஆதார் கார்ட், பான் கார்ட், ரேஷன் கார்ட் உள்பட எல்லாத்தையும் கேட்டு பாடாய்படுத்திவிட்டுதான் சேர்ப்பார். அவர் பண்ற அலப்பறையை பார்த்தால் ஏதோ ராணுவத்துக்கு ஆள் எடுக்கிற மாதிரி பில்டப் கொடுப்பார். சேர்த்ததுக்கு அப்புறம் பெரிய கண்டீஷன் லிஸ்ட் ஒன்றை போஸ்ட் பண்ணுவார். ராத்திரி 10 மணிக்கு மேல போஸ்ட் போடக் கூடாது, உறுதி செய்யாத தகவலை பகிரக் கூடாது, வீண் விவாதம் பண்ணக் கூடாது என்று நவீன ஆத்திசூடி மாதிரி ஒன் லைனரா இருக்கும். அட இவ்வளவு டார்ச்சரை தாண்டி அப்படி ஒரு குரூப்புல ஏன் இருக்கணும்னு நீங்க கேட்கிறது புரியுது. அவருக்கு வேலை வெட்டி எதுவும் கிடையாது. ரிடையர் ஆகி வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நல்ல தமிழ் ஆர்வலர். அதனால பழைய சங்கப் பாடல்கள் எல்லாம் தேடி எடுத்து, அதுக்கு எளிமையான உரையையும் தேடி போஸ்ட் பண்ணுவார். இந்த மாதிரி சில நல்ல விஷயங்கள் கிடைக்குதேன்னு என்னை மாதிரி நிறைய பேர் அவர் இம்சையை பொறுத்துகிட்டு அந்த குரூப்புல இருக்கிறோம்.

வச்சு செஞ்சாங்க

வச்சு செஞ்சாங்க

வாட்ஸ் அப்பில் பொதுவாக எல்லோருக்கும் அடிக்கடி நடக்கும் அபாயகரமான விபத்து என்றால் அது தெரியாமல் குரூப் மாறி போஸ்ட் போட்டுவிடுவது. என் ஃபிரண்ட் ஒருத்தன் நண்பர்களோட பாண்டிச்சேரி போன போட்டோக்களை போதையில் குரூப் மாறி, குடும்ப குரூப்பில் போட்டுவிட்டான். வீட்டிற்கு வந்த பிறகு, அவனை ஒரு வாரம் தெளிய வைத்து தெளிய வைத்து அடித்துக் கொண்டிருந்தார்கள். அதேபோல அடுத்த ஆபத்து, முக்கியமான மெசேஜுக்கு ரிப்ளை பண்ண மறந்துவிடுவது. அதிலும் குறிப்பாக அது காதலி அல்லது மனைவியின் மெசேஜாக இருந்தால் நீங்கள் செத்தீர்கள். மொத்தத்தில் இந்த வாட்ஸ் அப்பை வெச்சி மல்லு கட்டுறது உண்மையிலேயே மிகவும் சவாலான விஷயம்தான். இதுக்கு இடையில் தேவையில்லாத ஃபார்ட்வர்ட் மெசேஜுகள், அரசியல் கட்சிகளின் பொய்ப் பிரசாரங்கள், கலாய் மீம்ஸ்கள், ஹெல்த் டிப்ஸ்கள், மோட்டிமேஷன் போஸ்டர்கள் என்று வாட்ஸ் அப் ஒரு வண்ணமயமான உலகம். அதில் நல்லது, கெட்டது என அனைத்தும் நிறைந்திருக்கும். நாம தான் சூதானமா பார்த்து நடந்துக்கணும்.

- கௌதம்

English summary
The menace and atrocities of Whats App grouos galore all over the world, but still we like this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X