"பெரிய பஞ்சாயத்து.. இது சாதாரணம் இல்லை".. ஓபிஎஸ் கையில் 2 மெகா அஸ்திரம்.. ஆக்ரோஷத்தில் எடப்பாடி!
சென்னை: அதிமுகவில் தொடர்ந்து நடக்கும் மோதல்கள், வழக்குகள் காரணமாக இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக முடங்கும் நிலைக்கு சென்று கொண்டு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். முக்கியமாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டை இலை சின்னத்தை முடக்கும் முயற்சியில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது.
ஜூலை 11ம் தேதி கண்டிப்பாக பொதுக்குழுவை நடத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். இந்த பொதுக்குழவில் பொதுச்செயலர் பதவிக்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எடப்பாடி பழனிசாமி தீர்க்கமாக இருக்கிறார்.
ஆனால் இந்த பொதுக்குழுவிற்கு எதிராக இரண்டு விதமான வழக்குகள் தொடுக்கப்பட்டு உள்ளன. முதல் வழக்கு, கடந்த பொதுக்குழுவில் உயர் நீதிமன்ற தீர்ப்பு அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கு.
பிற்பகல் 80.. மிட்நைட் 70.. எடப்பாடி வீட்டிற்கு அடுத்தடுத்து சென்ற கார்கள்! நேற்று இரவு என்ன நடந்தது

ஓபிஎஸ் ஆதரவாளர் சண்முகம்
ஓபிஎஸ் ஆதரவாளர் சண்முகம் மூலம் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட உள்ளது. இது போக ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்டுவதற்கு எதிரான வழக்கு. இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்று தெரியவில்லை. பெரும்பாலும் இந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வர வாய்ப்புகள் உள்ளன. இந்த வழக்கு ஒரு பக்கம் உள்ள நிலையில்தான் அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.

பொதுக்குழு
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறுவதால், தலைமை கழக நிர்வாகிகள் தரப்பில் இந்த பொதுக்குழுவிற்கு அழைப்பிதழ் செல்கிறது. ஆனால் அதிமுக விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றால், அவை தலைவர் - பொருளாளர் இணைந்துதான பொதுக்குழுவை கூட்ட முடியும். இவர்கள்தான் பொதுக்குழுவிற்கான கடிதத்தை அனுப்ப முடியும்.

அதிமுக தலைமைக்குழு
ஆனால் இப்போது அதிமுக தலைமைக்குழு சார்பாக கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. இதைத்தான் ஓ பன்னீர்செல்வம் தரப்பு கேள்வி எழுப்பி உள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் காலியாகவில்லை. அப்படி இருக்கும் போது.. எப்படி தலைமைக்குழு பொதுக்குழுவை கூட்ட முடியும். அப்படியே ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டாலும் கூட பொருளாளர் மற்றும் அவைத்தலைவர் தானே பொதுக்குழுவை கூட்ட முடியும். எப்படி தலைமைக்குழு பொதுக்குழுவை கூட்ட முடியும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பொருளாளர்
இப்படிப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழுவை கூட்டினால் அதை முறையற்றது என்று அறிவிக்க ஓ பன்னீர்செல்வம் தரப்பு முயலும் என்கிறார்கள். இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் விசாரித்ததில்.. ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் பொதுக்குழுவை கூட்டவே முடியாது. அவர் இல்லை என்றால் பொருளாளர்தான் கூட்ட வேண்டும். தலைமை கழகம் கூட்ட விதியில் இடமே இல்லை. எடப்பாடி பெரிய பஞ்சாயத்தை கூட்டிக்கொண்டு இருக்கிறார்.

சட்ட விரோதம்
அவர் செய்வது தவறு. அவருக்கு எதிராகத்தான் இது திரும்பும். இந்த பொதுக்குழு சட்ட விரோதமாக கூடினால், அதிமுக சின்னம் முடங்க கூட வாய்ப்பு உள்ளது. கட்சியில் சட்ட விரோத நடவடிக்கைகள் நடப்பதாக கூறி சின்னத்தை முடக்க முயற்சி செய்வோம் என்கிறார்கள், ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமான நிர்வாகிகள். அதாவது பொதுக்குழுவே சட்ட விதிகளை மீறிவிட்டதாக கூறி மொத்தமாக சின்னத்தை முடக்க ஓபிஎஸ் தரப்பு முயலும் என்கிறார்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள். உயர் நீதிமன்றத்தில் நடக்கும் இரண்டு வழக்குகளையும் ஓபிஎஸ் தரப்பு தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.