"பிரதமர் ஸ்டாலின்".. தேசிய அளவில் எகிறி அடிக்கும் முதல்வர்.. "அச்சாரம்" போட்ட அண்ணா அறிவாலயம்
சென்னை: பிரதமர் ஸ்டாலின் என்ற முழக்கம் இன்று தமிழகமெங்கும் ஒலிக்க தொடங்கி உள்ளது.. இதற்கு என்ன காரணம்? திமுக தொண்டர்களின் உண்மை மனநிலை என்ன?
10 வருடம் கழித்து ஆட்சியை பிடித்ததில் இருந்து, தன்மீதான கவனத்தை நாட்டு மக்களிடம் குவித்து வருகிறது திமுக அரசு..
திமுக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில், நாட்டிலேயே மிகவும் பிரபலமான முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பெற்றிருந்ததே இதற்கு சாட்சியாக விளங்கி கொண்டிருக்கிறது.
ஏ! பாஜகவே! உங்களை எதிர்கொள்வது எப்படி என தெரியும்- ஸ்டாலின் முன்னிலையில் ராகுல் காந்தி அதிரடி பேச்சு

நம்பர் 1
இதைதவிர, ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே கொரோனாவை சிறப்பாக கையாண்ட விதம், மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், அதேநேரத்தில் நிதி சுமையை சீரமைக்க எடுத்துக்கொண்ட சீரிய முயற்சிகள் தமிழக மக்களிடமும் நாளுக்கு நாள் ஆதரவு ஸ்டாலினுக்கு பெருகியதும் இதற்கு முக்கியமாக காரணமாக அமைந்தது. மேலும், மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு, கடந்த மாதம் முக ஸ்டாலின் எழுதியிருந்த கடிதம் பாஜக மேலிடத்தையே சற்று அதிர வைக்கவும் செய்தது..

மேலிடம்
இது எல்லாவற்றிற்கும் மேலாக, தேசிய தலைவர்கள் அடிக்கடி தமிழகம் வந்து போய் கொண்டிருப்பதும், மேலிடத்தை யோசிக்க வைத்து வருகிறது. நேற்றைய தினமும் அப்படி காட்சிதான் தமிழகத்தில் காண முடிந்தது.. ராகுல்காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி என எத்தனையோ தலைவர்கள் ஸ்டாலினின் நூல் விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்திருந்தனர்..

நிதி உரிமைகள்
இதில், முதல்வர் ஸ்டாலின் பேசிய போது, . "மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்திய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு, மாநிலங்கள் அதிகாரமற்ற பகுதிகளாக உருக்குலைக்கப்படுவதை தடுத்தாக வேண்டும்.

திராவிடவியல் கோட்பாடு
இங்கு சட்டத்தின் ஆட்சியாக மட்டுமல்லாமல், சமூகநீதியின் ஆட்சியாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அகில இந்திய அளவிலான சமூகநீதிக் கூட்டமைப்பை திமுகசார்பில் உருவாக்கி, அனைத்து அகில இந்தியக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இத்தகைய திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன். அந்த வகையில் எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனைதான் இந்த நிகழ்ச்சி" என்று ஸ்டாலின் பேசிய பேச்சு பாஜக கூடாரத்தையே அசைத்து பார்த்து வருகிறது.

மம்தா, பினராய்
அதாவது ஒரு முதிர்ந்த தேசிய தலைவர் போன்று, பக்குவம் நிறைந்ததாக ஸ்டாலினின் பேச்சு நேற்றைய தினம் இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.. வரப்போகும் எம்பி தேர்தலுக்கு, பாஜகவுக்கு எதிரான சக்திகள் ஒன்று திரண்டு வரும் இந்த சூழலில் ஸ்டாலினின் பேச்சு கவனத்தை ஈர்த்து வருகிறது.. மம்தா, சந்திரசேகரராவ், பினராய், உத்தவ்தாக்கரே என பெருந்தலைகள் இறங்கி உள்ள மெகா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற சிக்கல்கள் இனி கண்டிப்பாகவே எழவே செய்தாலும், இதில் ஸ்டாலின் பெயரும் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி
''மு.க. ஸ்டாலினை போன்றவர்கள், பிரதமராக இருந்தால் நாடு செழிக்கும் என டெல்லியில் உள்ள அகில இந்திய தலைவர்கள் அனைவரும் எண்ணத்தொடங்கிவிட்டனர்'' என்று தெரிவித்துள்ளதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது... இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக, திமுக தொண்டர்களே அத்தகைய முழக்கத்தை எழுப்ப தொடங்கிவிட்டனர்..

பிரதமர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் இன்று, தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அண்ணா அறிவாலயத்தில் காலையில் இருந்தே திமுக தொண்டர்கள் குழுமியிருந்தனர்.. முதல்வர் ஸ்டாலினின் கார் நுழைந்ததுமே, வருங்கால பிரதமர் வாழ்க என்று உற்சாகமாய் முழக்கமிட்டனர்.. இந்த முழக்கம் வெறும் தொண்டர்களின் விருப்பம் என்று மட்டும் எடுத்து கொண்டு கடந்து விட முடியாது என்றாலும், பிரதமர் வேட்பாளருக்கான சாதகமான சூழல் அறிவாலயத்தை சூழ்ந்து வருவதாக தெரிகிறது.