பிரியங்கா காந்தி முதல்... விஜய் வசந்த் வரை.. களைக்கட்டும் கன்னியாகுமரி இடைத்தேர்தல் விருப்ப மனு
சென்னை: கன்னியாகுமரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விஜய் வசந்த் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என கார்த்தி சிதம்பரம் விருப்ப மனு அளித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வசந்தகுமார். கடந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக இவர் உயிரிழந்தார்.
ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தலுடன் காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஏப்ரல் 6 தேதி வாக்குப்பகுதியும், மே 2 வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளன.

விருப்ப மனு
வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் குறைவான தொகுதிகளையே திமுக ஒதுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவும் கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சிக்குச் செல்வாக்கு உள்ளதாலும், இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி களமிறங்குவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. கன்னியாகுமரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

விஜய் வசந்த் விருப்ப மனு
அதன்படி நேற்று வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கன்னியாகுமரி என்றும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இருந்துள்ளது. இம்முறையும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும். தந்தையின் கனவை ஒரு மகனாக நிறைவேற்ற வேண்டும் என்பதால் விருப்ப மனு அளித்துள்ளேன். காங்கிரஸ் கட்சி எனக்குப் போட்டியிட வாய்ப்பு அளிக்கும் என நம்புகிறேன்" என்றார்.

பிரிங்கா காந்தி போட்டியிட வேண்டும்
மறுபுறம் சிவகங்கை தொகுதியின் எம்பியும் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என விருப்ப மனு அளித்துள்ளார். கன்னியாகுமரியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டால், அது வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

துணிச்சலான முடிவு தேவை
முன்னதாக, கடந்தாண்டு நவம்பர் மாதமே பிரியங்கா காந்தி சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தி இருந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில், "துணிச்சலான முடிவு தேவை. காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தும் விதமாகக் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்ககந்தி போட்டியிட வேண்டும். இது அவருக்கும் கட்சிக்கும் கூட்டணிக்கும் மிகப் பெரிய வெற்றியாக இருக்கும்" என்று பதிவிட்டிருந்தார்.