ராம்மோகன் ராவ் நினைவிருக்கா.. எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கும் சிக்கல்?.. 26-ம் தேதி இது நடக்குமா?
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரணை நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை முடங்கியிருந்த நிலையில், திமுக ஆட்சியை பிடித்த பின் சூடு பிடித்துவிட்டது.
சமீபத்தில் ஆறுமுகசாமி ஆணையமும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸிடம் விசாரணை நடத்தியது.. அந்த விசாரணை நாட்களில் ஓபிஎஸ் சொன்ன பெரும்பாலான வார்த்தை "எனக்கு எதுவும் தெரியாது" என்பதுதான்.
ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன் மருத்துவமனையில் நடந்தது என்ன - அப்பல்லோ டாக்டர் வாக்குமூலம்

ஜெயலலிதா
"அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா நன்றாக இருப்பதாக ஒருசில முறை சசிகலா என்னிடம் சொன்னார்.. அதைத்தாண்டி எனக்கு எதுவும் தெரியாது. அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்த தகவலையும் என்னிடம் சொல்லவில்லை.. என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது.,. அப்போதைய ஆளுநர் பிரதாப் ரெட்டியை சந்தித்தது கூட எனக்கு நினைவில்லை... CPR சிகிச்சை செய்தது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது" என்று ஓபிஎஸ் பதில்களை உதிர்த்திருந்தார்.

புகழேந்தி
இதனிடையே, ஜெ.மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து கொண்டே இருக்கிறது.. குறிப்பாக, அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி விடாமல் கேள்வி எழுப்பி கொண்டே இருக்கிறார்.. செய்தியாளர்களிடம் ஒவ்வொருமுறை சந்தித்து பேசும்போதும் புகழேந்தி சொல்லும் வாதங்கள் இவைகள்தான்: "இப்படி ஒரு ஆணையத்தை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டதே எடப்பாடி பழனிசாமிதானே.. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, எடப்பாடி பழனிசாமியுடன் நானும்தான் மருத்துவமனையில் இருந்திருக்கிறேன்.. நடந்தவை எல்லாமே எடப்பாடிக்கு நன்றாகவே தெரியும்...

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி ஆணையத்தை அமைக்கும்போது, இந்த ஆணையம் அவசியம் என்பதை அரசு ஆணை மூலம் தெரிவித்துள்ளார்.. அதனால், அவர் விசாரிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும்.. இது தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திலும் மனு அளித்துள்ளேன். என்னை விசாரணைக்கு அழைத்தாலும் வரத் தயார்.. உரிய முகாந்திரம் இருந்தால் மறுபடியும் ஆணையம் விசாரணை மேற்கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியிருக்கிறது..

எடப்பாடி பழனிசாமி
அதன் அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்... 2016ம் ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது நடைபெற்ற காவிரி விவகாரம் தொடர்பான கூட்டத்தில் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றாரா? அப்போது என்ன நடந்தது? என்பன உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாகவே ஆணையம் அவரிடம் விசாரிக்க வேண்டும்" என்ற வாதங்களை மீடியா முன்பு முன்வைத்து வருகிறார் புகழேந்தி.

ஆணையம்
இப்படிப்பட்ட சூழலில்தான்,ஜெயலலிதா மரணம் குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்துவது குறித்து, வரும் 26-ம் தேதி முடிவெடுக்கப்படும் என்று ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளன.. காரணம், ஆணையத்தில் புகழேந்தி தாக்கல் செய்த மனுக்கள் மீதுதான் இப்படி ஒரு முடிவுக்கு ஆணையம் வந்துள்ளதாக தெரிகிறது.

ராம்மோகனராவ்
புகழேந்தியின் மனுவில், "ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து உத்தரவிட்ட, அன்றைய முதல்வர் பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும்... சிகிச்சையிலும், அவரது மரணத்திலும் தனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என்று ஓபிஎஸ் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சி அளிக்கிறது. அதனால், இது தொடர்பாக, முன்னாள் தலைமை செயலர் ராமமோகனராவ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் மறு விசாரணை நடத்த வேண்டும்" என்று புகழேந்தி மனுவில் கூறியிருந்தார்...

சிக்கல் கூடுகிறது
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.. இதுகுறித்து விளக்கம் அளிக்க ஏப்ரல் 26ம் தேதி நேரில் ஆஜராகுமாறு, புகழேந்திக்கு ஆணையம் உத்தரவிட்டது... அப்போதுதான் அன்றைய தினம் எடப்பாடியிடம் விசாரணை குறித்தும் ஆணையம் முடிவு செய்யும் என்று தெரிகிறது.. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் கூடுகிறது என்றே தெரிகிறது.