பட்டென போட்டு உடைத்த ரஜினி.. வீடு தேடி சந்தித்த குருமூர்த்தி.. திடீர் திருப்பம்.. பரபர பின்னணி!
சென்னை: அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்ற ரீதியில் ரஜினி திடீரென போட்ட ட்வீட் தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தீவிர ஆர்எஸ்எஸ் பிரமுகரான துக்ளக் நாளிதழ் ஆசிரியர் குருமூர்த்தி சென்னை போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னணி என்ன என்ற கேள்வி எழுகிறது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி இன்று நேரில் சந்தித்து பேசினார். ரஜினியுடன் 2 மணி நேரத்திறகு மேலாக முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினி பெயரில் அண்மையில் போலியான கடிதம் வெளியானது. அந்த கடிதத்தில் தனது அரசியல் பிரவேசம் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்ட போது ,கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்" என்று கூறியதாக கூறப்பட்டிருந்தது.
சென்னை போயஸ் கார்டனில் ரஜினியை திடீரென சந்தித்த குருமூர்த்தி.. 2 மணி நேரதிற்கு மேலாக பரபர மீட்டிங்!

அரசியல் நிலைப்பாடு
இதற்கு பதில்அளித்த ரஜினி காந்த் கடிதம் போலி என்றாலும் கடிதத்தில் உள்ள மருத்துவர்கள் சொன்ன தகவல் உண்மை என்று கூறி அதிரவைத்தார். இதுபற்றி தனது ட்விட்டரில், "என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அது என்னுடைய அறிக்கை இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல் நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்" என்று கூறினார்

ரஜினி அதிரடி அறிவிப்பு
வயதையும், உடல் நிலையையும் கருத்தில் கொண்டு ரஜினி அரசியலுக்கு வருவதில் இருந்து விலகிவிட்டதை உணர்த்தவே இப்படி ஒரு ட்விட்டை அவர் வெளியிட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தால் அதன் மூலம் தமிழகத்தில் வலுவான இடத்தை பிடிக்க முடியும் என்று நம்பிக்கொண்டிருந்த பாஜகவுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறினார்கள்.

என்ன பேசினார்கள்
இந்த சூழலில் ரஜினி அரசியலுக்கு வந்தால் பெரிய மாற்றம் வரும் என்று கூறிவந்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இன்று மாலை திடீரென சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசினார். 2 மணிநேரம் நடந்த இந்த சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் அரசியலுக்கு வர வேண்டும் ரசிகர்கள் வைத்த கோரிக்கையை போல் குருமூர்த்தியும் கோரிக்கை வைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று பல வருடங்களாக குரல் கொடுத்து வருபவர் குருமூர்த்தி.

சந்திப்பின் பின்னணி?
ஏற்கனவே ஒருமுறை சந்தித்து அரசியல் மற்றும் ரஜினியின் உடல் நலம் குறித்து குருமூர்த்தி விசாரித்துள்ளார். இப்போதைய சந்திப்பில் ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு அப்படியே அவருடைய அரசியல் ஆதரவு யாருக்கு, அவருடைய அரசியல் பார்வைகள குறித்தும் குருமூர்த்தி விசாரித்து இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ரஜினி விரைவில் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பார் என கூறப்படுகிறது. அவருடை நிலைப்பாடு பாஜகவுக்கு சாதமாக இருக்குமா அல்லது ஏமாற்றமாக இருக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.