தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி! டெல்லியில் எடுபடாத லாபி! ஏமாற்றத்தில் முக்கியப் புள்ளிகள்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான ரேஸில் ஜூனியர்களுக்கு சவால் விடும் வகையில் சில சீனியர்களும் இருக்கிறார்களாம்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட சீனியர்கள் சிலர் டெல்லியில் ஒருவாரமாக முகாமிட்டு தலைவர் பதவியில் அமருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்களாம்.
தமிழகத்தில் கொரோனா தீவிரம் - ஐசியூ நோயாளிகள், ஆக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு
இதனிடையே திருச்சி எம்.பியான திருநாவுக்கரசரும் மீண்டும் ஒரு ரவுண்டு வர திட்டமிட்டு தலைவர் பதவியை தனக்கு கொடுக்குமாறு டெல்லியில் லாபியை தொடங்கியிருக்கிறாராம்.

தமிழக காங்கிரஸ்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதையொட்டி அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பும், விவாதமும் காங்கிரஸார் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், விஜயதரணி, செல்வப் பெருந்தகை, மயூரா ஜெயக்குமார் ஆகியோர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான போட்டியில் ஜூனியர்கள் பிரிவில் முன்னணி வகிக்கிறார்கள். இவர்களை தவிர நாசே ராமச்சந்திரன், ரூபி மனோகரன், திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட சீனியர்களும் ரேஸில் இருக்கிறார்கள்.

திருநாவுக்கரசர்
இதில் நாசே ராமச்சந்திரனும், ரூபி மனோகரனும் ஒரு வாரத்திற்கும் மேலாக டெல்லியில் முகாமிட்டு தனிதனியாக லாபி செய்து காய் நகர்த்தி பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதால் ஊருக்கு திரும்பிவிட்டார்களாம். அதேவேளையில் திருநாவுக்கரசர் மீண்டும் தன்னை தலைவராக்க வேண்டும் என மேலிடத்துக்கு டிமாண்ட் வைக்கத் தொடங்கியிருக்கிறாராம். தேர்தலுக்கு அப்பாற்பட்டு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வளர்த்தெடுப்பேன் என அவர் உறுதிகூறி வருகிறாராம்.

டெல்லி மேலிடம்
தலைவர் பதவிக்கான பந்தயத்தில் ஜெயிக்கப்போவது சீனியர்களா இல்லை ஜூனியர்களா என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியினரையே எழுந்துள்ளது. இவர்களை தவிர இரண்டு மாதத்திற்கு முன்பு வரை தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்த செல்லக்குமார் எம்.பி. அண்மையில் செய்துகொண்ட அறுவைச் சிகிச்சை காரணமாக அமைதியாகிவிட்டாராம்.

கே.ஆர்.ராமசாமி
இதனிடையே நமக்கு கிடைத்த தகவலின் படி காங்கிரஸ் பொதுச்செயலாளரும், ராகுல்காந்தியின் நிழலாகவும் திகழும் கே.சி.வேணுகோபாலின் குட்புக்கில் கே.ஆர்.ராமசாமி முதலிடம் வகிப்பதாகவும் இதனால் அவருக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு மாற்றங்கள் நிகழலாம் எனத் தெரிகிறது.