ஐயையோ காப்பி அடிச்சிட்டா என்ன பண்ண.. பயத்தில் முக்கிய கட்சிகள்.. இதனால தான் ‘அது’ தள்ளிப் போகுதாமே!
சென்னை: அடுத்த மாதம் இந்நேரம் தேர்தல் திருவிழா முடிந்திருக்கும். வாக்கு எண்ணிக்கைக்காக கட்சிகள் காத்துக் கொண்டிருக்க, மக்கள் வழக்கம் போல தங்கள் வேலைகளில் பிஸியாகி இருப்பார்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டாலே கட்சிகள், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் அறிவிப்பு என பரபரப்பாகி விடுவார்கள். தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வைத்து தான் வேட்பாளர்கள் வாக்குச்சேகரிப்பிலேயே ஈடுபடுவார்கள்.
ஆனால் இம்முறை சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட பத்து தினங்கள் ஆகப் போகிறது. தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ளன. ஆனால் ஒரு கட்சியும் இன்னமும் தேர்தல் அறிக்கை பற்றி வாயைத் திறந்த பாடில்லை.
தேர்தல் திருவிழா களத்தில் எண்ணிக்கையும் எண்ணங்களும் பா. கிருஷ்ணன்

எல்லாம் பய மயம்
அதற்கு என்ன காரணம் என விசாரித்தால் எல்லாம் ஈயெடுச்சான் காப்பி விவகாரம் தானாம். கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் பெரும்பான்மையான வகுப்புகளுக்கு ஆல்பாஸ் தந்து விடுவார்கள். எனவே படிக்காத மாணவர்கள் காப்பி அடித்து ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் எங்கே தங்களது பேப்பரை எதிர்க்கட்சிக்காரர்கள் காப்பி அடித்து விடுவார்களோ என்ற பயம் மாணவர்களைப் போலவே அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

எள்ளுனா எண்ணெய்
எதிர்க்கட்சித் தலைவர், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கடனைத் தள்ளுபடி செய்வோம்' எனச் சொல்லி முடிப்பதற்குள், முதல்வர் அதனை தள்ளுபடி செய்து விடுகிறார். அவர் எள் என்பதற்குள் இவர் எண்ணெய்யாக நிற்கிறார். எனவே தேர்தல் அறிக்கையிலும் நாம் ஏதாவது நல்ல திட்டத்தைச் சொன்னால் அதை ஆளும் கட்சி காப்பி அடித்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் எதிர்க்கட்சிக்கு.

வாட் பிளட் சேம் பிளட் மொமண்ட்
சரி அப்படியென்றால் ஆளும்கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டியது தானே என்கிறீர்களா.. எதிர்க்கட்சி மாதிரியே அதற்கும் பயம் இருக்கிறதாம். எங்கே நாம் நல்ல திட்டத்தைச் சொல்லி அதையே அல்லது அதைவிட சிறப்பான திட்டத்தை எதிர்க்கட்சி சொல்லி மக்களைக் கவர்ந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவர்களுக்கு.

அவங்க கவலை அவங்களுக்கு
இதனால் தான் இருதரப்பும் இன்னமும் தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் அமைதி காத்து வருகின்றனவாம். அவர்கள் முதலில் வெளியிடட்டும் என இவர்களும், இவர்கள் முதலில் வெளியிடட்டும் என அவர்களும் காத்துக் கொண்டிருக்கிறதாம். இப்படியே போட்டி போட்டுக் கொண்டிருந்தால் எதைச் சொல்லி வாக்கு கேட்பது என்ற கவலையில் இருக்கிறார்களாம் வேட்பாளர்கள். என்னத்த சொல்ல...!