• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அதிமுக விட்ட இடம்.. கெட்டியாக பிடித்துக்கொள்ளும் விஜய்.. பாஜகவிற்கு போட்டியாக பிளான்? பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை களமிறங்க செய்து அரசியலில் ஆழம் பார்க்கும் திட்டத்தில் இறங்கி உள்ளார் நடிகர் விஜய். தமிழ்நாடு அரசியலில் எதிர்க்கட்சிகளுக்கு நிலவும் வெற்றிடத்தை விஜய் பிடிக்கும் திட்டத்தில் இருக்கிறாரோ என்ற கேள்விகளை இது எழுப்பி உள்ளது.

தமிழ்நாட்டில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்காக கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த முறை பாமக, தேமுதிக, நாம் தமிழர், மநீம, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என்று பல முனை மோதல் 9 மாவட்டங்களில் நடக்க உள்ளது. வட மாவட்டங்களிலும், நெல்லை, தென்காசி ஆகிய இரண்டு தென் மாவட்டங்களிலும் நடக்கும் இந்த தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

சிவகங்கை பாஜக நிர்வாகி கொலையில் 3 பேர் கைது.. பின்னணியில் 2012 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்! சிவகங்கை பாஜக நிர்வாகி கொலையில் 3 பேர் கைது.. பின்னணியில் 2012 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்!

தங்கள் வாக்கு வங்கியை உயர்திக்கொள்வதற்காகவும், அடிப்படை கட்டமைப்பை வலிமையாக்கிக்கொள்வதற்காகவும் கட்சிகள் இந்த முறை தனியாக தேர்தலை சந்திக்கும் முடிவில் இறங்கி உள்ளன. இந்த நிலையில்தான் நடிகர் விஜயின் மக்கள் இயக்கமும் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளது. இதற்கான முடிவு நேற்று நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டு இருக்கிறது.

மக்கள் இயக்கம்

மக்கள் இயக்கம்

விஜயின் மக்கள் இயக்க நிர்வாகிகள் நேற்று மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கூடி பனையூரில் இந்த முடிவை எடுத்தனர். அதன்படி உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களில் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிடலாம். எல்லோரும் சுயேட்சையாக போட்டியிட வேண்டும். மக்கள் இயக்கத்தின் கொடி, விஜய் புகைப்படங்களை பயன்படுத்தலாம். ஆனால் சுயேட்சையாகத்தான் போட்டியிட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விஜயின் எதிர்கால அரசியல் திட்டங்களுக்கான அடித்தளமாக இந்த முடிவு பார்க்கப்படுகிறது.

அதே பிளான்

அதே பிளான்

தமிழ்நாட்டின் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் எதை காரணம் காட்டி அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார்களோ அதே விஷயத்தைதான் தற்போது விஜயும் மறைமுகமாக வெளிக்காட்டுவது போல தெரிகிறது. தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் நிலவுவதாக கூறி கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். அதேபோல் அரசியல் வெற்றிடம் நிலவுவதாக கூறி நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதிக்கும் திட்டத்தில் இறங்கி கடைசியில் அதை கைவிட்டார். தற்போது நடிகர் விஜயும் எதிர்கட்சிகளுக்கான வெற்றிடத்தை நிரப்பும் திட்டத்தில் இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

எதிர்க்கட்சி

எதிர்க்கட்சி

திமுக தன்னை வலுவான கட்சியாகவும், முதல்வர் ஸ்டாலின் தன்னை ஆளுமைமிக்க தலைவராகவும் ஏற்கனவே நிரூபித்துவிட்டார். ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக தற்போது கடுமையான நெருக்கடியில் உள்ளது. கட்சிக்கு உள்ளேயே இரண்டு தரப்பாக நிர்வாகிகள் பிரிந்து கிடக்கிறார்கள். கட்சிக்கு வெளியே சசிகலாவும் கட்சியை கைப்பற்ற தயாராக இருக்கிறார். இதுபோக எடப்பாடி பழனிசாமிக்கு கோடநாடு வழக்கு மற்ற மாஜி அமைச்சர்களுக்கு சொத்துகுவிப்பு, முறைகேடு வழக்கு என்று பல வழக்குகள் போடப்பட்டு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக

அதிமுக

இதனால் அதிமுக பிரதான எதிர்க்கட்சி என்ற அளவில் தீவிரமாக செயல்பட முடியாத நிலையில் உள்ளது. எந்த திசையில் செல்வது என்று தெரியாமல் அதிமுக கொஞ்சம் குழம்பும் நிலையில் உள்ளது. இதனால் பாமக கூட அதிமுகவின் கூட்டணியில் இருந்து வெளியேறி.. எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளை கட்டுப்படுத்தவில்லை என்றும் விமர்சனம் வைத்துள்ளது. இப்படி இருக்கும் போது அதிமுகவின் எதிர்க்கட்சி இடத்தில எப்படியாவது அமர்ந்துவிடலாமா என்று பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. மேற்கு வங்கம் போன்ற மற்ற மாநிலங்களில் எப்படி பாஜக பிரதான இரண்டாவது பெரிய கட்சியானதோ அதேபோல் தமிழ்நாட்டிலும் அதிமுக இடத்தை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது.

பாஜக

பாஜக

இந்த பாஜகவின் கனவிற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் விஜய் களமிறங்குகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக காங்கிரஸ் என்ற நிலை இருந்த போது எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவால்தான் தமிழ்நாட்டில் இருந்து தேசிய கட்சிகள் காணாமல் போய் இரண்டு திராவிட கட்சிகளுக்கு இடையிலான போட்டி ஏற்பட்டது. அதன்பின் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை தாண்டி தேசிய கட்சிகள் தலையெடுக்க முடியவில்லை. தற்போது மீண்டும் பாஜக என்னும் தேசிய கட்சி தலையெடுக்க சூழ்நிலை ஏற்பட்டுள்ள போது அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக எம்ஜிஆர் பாணியில் விஜய் களமிறங்குகிறாரோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன. திமுகவிற்கு எதிராக.. மாற்று கட்சி என்ற இடத்தை பிடிக்கும் தொடக்க புள்ளியாக விஜயின் இந்த மூவ் இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

அதிமுகவின் இடத்தை நிரப்ப பாஜகவிற்கு போட்டியாக விஜய் வரும் வாய்ப்புகளும் உள்ளன. இது வெறும் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தானே.. இதில் என்ன இருக்கிறது. விஜயின் மக்கள் இயக்கம் அவ்வளவு பெரியதா என்ற கேள்வி எழுவதும் நியாயமானதே. ஆனால் தேமுதிக என்னும் பெரிய கட்சி தோன்றியது உள்ளாட்சி தேர்தல்களில் இருந்துதான். இதேபோன்று உள்ளாட்சி தேர்தல்களில் ஆழம் பார்த்து அடிப்படை கட்டமைப்பை உருவாக்கிய பின்புதான் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார். தேமுதிகவுக்கு அது தொடக்க காலத்தில் பெரிய வெற்றியாக அமைந்தது. அதே பார்முலாவைத்தான் தற்போது விஜயும் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.

விடை

விடை

இப்போது ஒரே கேள்வி விஜய் இதற்கு முன் அவ்வப்போது அரசியல் பேசிவிட்டு பின் சைலன்ட் ஆனது போல இப்போதும் ஆகிவிடுவாரா அல்லது உள்ளாட்சி தேர்தலுக்கு பின் தீவிர அரசியலில் ஈடுபடுவாரா என்பதே. உள்ளாட்சி தேர்தலுக்கு பின் விஜயோ அல்லது அவரின் மக்கள் இயக்கமோ கொஞ்சம் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபாட்டால் அது கவனிக்கத்தக்க முயற்சியாக இருக்கும்... இல்லை இசைவெளியீட்டு விழாவில் மட்டுமே குட்டி ஸ்டோரி மூலம் அரசியல் பேசுவேன் என்று விஜய் ஒதுங்கிக்கொண்டால்.. ரஜினிகாந்தின் அரசியல் பயணம் போலவே இவருக்கும் அரசியல் வாழ்க்கை தொடங்காமல் முடிவு பெறும்!

English summary
Local Body Election: Will Vijay come into active politics in Tamilnadu?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X