Tamilnadu Lockdown: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்தா.. முக்கிய முடிவு எடுக்கும் அரசு?
சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கு குறித்து ஒரு முக்கிய முடிவை தமிழக அரசு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலானது.
இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேரமும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இதே போல் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அங்கு சனி, ஞாயிறு இரு தினங்களும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது.
கவனிக்க யாருமில்லையா? மருத்துவமனையில் போராடும் வ.உ.சி கொள்ளுப்பேத்தி.. 30 நிமிடத்தில் உதவிய மா.சு!

குறைவு
இந்த நிலையில் அங்கு கொரோனா தொற்று குறைந்ததாலும் வணிகர்கள் கேட்டுக் கொண்டதாலும் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதே போல் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என வணிகர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

31 ஆம் தேதி கட்டுப்பாடுகள்
அதாவது கொரோனா தொற்று குறைந்தால் வார இறுதி ஊரடங்கிற்கு அவசியம் இருக்காது என தெரிவித்திருந்தார். கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் குறைந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் வரும் 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகின்றன.

என்ன ஆலோசனை
இந்த நிலையில் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் ஊரடங்கை தளர்த்துவதா இல்லை மேலும் கடுமையாக்குவதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

முழு ஊரடங்கு
மேலும் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் கடுமையான கட்டுப்பாடுகள் வாய்ப்பில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் ரத்தாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனினும் தமிழகத்தில் ஓமிக்ரானின் புதிய வேரியண்ட் பரவி வருவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே அரசு என்ன முடிவை அறிவிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.