மனிதர்களுக்கு உயிரே போய்விடும்! ஆனா பறவைகள் மின் கம்பிகளில் அமரும்போது.. எதுவும் ஆவதில்லையே ஏன்?
சென்னை: நாம் வெளியே செல்லும்போது பறவைகள் மின்சார ஒயர்களில் உட்கார்ந்து இருப்பதை நாம் பார்த்திருப்போம். அதிக மின்சாரம் வரும் அந்த ஒயர்கள் பட்டால் மனிதர்களுக்கு ஷாக் அடித்து உயிரே போகும். ஆனால், இந்த பறவைகளுக்கு மட்டும் எதுவுமே நடப்பதில்லை.. அது எப்படி என என்றாவது யோசித்து இருக்கிறார்களா? இதற்கான விடையை நாம் பார்க்கலாம்.
பறவைகள் ஹை-வால்டேஜ் மின்சாரம் பாயும் கம்பிகளைத் தொட்டாலும் கூட அதற்கு எதுவும் ஆகாது. மனிதர்கள் இதுபோல மின்சாரம் பாயும் ஒயரை தெரியாமல் தொட்டால் கூட விளைவுகள் மிக மோசமாக இருக்கும். ஆனால், பறவைகளுக்கு மட்டும் அது ஏன் வித்தியாசமாக இருக்கிறது? இதற்கான விடையைத் தெரிந்து கொள்ள நாம் முதலில் மின்சாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மின்சாரம்
மின்சாரம் கம்பிகள் வழியாகப் பாய்கிறது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் குழாய்களில் நீர் பாய்வது போல மின்சாரம் கம்பிகளில் பாய்கிறது.. அது உயர் மின்னழுத்தத்திலிருந்து குறைந்த மின்னழுத்தத்திற்கு நகரும். மின்சாரம் பாய்வதற்கு ஒரு முழுமையான பாதை தேவை. அதாவது ஒரு இடத்தில் இருந்து தோன்றி, கம்பிகள் வழியாகச் சென்று தேவையான இடத்தை அடையும்.
பொதுவாக மின்சாரம் ஜீரோ மின்னழுத்தம் கொண்ட தரையை நோக்கியே பாயும். இதனால் எதாவது ஒரு பொருள் கம்பியையும், தரையையும் ஒரே நேரத்தில் தொட்டால், மின்சாரம் அந்த பொருள் வழியாகத் தரையை அடைய முயலும், இது ஆபத்தானது.
பறவைகள்
ஒரு பறவை கம்பியில் அமரும்போது, அதன் இரண்டு கால்களும் ஒரே கம்பியில் இருக்கும். இதனால் அதன் உடல் கம்பியின் அதே மின்னழுத்தத்தில் இருக்கும். அதன் உடல் முழுவதும் மின்னழுத்த வேறுபாடு இல்லாததால், மின்சாரம் அதன் வழியாகப் பாயாது. மின்சாரம் பாயாததால் ஷாக் அடிக்காது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்.. பறவையும் அந்த கம்பியின் ஒரு பகுதியாக மாறுகிறது. அந்த வழியாக மின்சாரம் பாயாது.
பறவைகள் ஒரே ஒரு கம்பியில் அமரும்போது பாதுகாப்பாக இருக்கும். ஏனெனில் அவற்றின் உடல் முழுவதும் மின்னழுத்த வேறுபாடு இருக்காது. ஆனால் ஒரு பறவை ஒரே நேரத்தில் இரண்டு கம்பிகளைத் தொடும்போது நிலைமை மாறுகிறது. உதாரணமாக, வெவ்வேறு மின்னழுத்தங்கள் கொண்ட இரண்டு கம்பிகளைத் தொடும்போது ஷாக் அடிக்கும்! அப்போது பறவைகளாலும் கூட தப்ப முடியாது.
ஆபத்தானதாக மாறும்!
அதாவது இது போன்ற சந்தர்ப்பங்களில் உடல் இரு வெவ்வேறு மின் அழுத்தம் கொண்டவற்றைத் தொடும். பொதுவாகவே மின்சாரம் உயர் மின்னழுத்தத்திலிருந்து குறைந்த மின்னழுத்தம் அல்லது தரைக்குப் பாயும். நடுவில் பறவையின் உடல் அல்லது மனித உடல் இருந்தால் அதை மின்சாரம் ஒரு பாதையாகவே பயன்படுத்திக் கொள்ளும். அந்த உடல் வழியாக மின்சாரம் பாயும். அப்போது தான் ஷாக் அடிக்கும். மின் கம்பிகள் நல்ல இடைவெளிவிட்டு உயரமாக நிலைநிறுத்தப்பட இதுவே காரணம். பறவைகளும், மனிதர்களும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கம்பிகளைத் தவறுதலாகத் தொடுவதை இது தடுக்கும்.
மனிதர்களுக்கு ரிஸ்க் அதிகம்
இதுபோன்ற மின்சாரக் கம்பிகளில் பறவைகளை விட மனிதர்களுக்கு ரிஸ்க் அதிகம். பறவைகள் இரு ஒயர்களையும் ஒரே நேரத்தில் தொட்டால் தான் சிக்கல். ஆனால், மனிதர்களின் கால்கள் தரையில் தான் இருக்கிறது. அதாவது மனிதர்கள் தரையுடன் தொடர்பில் இருக்கிறார்கள். ஒரு நபர் தரையில் இருக்கும்போது கம்பியைத் தொட்டால், அது மின்சாரம் பாய்வதற்கு ஒரு பாதையை உருவாக்குகிறது. அதனால்தான் மின் கம்பிகளை தொடும்போது நமக்கு ஷாக் அடிக்கிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பறவைகளோ.. மனிதர்களை ஒரே நேரத்தில் இரு வேறு மின் அழுத்தம் கொண்டவற்றைத் தொடக்கூடாது. அதுவே மேட்டர்!












Click it and Unblock the Notifications