தேர்வு இல்லாமல் மாணவர்களை ஆல் பாஸ் செய்தது ஏன்? முதல்வர் எடப்பாடியார் விளக்கம்
சென்னை: தமிழகத்தில், 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களை தேர்வு இல்லாமல் பாஸ் செய்யும் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதற்காக அவ்வாறு அறிவித்தார் என்பதையும் பேரவையில் விளக்கினார்.

இதோ முதல்வரின் வார்த்தைகள்: கொரோனா நோய்த் தொற்று குறைந்ததையடுத்து, ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டன.
அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின், துத்தநாகம் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

கல்வி தொலைக்காட்சி
மாணவர்கள், இந்த கல்வி ஆண்டு முழுவதும் கல்வி தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று உள்ளனர். தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலமாக கல்வி பயிலும் சிரமத்தை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.

பெற்றோர் கோரிக்கை
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலை, பெற்றோர்கள் கோரிக்கை, கல்வியாளர்கள் கருத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு 2020-21ம் கல்வி ஆண்டு 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இல்லாமல் பாஸ் செய்யப்படுகிறார்கள்.

மதிப்பெண் எப்படி
மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு நெறிமுறைகள் அரசால் விரிவாக வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விளக்கம் அளித்தார் முதல்வர்.

வரவேற்பும், விமர்சனமும்
இதனிடையே, முதல்வர் அறிவிப்புக்கு, வரவேற்பு மற்றும் எதிர்ப்பு ஆகிய இரண்டும் வந்தபடி உள்ளன. மாணவர்கள், பெற்றோர்கள் வரவேற்கிறார்கள். கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் கல்வியாளர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.