மதுப்பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பது ஏன்.. எடப்பாடி பழனிசாமிக்கு, டாஸ்மாக் பணியாளர் சங்கம் பதில்
சென்னை: 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பேரில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணங்களில் பேசும் போது, டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்து நான்கு ஆண்டுகளில் திமுக ரூ.22,000 கோடியை கொள்ளை அடித்துள்ளதாக குற்றம்சாட்டி வருகிறார். இந்த குற்றச்சாட்டை பல ஊர்களில் கூறி வருகிறார். இந்நிலையில் அண்மையில் ஒரு பிரச்சார கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 'டாஸ்மாக்' முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்படும் என்று உறுதி தெரிவித்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்துக்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு 'டாஸ்மாக்' பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் நா.பெரியசாமி, பொதுச்செயலாளர் டி.தனசேகரன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
அந்த அறிக்கையில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கூறுகையில், "தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 'டாஸ்மாக்' முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்படும், என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிழாமி ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார். பத்து ரூபாய் என்றாலே அது அ.தி.மு.க. ஆட்சியின் அடையாளம் என்பது அனைவரும் அறிந்ததே. அ.தி.மு.க. ஆட்சியில் தான் முறைகேடுகள் களையப்படவில்லை.
தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, எங்கள் சங்கத்தின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு முறைகேடுகள் தடுக்கப்பட்டிருக்கிறது. படிப்படியான மதுவிலக்குக் கொள்கை மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் காரணமாக மூடப்பட்ட கடைகள் எண்ணிக்கைகளையும் மறந்துவிட்டு, மக்களுக்கு தவறான தகவலை பரப்பும் எடப்பாடி பழனிசாமியின் மலிவான அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி காலிப்பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்த 'டாஸ்மாக்' நிர்வாகம் உறுதியளித்திருக்கிறது. இதன்படி மதுக்கடைகளில் மது விற்பனையின் போது, மதுப்பாட்டிலுக்கு தலா ரூ.10 கூடுதலாக வசூலித்து, அந்த மதுப்பாட்டில் திரும்ப வரும் போது, வசூலிக்கப்பட்ட ரூ.10-ஐ, மது நுகர்வோருக்கு திரும்ப வழங்கி வருவதையும் எடப்பாடி பழனிசாமி மூடிமறைத்து பேசுவது, பணியாளர்களை அவமதிக்கும் செயலாகும். எனவே 'டாஸ்மாக்' பணியாளர்கள் மீது அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் டாஸ்மாக் பணியாளர் சங்கம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications