ஓஹோ இதுதான் விஷயமா.. சசிகலா ரிலீஸ் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு ஏன்? எடப்பாடியார் 'ராஜதந்திரம்'
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை ஜனவரி 27-ஆம் தேதி, அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட, மெரினா கடற்கரையில் திறந்து வைக்க உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

அதே நாளில் தான்.. சொத்துக் குவிப்பு வழக்கிற்காக 4 வருடம் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா ரிலீஸ் செய்யப் படுகிறார்.
ஜனவரி 27ம் தேதிதான் சசிகலா ரிலீஸ் செய்யப்படுவார் என்பது முன்கூட்டியே தெரிந்த தகவல். அப்படி இருந்தும், அன்றைய தினத்தில் ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி பழனிச்சாமி திறப்பதற்கு முடிவு செய்துள்ளதன் பின்னணியில் ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

ஓப்பன் கருத்து
இது பற்றி சில அரசியல் விமர்சகர்களிடம் நாம் பேசினோம். அவர்கள் சொன்ன கருத்தின் தொகுப்புதான் இது: சசிகலா சிறையில் இருந்து ரிலீசாகி வந்து சில மாதங்களில் தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே கோகுல இந்திரா போன்றவர்கள் வெளிப்படையாக சசிகலாவுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். அவர் ரிலீஸ் ஆகி வெளியே வந்த பிறகு பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்துவார். அப்போது மேலும் பலரும் அவருக்கு ஆதரவாக பேசக்கூடும்.

மக்கள் மனநிலை
தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். உடைந்து கிடக்கும் அதிமுகவுக்கு ஓட்டு போடுவதை விட எதிரணிக்கு ஓட்டு போடுவது சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். ஒருவேளை சசிகலாவுடன் இணைந்து செயல்படலாம் என்றால், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடர முடியாது. எனவே சசிகலா அதிமுகவுடன் இணையக் கூடாது. அதிமுகவிலிருந்து, அவருக்கு ஆதரவு குரல்கள் ஒலிக்க கூடாது என்ற இரண்டு முக்கிய பொறுப்புகள் எடப்பாடி பழனிச்சாமி தலைமீது இருக்கிறது.

நேரடி அட்டாக்
இந்த நிலையில்தான், முதல் முறையாக சசிகலா பற்றி நேரடியாக அட்டாக் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது, சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் கிடையாது என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இதன் மூலம் தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் என்ற மெசேஜை கடைக்கோடி தொண்டன் வரை கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

தலைமை தைரியம்
தலைமை பொறுப்பில் இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் சசிகலா பற்றி எதுவும் வெளிப்படையாக பேசாமல் இருந்தால் தொண்டர்களுக்கும் அந்த சஞ்சலம் இருக்கும். இப்போது முதல்வர் நேரடியாக திட்டவட்டமாக சசிகலாவுக்கு எதிராகக் கருத்து கூறி விட்டதால் தலைமை ஒரு முடிவோடுதான் இருக்கிறது என்ற உத்வேகம் தொண்டர்களுக்கு கிடைத்து இருக்கும். எனவே தான், முதல்முறையாக இப்போது சசிகலா பற்றி அவர் பேசியுள்ளார்.

சசிகலா மீது கவனம்
சசிகலா 27ஆம் தேதி சிறையில் இருந்து வெளியாகும் போது மீடியாக்களின் முழு கவனமும் அதன் மீது இருக்கும். அதிமுக தொண்டர்களில் சிலர் கூட வரவேற்பு கொடுப்பதற்கு அங்கு செல்லக்கூடும். இந்த இரண்டையும் தடுக்க வேண்டும் என்றால் ஜெயலலிதா நினைவிடம் திறக்கும் விழாவை அதே நாளில் ஏற்பாடு செய்வதே அருமையான யோசனையாக இருக்கும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்று கூறப்படுகிறது. மீடியாக்கள் முழு கவனமும் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா மீது இருக்கும். தங்கள் தரப்பு தலைவர்கள் பேசக்கூடிய பேச்சுக்களும், ஜெயலலிதா பற்றிய உருக்கமான தகவல்களும், மக்கள் மத்தியில் சென்று சேரும். சசிகலாவுக்கு முக்கியத்துவம் கிடைக்காது என்று முதல்வர் தரப்பில் நினைக்கிறாராம்.

ஜெயலலிதா வாரிசுகள்
தொண்டர்கள் கவனத்தை ஜெயலலிதா பக்கம் திருப்பி ஜெயலலிதாவின் வாரிசுகள் நாங்கள்தான் சசிகலா கிடையாது என்று மெசேஜ் சொல்ல, நினைவிட திறப்பு விழா பயன்படும். அந்த வகையில் ஒரே கல்லில் பல மாங்காய் அடிப்பதற்கான முயற்சிதான், முதல்வரிடம் இருப்பதாக கூறப்படுகிறது, என்கிறார்கள் அந்த அரசியல் பார்வையாளர்கள்.