மெரீனாவை தோண்டி பார்த்தால்.. அதிர்ச்சி.. ஜெ. பாணியில் சுத்து போட்ட எடப்பாடி! கையை பிசையும் அறிவாலயம்
சென்னை: திமுக அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்தும் திட்டத்தில் அதிமுக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா பாணியில் இந்த போராட்டம் திட்டமிடப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை அந்த கட்சிக்கு பெண்கள் ஆதரவு அதிகம் இருந்தது. பெண் தொண்டர்கள்.. முக்கியமாக சென்னையில் அந்த கட்சிக்கு அதிகமாக இருந்தனர்.
எதிர்க்கட்சியாக இருந்த போதும்.. அதிமுக எதாவது போராட்டம் நடத்த வேண்டும் என்றால் பெண்களைத்தான் போராட்ட களத்திற்கு அனுப்புவார். திமுகவிற்கு எதிராக பல இடங்களை பெண்களை திரட்டி அதிமுக போராட்டங்களை செய்து இருக்கிறது.
நைசா ஜெயலலிதா பக்கம் திருப்பிவிட்ட கே.எஸ்.அழகிரி “கொள்கை வேறு கூட்டணி வேறு.. ஒண்ணும் கேக்க முடியாது”

ஜெயலலிதா
ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பின் பெண்களின் ஆதரவு அந்த அளவிற்கு அதிமுகவிற்கு இல்லை. பெண் தலைவர்கள் அதிமுகவில் குறைந்துவிட்டதால், பெண் தொண்டர்கள் ஆதரவும் முன்பு போல இல்லை. இந்த நிலையில்தான் பழைய ஜெயலலிதா பாணியில் திமுகவிற்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்த போவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். அதாவது பெண்களை திரட்டி திமுகவிற்கு எதிராக பெரிய போராட்டம் நடத்த போவதாக அவர் அறிவித்துள்ளார்.

அதிமுக பெண்கள்
இது தொடர்பாக நேற்று எடப்பாடி பழனிசாமி வைத்த குற்றச்சாட்டில், தமிழகத்தில் இந்த விடியா தி.மு.க. அரசு அமைந்த பின்பு, சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதை அவ்வப்போது அறிக்கைகள் மூலமும்,
சட்டப்பேரவை விவாதங்களிலும் சுட்டிக் காட்டியுள்ளேன்.கடந்த ஓராண்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை,ஆளும் திமுகவைச் சேர்ந்தவர்களின் துணையோடு நடப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா அரசால் முற்றிலும் ஒழிக்கப்பட்ட கள்ளச்சாராயம் தற்போதைய இந்த அரசில் ஆறாய் ஓடுகிறது. மெரினா கடற்கரை மணலில் புதைக்கப்பட்டிருக்கும் கள்ளச் சாராய ஊரல்கள்,போலி மது பாட்டில்களைத் தோண்டி எடுக்கும் செய்தியினை பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது. எனவே, அம்மா அரசின் ஆட்சியில் காவல் துறை எப்படி சுதந்திரமாக செயல்பட்டதோ,அதுபோல் இந்த விடியா அரசும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களில் இருந்து மக்களைக் காக்க,காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மெரினா
சமீபத்தில் சென்னை மெரினா கடற்கரை மணலில் சாராயத்தைப் புதைத்துவைத்து விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இங்கே மணலை தோண்டி பார்த்ததில் உள்ளே சாராய ஊரல்கள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணகி சிலைக்கு அருகிலிருந்த இடத்தில் போலீஸார் சோதனை நடத்திய போது இந்த சாராய ஊரல்கள் கிடைத்தன. அங்கிருந்து மொத்தம் 35 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது.

கள்ளச்சாராயம்
இந்த நிலையில்தான் இந்த கள்ளச்சாராய விவகாரத்தை கையில் எடுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாம். ஆபரேஷன் கள்ளச்சாராய 2.0 நடத்தப்படுமா என்று கேள்வி எழுப்பி நேற்று எடப்பாடி பழனிச்சாமி ஆளும் திமுகவை விமர்சித்து இருந்தார். இந்த நிலையில்தான் ரத்தத்தின் ரத்தங்கள் தரப்பில் விசாரித்ததில்.. தற்போது பாஜகதான் எதிர்க்கட்சி மாதிரி செயல்படுகிறது. தொடர்ந்து அவர்களுக்குதான் முக்கியத்துவம் கிடைக்கிறது.

அதிர்ச்சி
நாங்கள் எங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்கள் எங்களை மறந்துவிடுவார்கள். கள்ளச்சாராயம் விவகாரம் பெரிதாக போகிறது. அதனால் அதை கையில் எடுத்து இருக்கிறோம். பெண்களை வைத்து விரைவில் சென்னையில் போராட்டம் நடத்த உள்ளோம். நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்று காட்டுவோம் என்று கூறுகின்றனர். அதிமுகவின் இந்த போராட்ட திட்டங்களை கவனித்து வரும் திமுக கடந்த ஆட்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய உற்பத்தி தொடர்பான விவரங்களை வெளியிடும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.