காந்தி கண்ணாடி! கதர் சட்டை! ரிசர்வ் வங்கியில் ரூ 4809 கோடி கடன் கேட்ட தமிழர்.. யாருங்க இவரு? பின்னணி
சென்னை: சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையில் தமிழர் ஒருவர் ரூ 4809 கோடி கடன் கேட்டுள்ளார். இதற்காக மனுவோடு வந்த அவரை பார்த்து ஆர்பிஐ நிர்வாகிகள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.
குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி முடியும் நிலையில், இந்த வருடம் ஜூலை மாதம் 18ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
ஜூலை 21ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அதேபோல் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார்.

என்ன நடக்கும்?
எப்போது குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தாலும் விளம்பரத்திற்காக, பிரபலத்திற்காக சில குடிமகன்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவது வழக்கம். வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்றாலும், குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திய குடிமகன்கள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பதால் பலர் இதற்கு மனு தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த யோகா ரமேஷ் என்பவர் இந்த முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

குடியரசுத் தலைவர்
மேற்கு பால்பட்டியில் ரமேஷ் யோகா பயிற்சி அளித்து வருகிறார். ஏற்கனவே இவர் சட்டசபை தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிட்டு உள்ளார். ஆனால் எந்த தேர்தலிலும் இவர் வென்றது இல்லை. காந்தியின் கொள்கையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். காந்தியின் கொள்கையை பின்பற்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதால் தேர்தலில் போட்டியிடுவதாக ரமேஷ் பலமுறை கூறி இருக்கிறார்.

காசு
பார்க்க அப்படியே ஸ்கூல் பையன் சுதந்திர தினத்திற்கு காந்தி வேஷம் போட்டது போலவே ரமேஷ் காட்சி அளிக்கிறார். பெரிய வட்டமான கண்ணாடி, கதர் ஆடை, காந்தி வைத்து இருந்தது போலவே கம்பு என்று இவர் அப்படியே லோ பட்ஜெட் காந்தி போலவே இருக்கிறார். ஆனால் காந்தியின் கொள்கைக்கு எதிராக.. இவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் முயன்றார். ஆம் கடந்த சட்டசபை தேர்தலில் நாமக்கல்லில் போட்டியிட்டவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றார்.

பணம் தர முயன்றார்
இதற்கு ரமேஷ் செய்த காரியம்தான் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதன்படி.. நேராக தனியார் வங்கி ஒன்றுக்கு சென்று.. இந்த பாருங்க தேர்தலில் செலவு செய்ய காசு இல்லை. எனக்கு ஒரு 50 கோடி ரூபாய் கொடுங்க. கடனாதான். ஜெயிச்சதும் திருப்பி கொடுக்கிறேன். இந்த காசை வைத்துதான் மக்களுக்கு பணம் கொடுக்க முடியும் என்று மிகவும் சீரியசாக காமெடி செய்து இருக்கிறார்.

எத்தனை கோடி
அப்போது 50 கோடி கேட்டவர்.. இப்போது ரிசர்வ் வங்கிக்கு சென்று 4,809 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளார். கேட்டா 4 ஆயிரம் கோடி கேட்கலாம். 5000 கோடி கூட கேட்கலாம். அது என்ன 4,809 கோடி என்று தெரியவில்லை. ரிசர்வ் வங்கி மேலாளரிடம் மனுவை கொடுத்து.. எனக்கு தேர்தல் செலவு செய்ய பணம் வேண்டும். எம்பிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் எனக்கு வாக்கு அளிப்பார்கள். ஒவ்வொரு எம்பிக்கும் 100 கோடி ரூபாய் கொடுக்க போகிறேன் என்று திகில் கிளப்பி இருக்கிறார்.

ரமேஷ் திகில்
அதனால் அப்படியே 4,809 கோடியை என் கணக்கிற்கு அனுப்புங்கள் என்று திகிலாக பேசி இருக்கிறார் ரமேஷ். இதை கேட்டு.. காமெடி பண்ணாம போங்க பாஸ் என்று வங்கி அதிகாரிகள் சொல்ல. நான் சீரியஸா பேசுறேன் என்று பதில் அளித்துள்ளார் ரமேஷ். போறீங்களா.. போலீசை கூப்பிடவா என்று ரிசர்வ் வங்கி நிர்வாகிகள் மிரட்ட.. நீங்க அதெல்லாம் கூப்பிட்டுக்கோங்க.. என் மனுவை மட்டும் வாங்கி வையுங்கள் என்று சொன்னதும் நிர்வாகிகள் அவரின் மனுவை வாங்கி வைத்தனர். அதிலும் இந்த கடனை அவர் தள்ளுபடி கடனாக கேட்டதுதான் ரிசர்வ் வங்கி ஊழியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது!