பிரதமர் மோடிக்கே டஃப் கொடுத்த இவர் யார் தெரியுமா..? - ஆனா இந்த ஒரு இடத்துல சறுக்கிட்டாரே..!
சென்னை : பிரதமர் மோடி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரயில்வே துறையின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பின்னர் இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, திருக்குறள், பாரதியார் பாடல் எனக் குறிப்பிட்டுப் பேசியதோடு, தமிழ்நாட்டின் பெருமைகளையும் பேசி கவனம் ஈர்த்தார்.
மோடியைப் போலவே அவரது பேச்சை மொழிபெயர்த்தவரும் பலரது பாராட்டுகளைப் பெற்றார். அழுத்தம் திருத்தமாக, கம்பீரமாக மோடியின் பேச்சை தமிழில் மொழிபெயர்த்த அவர் பெயர் சுதர்சன்.
கருணாநிதியின் கம்பீர சிலை - எவ்வளவு செலவு? தயாரித்தது யார்? எப்படி? நீங்கள் அறியாத டாப் 10 தகவல்

பிரதமர் மோடி பேச்சு
தமிழகம் வந்த பிரதமர் மோடி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தனது உரையைத் தொடங்கினார். இந்தப் பேச்சில், தமிழ்நாட்டின் பெருமைகள் குறித்து அதிகமாகப் பேசிய மோடி, தமிழ்நாட்டின் மக்கள், கலாச்சாரம், மொழி என அனைத்துமே மிகச் சிறப்பானவை என உரையாற்றினார்.

மொழிபெயர்ப்பாளர்
இந்த விழாவில் பிரதமர் மோடியின் பேச்சை மொழிபெயர்த்து தமிழில் சொன்னவர், ஏற்ற இறக்கங்களோடு ஆக்ரோஷமாக பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பிரதமர் மோடியின் பேச்சை இறுதிவரை மோடியின் பாணியிலேயே அழுத்தம் திருத்தமாக மொழிபெயர்த்து, பாஜக நிர்வாகிகளின் பாராட்டையும் பெற்றுள்ளார் அந்த மொழிபெயர்ப்பாளர். இதையடுத்து, அவர் யார் என நெட்டிசன்கள் தேடத் துவங்கினர்.

சுதர்ஸன்
பிரதமர் மோடியின் அன்றைய உரையை தமிழில் மொழிபெயர்த்தவர் சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுதர்சன் ஆவார். இவர்தான் பிரதமர் மோடி மாதந்தோறும் வானொலிகளில் பேசும் 'மன் கி பாத்' உரையை 'மனதின் குரல்' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து வழங்கி வருபவர்.

மன் கி பாத் - மோடியின் குரல்
மோடியின் மனதின் குரலை மொழிபெயர்த்துப் பேசியதால் பரவலாக கவனம் பெற்ற சுதர்சன், 2020ல் பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா சென்னை வரும்போது, அவரது உரையை மொழிபெயர்த்துப் பேச அழைத்துள்ளனர். அதில் சிறப்பாகச் செயல்பட்டதால் பிரதமர் மோடியின் தமிழக வருகையின் போதெல்லாம் மொழிபெயர்ப்பாளராக இருந்து வருகிறார்.

3 முறை
கடந்த 2021ஆம் ஆண்டு நேரு ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியிலும், கோவை கொடிசியா அரங்கில் நடந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடியின் உரையை மொழிபெயர்த்துப் பேசியுள்ளார் சுதர்ஸன். அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் மோடியின் பேச்சை மொழிபெயர்த்துப் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

கலங்கரை விளக்கம்
சுதர்சன் பிரதமர் மோடியின் பேச்சை ஏற்ற இறக்கங்களோடு, எல்லோரும் ரசிக்கும் வகையில் மொழிபெயர்த்துச் சொல்லியிருந்தாலும், ஒரு இடத்தில் சறுக்கினார். light house project என பிரதமர் மோடி பேசியதை 'இலகுவான வீடுகள்' என மொழிபெயர்க்காமல் கலங்கரை விளக்க வீடுகள் என மொழிபெயர்த்துச் சொன்னார் சுதர்சன். இதனை சமூக வலைதளங்களில் சிலர் சுட்டிக் காட்டியிருந்தனர்.

மொழிபெயர்ப்பு சிக்கல்
முன்னதாக, மத்திய அமைச்சர் அமித்ஷா சொட்டு நீர் பாசனம் குறித்து பேசியதை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சிறுநீர் பாசனம் என்று மொழிபெயர்த்து, சமூக வலைதளங்களில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானார். அதேபோல, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்த தங்கபாலுவும் நெட்டிசன்களின் கடுமையான கிண்டல்களை எதிர்கொண்டார். அந்தவகையில், சுதர்சனின் இந்த மொழிபெயர்ப்பு நன்றாகவே இருந்ததாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.