"கேட்டுச்சா".. ஸ்டாலின் ஏன் கட்டிப்பிடித்தார் தெரியுமா.. திருமாவளவன் என்ன இப்படி சொல்லிட்டாரே?
சென்னை: பேரறிவாளன் விடுதலை குறித்தும், முதல்வர் ஸ்டாலின் அவரை ஆரத்தழுவி வரவேற்றது குறித்தும் விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனை, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் விடுவித்தது.. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினை பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.
அதேபோல, எடப்பாடி பழனிசாமியையும் பேரறிவாளன் சந்தித்தார்.. வைகோ உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் பேரறிவாளன் சந்தித்து பேசினார்..
பேரறிவாளன் இப்போது வீட்டில் என்ன செய்கிறார் ? தாயார் அற்புதம்மாள் போட்டுடைத்த தகவல்!

கட்டியணைத்த முதல்வர்
ஆனால், முதல்வருடனான சந்திப்பின்போது, பேரறிவாளன் முதுகில் தட்டிக் கொடுத்துள்ளார் ஸ்டாலின்... இது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.. பேரறிவாளன் விடுதலையாலும் முதல்வர் ஸ்டாலின் அவரை அரவணைத்ததாலும் காங்கிரஸார் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் வாயில் துணியைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்... இதனால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு மிகப்பெரிய சிக்கலையும் தர்மசங்கடத்தையும் இது ஏற்படுத்தி வருகிறது.

அண்ணாமலை
இந்த படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகை குஷ்பு, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? முதுகெலும்பற்றவர்களின் செயலாகவே காங்கிரசின் நடவடிக்கை இருக்கிறது என்று கேட்டிருந்தார்.. அதேபோல, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோரும் ஸ்டாலினின் நடவடிக்கையை விமர்சித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.

புத்தர் சிலை
இப்படி நாலாபக்கமிருந்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்விகளும், விமர்சனமும் எழுந்து கொண்டே இருந்தாலும், திமுக தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும், காரணமும், விளக்கமும் தரப்படவில்லை.. இந்நிலையில்தான் நேற்றைய தினம் பேரறிவாளன் திருமாவளவனை சந்தித்தார்.. அப்போது பேரறிவாளனுக்கு திருமாவளவன், புத்தர் சிலையை நினைவு பரிசாக வழங்கினார்... இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை குறித்து திருமாவளவன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆரத்தழுவியது ஏன்?
அப்போது, "பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றதை பலரும் கண்டித்து வருகின்றனரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு திருமாவளவன், "உச்சநீதிமன்றமே அவரை விடுதலை செய்துள்ளது அதனால்தான் முதல்வர் அவரை ஆரத்தழுவி வரவேற்றார்" என்றார்.. உடனே செய்தியாளர்கள், நீதிமன்றத்தில் அவரை நிரபராதி என குறிப்பிடவில்லையே என்று மறுபடியும் கேள்வி எழுப்பினர்.

நீதிபதி சொல்லவில்லையே
அதற்கு திருமாவளவன், "அவர் குற்றவாளி என்றும் நீதிபதி தெரிவிக்கவில்லையே.. அதனால், அதை நாம் நிரபராதி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.. அரசியல் காரணம் சொல்லி நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்யவில்லை.. சட்டப்படி விடுதலை செய்துள்ளதால் பேரறிவாளன் குற்றமற்றவர்" என்றார்... திருமாவளவனின் இந்த பேச்சு சோஷியல் மீடியாவில் விவாதத்தை துவக்கி உள்ளது.

கொந்தளிப்பு
நேற்றைய தினம் பேட்டியின்போதும் திருமாவளவன் பேசும்போது, "பேரறிவாளன் விடுதலை பெற்றுள்ளது மன நிம்மதியை அளிக்கிறது... கட்சி, மொழி என எந்தப் பாகுபாடும் இல்லாமல் பேரறிவாளன் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கும் இந்தக் குற்றத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என விசாரிக்கும் போதே தெரிய வந்தது" என்று கூறியிருந்தார்.. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி கொந்தளித்து போயுள்ள நிலையில், திருமாவின் இந்த கருத்தை கதர் கட்சி எப்படி எதிர்கொள்ள போகிறது? என்ன சொல்ல போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!