சோகமாக திரும்பும் ஓபிஎஸ்.. ‘அதற்கு’ முயற்சி எடுக்காத பாஜக புள்ளிகள்.. பின்னணியில் ‘மெகா’ சதி?
சென்னை : டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டும், அவர் சந்திக்க மறுத்ததால், சோகமாகச் சென்னை திரும்புகிறார்.
பிரதமர் மோடி உடன் ஓ.பி.எஸ்ஸை சந்திக்க வைப்பதற்கு பாஜகவின் முக்கிய புள்ளிகள் முயற்சி எடுக்காததற்கு சில முக்கியமான காரணங்கள் கூறப்படுகின்றன.
12 டூ 7.. அதுவும் வெறும் 3 மணி நேரத்தில்.. வெலவெலத்து போன ஓபிஎஸ்.. லபக்கென பிடித்த எடப்பாடி! போச்சே!
அந்தக் காரணங்களால்தான், அதிமுகவை குழப்பங்களோடும், ஓ.பி.எஸ் தரப்பை தற்போது பலவீனமான நிலையிலும் வைத்திருக்க பா.ஜ.க திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு
பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையேயான மோதல் வெளிப்படையாகவே நடந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டனர். மேலும், முக்கிய நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினர்களும் பெரும்பான்மையாக எடப்பாடி பழனிசாமி பக்கமே இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் அடுத்தகட்ட திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறார்.

எதிர்பார்ப்பு
அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த கட்டமாக என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் பக்கமே இருப்பதால் அவரே அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்புக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, ஓபிஎஸ் வகித்து வரும் ஒருங்கிணைப்பாளர் பதவியும் எல்லாது என எடப்பாடி தரப்பினர் கட்டையைப் போட்டுள்ளதால் அதற்கு எதிரான சட்டப்பூர்வ முயற்சிகள் குறித்தும் ஆலோசித்து வருகிறார் ஓ.பி.எஸ்.

டெல்லி பயணம்
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார், மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.பி கோபாலகிருஷணன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றனர். பா.ஜ.க. கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்பு வேட்புமனு தாக்கல் நிகழ்வுக்காகச் சென்றதாக கூறப்பட்டாலும், ஓ.பி.எஸ் கணக்கு வேறாக இருந்தது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.

சந்திக்க மறுத்த மோடி
டெல்லியில் பிரதமர் மோடியை சந்திப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருந்தார். ஆனால், காலதாமதம் செய்துகொண்டே இருந்து ஒருகட்டத்தில் பிரதமர் நேரம் ஒதுக்க முடியவில்லை எனக் கூறியுள்ளனர். பா.ஜகவின் முக்கிய புள்ளிகள் மூலமாகவும் ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் பிரதமரை நேரில் சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படவில்லை. அ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்சினை தீவிரமாக இருக்கும் இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசுவதற்கு பிரதமர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகின்றன.

சோகமாக திரும்பும் ஓபிஎஸ்
ஒற்றைத் தலைமை பிரச்சனையை தீர்ப்பதற்காக பல்வேறு திட்டங்களுடன் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை தனியாகச் சந்திக்க முடியாததால் சோகமாக சென்னை திரும்புகிறார். இது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும் உற்சாகம் அளித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம் தோல்வி அடைந்ததற்குப் பின்னணியில் சில காரணங்கள் கூறப்படுகின்றன.

பிரதமர் மோடி கோபம்
அதிருப்தியால் பிரிந்து சென்ற நிலையில், 2017ல் எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து, துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் பிரதமர் மோடிதான் என ஓ.பி.எஸ் அண்மையில் சொன்னது பாஜக தலைவர்கள் மூலம் பிரதமர் மோடியின் காதுக்குச் சென்றுள்ளது. இதனால் ஓபிஎஸ் மீது அவர் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். அதுவும் ஓபிஎஸ் உடனான தனிப்பட்ட சந்திப்பைத் தவிர்க்க ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

தமிழக பாஜக
அதுமட்டுமல்லாமல், தமிழக பாஜகவும், அதிமுக வலுவோடு செயல்பட விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை எதிர்க்கட்சியாகச் செயல்படுவது யார் என்பது தொடர்பாக அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல்கள் நிகழ்ந்தன. அப்போது, பாஜகவை கூட்டணியில் இருந்தே கழற்றிவிட அதிமுக திட்டமிடுவதாகவும் பேச்சு அடிபட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கூட்டணியில் சிக்கல் ஒன்றும் இல்லை என்று கூறி இருதரப்பினரும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

குழப்பங்கள் நீடிக்கட்டும்
ஆனாலும், பாஜகவின் வளர்ச்சியைக் கண்டு அதிமுக பதறுகிறது என்பதை பாஜக தலைவர்கள் கவனித்துள்ளனர். இதனால், அக்கட்சியில் தற்போது நிலவி வரும் குழப்பங்களையும், ஒற்றைத் தலைமை மோதல்களையும் பாஜக தலைவர்கள் ரசிப்பதாகவே கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தக் குழப்பங்கள் தீர அவர்கள் விரும்பவில்லை என்றும், அதனால்தான் பிரதமர் மோடி உடன் ஓ.பி.எஸ் சந்திப்பதற்கு தமிழக பாஜகவோ, மேலிடத் தலைவர்களோ முயற்சி எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இன்னொரு திட்டம்
ஓ.பி.எஸ் அதிமுகவில் வலுவான இடத்தைப் பிடிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தால் அவர் நிச்சயம் சசிகலாவை நாடுவார். அவர் மூலம் உதவிகள் கிடைக்காவிட்டால் அவர் பாஜகவை அணுகவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை அப்படி அணுகும் பட்சத்தில், அவரை கட்சியில் சேர்ப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தலாம். அவரது ஆதரவாளர்கள், சமூக ரீதியாக உள்ள ஆதரவு பாஜகவுக்கு நிச்சயமாக பெரிய பலத்தைக் கொடுக்கும் என்றும் பாஜகவினர் திட்டமிட்டுள்ளனராம். இதனாலும், ஓபிஎஸ்ஸை தற்போதைய சூழலில் பலவீனத்தோடே வைத்திருக்க பாஜக விரும்புகிறது என்கிறார்கள் விவவரமறிந்த வட்டாரத்தினர்.