அவசரமாக.. டெல்லிக்கே பறந்த ப.சி.. ஆஹா "அவரையே" போய் பார்த்துட்டாரே.. திகைத்து நின்ற சோனியா!
சென்னை: காங்கிரஸ் கட்சிக்குள் பெரிய அளவில் பரபரப்புகள், உட்கட்சி மோதல்கள் நிலவி வரும் நிலையில்தான் நேற்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை மூத்த எம்பி முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் டெல்லியில் சந்தித்து இருக்கிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவரான கபில் சிபல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார். கடந்த மே 16ம் தேதியே காங்கிரசில் இருந்து நான் விலகிவிட்டேன் என்று அவர் அறிவித்துள்ளார்.
அதோடு ராஜ்ய சபா தேர்தலுக்கு சுயேச்சை வேட்பாளராக இவர் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவோடு போட்டியிடுகிறார்.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயார்..காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட 3 குழுக்கள் அமைத்த சோனியா

எம்பி கபில் சிபல்
இப்போது உத்தர பிரதேசத்தில் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களே உள்ளதால் மீண்டும் கபில் சிபல் காங்கிரசில் எம்பியாக முடியாது. இந்த நிலையில் காங்கிரசில் இருந்து வெளியேறி, சுயேட்சையாக, சமாஜ்வாதி ஆதரவுடன் கபில் சிபல் எம்பி ஆகிறார்.ஜி 23 குழுவில் இருந்து என்னதான் எதிர்ப்பு தெரிவித்தாலும்.. எம்பி பதவிக்காகத்தான் இவர் காங்கிரசில் இருந்து வெளியேறிவிட்டதாக காங்கிரஸ் நிர்வாகிகள் குமுறி வருகிறார்கள்.

விலகல் ஏன்?
இந்த நிலையில்தான் இன்னொரு மூத்த தலைவரும் காங்கிரசில் எம்பி பதவிக்கு தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஒரு ராஜ்ய சபா எம்பி பதவியை பெற உள்ளது. ஜூலையில் தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 6 ராஜ்யசபா இடங்களுக்கும் தேர்தல் நடக்கவிருக்கிறது. சட்டமன்றத்தில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக 4 இடங்களையும் அதிமுக 2 இடங்களையும் எளிதாக கைப்பற்றும்.

காங்கிரஸ் ஒரு இடம்
இதில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு திமுக மூலம் வழங்கப்பட்டுள்ள நிலையில்.. அந்த வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் திணறி வருகிறது. மியூசிக் சேரில் கடைசி ரவுண்டில் ஒரு சேருக்கு இரண்டு பேர் போட்டியிடுவார்கள். இதற்கான மோதல் சுவாரசியமாக நடக்கும். ஆனால் காங்கிரசில் இப்போது ஒரே ஒரு செருக்கு 4-5 பேர் போட்டியிடுகிறார்கள்.

யாருக்கு இடையில் போட்டி
காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சுதர்சன நாச்சியப்பன், விஸ்வநாதன் ஆகியோர் ஒரு பக்கம் எம்பி பதவிக்கு காய் நகர்த்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதால் தற்போது தலைவராக உள்ள கே.எஸ். அழகிரி தனக்கு எம்பி பதவி கொடுங்கள் என்று கேட்டு வருகிறாராம். இப்படி எம்பி பதவிக்கு ஆசைப்படும் நபர்கள் குறித்த லிஸ்டை மாநில பொறுப்பாளர் குண்டுராவ் சோனியா காந்திக்கு அனுப்பி இருக்கிறாராம்.

சந்திப்பு
இந்த நிலையில்தான் நேற்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை மூத்த எம்பி முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் டெல்லியில் சந்தித்து இருக்கிறார். எப்படியாவது தமிழ்நாட்டில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்வாகிவிட வேண்டும் என்பதில் ப. சிதம்பரம் குறியாக இருக்கிறார். இவர் தற்போது மகாராஷ்டிராவில் ராஜ்ய சபாவிற்கு தேர்வாகி உள்ளார். ஆனால் அவரின் பதவிக்காலம் முடிய உள்ளதால், மீண்டும் தேர்வாக திட்டமிட்டு இருக்கிறார்.

ப. சிதம்பரம் முயற்சி
இந்த நிலையில்தான் ப. சிதம்பரம் நேரடியாக நேற்று சோனியாவை சந்தித்து இருக்கிறார். சோனியாவிடம் எம்பி பதவி கேட்டு இவர் காய் நகர்த்தியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட உதய்பூர் கூட்டம் நடைபெற்றது. 1 வாரத்திற்கு முன் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரசில் இனி ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பதவி என்று முடிவு செய்யப்பட்டது. தற்போது கார்த்தி சிதம்பரம் எம்பியாக இருக்கிறார்.

புதிய விதி
இதனால் புதிய விதிப்படி ப. சிதம்பரம் எம்பி ஆக முடியாது. இதனால் எப்படியாவது எம்பி ஆக வேண்டும் என்று ப. சிதம்பரம் முயன்று வருவதாகவும், அதற்காக டெல்லியில் சோனியாவிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது. ப. சிதம்பரம் தனியாக வசிக்கிறார்.. அவர் குடும்பம் தனி.. என் குடும்பம் தனி என்று ப. சி தரப்பு வாதம் வைத்ததாக கூறப்படுகிறது. கபில் சிபல் இப்போதுதான் எம்பி பதவி இல்லை என்று ராஜினாமா செய்தார்.