சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாழ்வும் வளமும் மங்காத தமிழென்று வாழ்ந்த நாவலர் நெடுஞ்செழியன்.. கவிஞர் கலாப்ரியா

Google Oneindia Tamil News

சென்னை: திராவிடர் இயக்க முதுபெரும் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கவிஞர் கலாப்ரியா எழுதிய கட்டுரை:

திருநெல்வேலியில் அப்போதெல்லாம் அரசியல் கூட்டங்கள், ரயில்வே ஃபீடர் ரோடு எனப்படும் டவுண் ரயிலடிக்குச் செல்லும் சாலையில்தான் நடைபெறும். அங்கிருந்த மந்திரமூர்த்தி உயர்நிலைப்பள்ளி கட்டிடங்கள் தெற்கு வடக்கான சாலைக்கு இரு புறமும் இருக்கும். ரயிலுக்குச் செல்வோரின் வசதிக்காக சாலையில் வழி விட்டு, கூட்ட மேடை மேற்குப்புறம் அமைக்கப்படும். இருபது அடிகள் தள்ளி, சாலையின் கீழ்ப்புறமிருந்த பள்ளி மைதானத்தில் பேச்சைக் கேட்போர் அமர்ந்து இருப்பார்கள். தி.மு.க.கூட்டங்கள் என்றால் மக்கள் வருகை நிறைய இருக்கும்.

 Writer Kalapriya Article on Navalar Nedunchezhian

ஒன்பது மணி வாக்கில் ஒரு ரயில் அந்த நிலையத்திற்கு வந்து போகும். அது செல்லும் வரை, மிக ஒழுங்கோடு, சாலையில் யாரும் அமர மாட்டார்கள். ரயில் வந்து போன பின்னர் சாலையில் ஆட்கள் நடமாட்டம் இருக்காது. கூட்டம் ஆரம்பித்து அந்த ஒன்பதேகால் மணி அளவில் பேச்சும் சூடு பிடித்திருக்கும். அப்போதுதான் அநேகமாக முக்கியப் பேச்சாளர் முழங்க ஆரம்பித்திருப்பார். கூட்டம் தானாகவே முன் நகர்ந்து சாலையை ஆக்கிரமித்துக் கொள்ளும். பின்னாலிருந்து " மறைக்காதீங்க அய்யா உக்காருங்கய்யா," என்று சொல்வோரின் குரல்களுக்குக் கட்டுப்பட்டு, தார் ரோட்டின் சூட்டையும் பொருட்படுத்தாமல், படபடவென்று அமர்ந்து கொள்வார்கள். அப்போதும் கொறித்துக் கொண்டிருக்கும் தங்கள் கடலைப் பொட்டலங்களைக் கைக்குள் பத்திரமாகப் பொத்தியபடிதான் உட்காருவார்கள். தி.மு.க கூட்டமென்றால் வேர்க்கடலை விற்பனை நன்றாகச் சூடு பிடிக்கும்., அண்ணா, நாவலர், கலைஞர், எம்.ஜி.ஆர் கூட்டமென்றால் விற்பனக்கு கேட்கவே வேண்டாம். பேச்சைக் கேட்டுக் கொண்டே நிலக்கடலையை அரைத்துத் தள்ளிவிடுவார்கள்.

விடியற்காலம் ரயில்வே ஃபீடர் ரோட்டில் போகிறவர்கள் அதை வைத்தே எவ்வளவு கூட்டம் வந்திருக்கும், எவ்வளவு தீவிரமான விஷயங்கள் பேசப்பட்டிருக்கும் என்று தெரிந்து கொள்ளுவார்கள்.

எனக்கு பன்னிரெண்டு வயது இருக்கும். நாவலர் அன்று பேசுகிறார். அப்போதுதான் அவர் முதன் முதலாக எம்.எல்.ஏ ஆன புதிது. "வெல்க தமிழ்" "வாழ்க திராவிடம்" என்ற முழக்கங்களின் கீழே நாவலர். இரா.நெடுஞ்செழியன். M.A., M.L.A முழங்குகிறார், தீந்தமிழ் மாந்த திரண்டு வாருங்கள். என்று தட்டி போர்டெல்லாம் வைத்திருந்தார்கள். காலையில் பள்ளிக்கூடம் செல்லும் போதே பார்த்து வைத்திருந்தோம். என்னையொத்த ஓரிரண்டு நண்பர்களுடன் சீக்கிரமே சென்று முன் வரிசையில் அமர்ந்திருந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். திருக்குறளின் "ஈன்றாள் பசி காண்பாளாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை" குறளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். அது தமிழ்ப் பாடத்தில் இருக்கிற குறள். அதனால் அவர் சொல்லுவது புரிகிறது. நாவலர் சொன்னதும் செய்ததும் நன்றாய் நினைவிருக்கிறது. "நம்மைப் பெற்ற தாய் பசியால் துடித்தாலும் கற்றவர்கள் பழிக்கிற செயலைச் செய்யக் கூடாது என்றுதான் இதற்குப் பொருள். இங்கே முன் வரிசையில் அரை டிரவுசர் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் இந்தப் பொடிப்பசங்களிடம் கேட்டால் கூட இப்படித்தான் இதற்குப் பொருள் சொல்லுவாங்க," என்று எங்களைச் சுட்டிக் காட்டி விட்டுத் தொடர்ந்தார்.

 Writer Kalapriya Article on Navalar Nedunchezhian Writer Kalapriya Article on Navalar Nedunchezhian

"அதுதான் நேரான பொருள். இதுதான் சிறந்த தமிழ் அறம். ஆனால் வள்ளுவர் கிஞ்சித்தும் நினைத்திராத, தமிழ்க் கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபாடான கருத்துகள் சிலவற்றைப் பரிமேலழகர், தம் உரையில் புகுத்தியுள்ளார் என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளைச் சுட்டிக் காட்ட இயலும். கள்ளழகர் தெரியும்; யாரு அவரு, பரிமேலழகர். குதிரை மேல இருக்கிற அழகரு. அவரு ஒரு பார்ப்பனர். பரிமேலழகர், திருக்குறளுக்கு உரை எழுதத் துவங்கும்போதே, எடுத்த எடுப்பிலேயே, அறம் என்பதற்கு ஒரு விளக்கம் எழுதியிருக்காரு, "மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், அதில் விலக்கியவற்றை ஒழித்தலும்," என்று எழுதறாரு.

அந்த மனுங்கிறவன் அவன், யாருக்குமே பொறக்கலையாம், சுயம்பாகப் பொறந்தவனாம். அம்மா இல்லாம எப்படி ஒருத்தன் பொறக்க முடியும்ன்னு அறிவு வேண்டாமா. அவன் என்னெல்லாமோ சொல்லறான்."அதுக்குப் பேரு மனு தர்மம்"ன்னு கொண்டாடறாங்க வடவர்கள். அவனுக சொல்லறானுக நம்மாளுக தலையை ஆட்டிக்கிட்டு உக்காந்திருக்கானுக. ஏன்ன்னா நாமெல்லாம் சூத்திரனாம். நம்ம தலைவர் பெரியார் சொல்லுவாருல்லா, சூத்திரன்னா பரத்தையோடு மகன்னு அர்த்தம், என்று பேசிக் கொண்டு போனவரை நோக்கி கூட்டம், முன்னேறத் தொடங்கி எங்களை முன்னே போகச் சொன்னது. நாங்கள் நகர்ந்தோம்.

இங்கே பேச்சை சட்டென்று நிறுத்தி விட்டு, தம்பிகளா நீங்கள்ளாம் இப்ப வீட்டுக்குப் போகலாம். வீட்டில தேடுவாங்க. ஏற்கெனவே இது பாடம் படிக்கிற நேரம். அதைக் கெடுத்துக்கிட்டு இப்பவே உங்களுக்கு அரசியல் எல்லாம் வேண்டாம். இப்போ கிளம்புங்கங்கறேன். வேணா வெயிலில் கழுதை விரட்டற நேரமிருக்கும் பாருங்க அப்போ, உங்களை விட பெரியவர்களிடம், நம்ம கழகத்து அண்ணன்மார்கள்கிட்ட இதையெல்லாம் கேட்டுத் தெரிஞ்சிக்கிடணும், இப்போ கிளம்பணும்ன்னு உங்களை 'வேண்டி விரும்பி விழைந்து' கேட்டுக் கொள்கிறேன்" என்று சோடா கேட்டு குடிக்க ஆரம்பித்தார்.

மற்ற அண்ணாச்சிமார்களும், எங்களைப் "போங்கடே," என்று கிளப்பி விட்டார்கள்.

 Writer Kalapriya Article on Navalar Nedunchezhian

அவர் சொன்னது போலவே தெருவின் அண்ணாச்சிமார்கள் குறிப்பாக புலவர் வேலாயுதம்ன்னு ஒருத்தர் மறுநாள் விளக்கமாகச் சொன்னார். எப்போதுமே சினிமா பார்த்தாலும், கூட்டங்கள் போய் வந்தாலும் மறுநாள் அல்லது தொடரும் நாட்களில், அதைப் பற்றி தெருவில் கூடிக் கலந்து பேசுவார்கள். நாங்கள் கேட்டுக் கொண்டிருப்போம். அதில் தவறாமல் வேலாயுதம் இருப்பார். நாவலர் தொடர்ந்து பேசியதையெல்லாம் சொன்னார். அவர் பேசுவது போலவே சொன்னார். "எல்லா மக்களுக்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையதாகத்தான் அமையும். பிறப்பைப் பொறுத்து ஏற்றத்தாழ்வு இல்லை என்னும் கருத்துப்பட. பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்'' என்று கூறுவது வள்ளுவப் பெரியார் சொல்லற அறம்ங்கேன். ஆனால், "பிராமணன்தான் முதல் சாதியாம். அவன் பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்தவனாம். அவங்கள்ளாம் எல்லாப் பிற சாதிக்காரனோட பொருள்களையும் எடுத்துக்கலாமாம்' "சூத்திரன், அதாவது நாம, சூத்திரன்னா பரத்தையின் மகன்னு அர்த்தம்.அது கூட நம்ம ஆளுகளுக்குத் தெரியாது. நாம பிராமணர்களைத் திட்டினால் நாம, பிரம்மாவோட தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால், நம்ம நாக்கை அறுக்க வேண்டுமாம்.

அத்தோடு விட்டார்களா. யார் யாருக்கு எப்படிப் பேர் வைக்கணும் என்று எழுதி வச்சிருக்காங்க, "பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிற பெயரை வைக்க வேண்டும்ன்னு எழுதி வச்சிருக்கான். சூத்திரனுக்கு அதாவது நமக்கு கறுப்பன், மாடன், முனியன், சாம்பன்ன்னு பேரு வக்யணுமாம், அவங்களுக்கு வேற, சூரியன் சந்திரன், இந்திரன், தர்மன்னு வையுங்கறானுக. நான் கேட்கிறேன் இதுக்குப் பேரா தர்மம். இதுக்குப் பேரா அறம்? இதுக்குப் பேரு கயவாளித்தனம்ங்கிறேன். அயோக்கியத்தனம்ங்கிறேன். பேச்சை அமர்ந்து கேட்ட போதும் எழுப்பி விடப்பட்டும் கிளம்பி விடாமல் கொஞ்ச தூரம் தள்ளி வந்து நின்று கேட்ட போதும், எங்களுக்கு முதலில் சொன்ன குறள் புரிஞ்ச அளவுக்கு பின்னால் சொன்னதெல்லாம் அப்ப புரியவும் இல்லை. புலவர் சொன்ன போதும் பெரிதாகப் புரியவில்லை. ஆனால் போகப் போக அவர் உரைகளைக் கேட்டும், மன்றம், திராவிடநாடு, காஞ்சி, முரசொலி இதழ்களை, சைவ சித்தாந்தப் பதிப்புக் கழக நூலகத்தில் தேடிப் படித்தும் நாவலர் மீது பெரிய ஈர்ப்பு உண்டானது.

 Writer Kalapriya Article on Navalar Nedunchezhian

பேச்சு ஒரு நிகழ்த்துக்கலை என்பதை என்னைப் பொறுத்து நாவலர்தான் முதலில் கொண்டு வந்தார் என்பேன். இந்த நிகழ்த்துக்கலை என்கிற வார்த்தை இப்போது பயன்படுத்துகிற வார்த்தை. ஆனால் இதை அன்றே உணரச் செய்தது நாவலர்தான். அண்ணாவின் பேச்சு ஒரு ரகம். அது பாமரனுக்கும் உலக அரசியலையும் பொருளாதாரத்தையும் கொண்டு சேர்க்கிற பேச்சு. கொஞ்சம் நீளமான வாக்கியங்களாகப் பேசுவார்.

அண்ணாவுக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் இருந்ததால், குரல் மூக்கடைப்போடு பேசுவது போல இருக்கும். அதையே பலரும் நகலெடுத்துப் பேசுவார்கள். நாவலர் அப்படியல்ல, அவரது பாணியே தனி. அண்ணா கொஞ்சம் நீளமான வாக்கியங்களாகப் பேசுவது, ஆங்கிலப் பத்திரிகைகளின் வாக்கிய அமைப்பு போல இருக்கும் என்று பின்னாளில் என் ஒரு பேராசிரியர் சொன்னார்.

அது ஓரளவு உண்மைதான். அண்ணாவின் எழுத்தில் இருக்கும் அடுக்கு மொழி பேச்சில் சற்றே குறைவாக இருக்கும். உதாரணத்திற்கு தி.மு.கழகம் ஆரம்பிக்கப்பட்ட அன்று அண்ணா ஆற்றிய உரை:

 Writer Kalapriya Article on Navalar Nedunchezhian

"திராவிடர் கழகம் எதற்காகப் பாடுபட்டதோ, எவருடைய நன்மைக்காக -எந்தச் சமுதாயத்திற்காக, ஏழை எளியவர்களை எளிமையிலிருந்து விடுவிக்க, வாழ வழியற்ற மக்களுக்கு வாழ்க்கைப் பாதை வகுத்துக் கொடுக்க, இல்லாமையை இல்லாததாக்க கொடுமையை ஒழித்துக்கட்ட எல்லாரும் ஓர் குலம் என்ற ஏற்பாட்டை வகுக்க ஏற்படுத்தப்பட்டதோ, அதே ஏற்பாட்டைக் கொள்கை வழி நின்று, குறிக்கோளைப் புறக்கணிக்காது பாடுபட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகம்." அண்ணா பேச்சு இப்படி இருக்கும்.

கலைஞரின் பேச்சு என்பது நடப்பு அரசியலையும் நிகழ்ச்சிகளையும் சார்ந்திருக்கும். அன்றைக்கு நிகழ்ந்த சம்பவத்தைக் கூட அன்றையப் பேச்சில் கொண்டு வரும் சாமர்த்தியம் அவருக்கு உண்டு.

திரைப்பட வசனங்கள் போலவும் அடுக்கு மொழியில் பேசுவார்.

நாவலரின் பேச்சில் ஏற்ற இறக்கங்கள் ( Voice modulation) அற்புதமாக இருக்கும்.

சில இடங்களில் வார்த்தையை வாய்க்குள் முழுங்கினாற் போலப் பேசிக் கொண்டே வருபவர் திடீரெனக் குரலை உயர்த்துவார். உடல் மொழியும் அதற்கேற்றாற் போல மாறும். கையில் எப்போதும் பத்திரிகைகளிலிருந்து வெட்டப்பட்ட விபரங்கள் தயாராய் இருக்கும்.

 Writer Kalapriya Article on Navalar Nedunchezhian

" தோழர்களே இந்த அரசாங்க நிர்வாகம் என்ன லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் காட்ட விழைகிறேன்.

தோழர்களே மாதவரம் என்று சென்னைக்குப் பக்கத்தில் ஒரு இடம் அங்கே சர்க்காரின் மிகப்பெரிய பால் பண்ணை இருக்கிறது. அங்கே பாத்திரங்களில் மாற்றுகிற போதும் அளக்கிற போதும் கவனக்குறைவாக இருப்பதால் பால் சிந்துகிறது. அந்தப் பாலின் அளவு, அங்கே கறக்கப்படுகிற பாலினளவில் பத்து விழுக்காடு என்று ஒரு செலவுக்கணக்கு எழுதி வைத்திருக்கிறார்கள்.

பத்து பக்கா பால் கறந்தால் ஒரு பக்கா வீண் என்று கணக்குச் சொல்லி அதற்கும் சேர்த்து விலையை அதிகமாக்கி நம்மிடம் கறந்து விடுகிறார்கள்." ஏற்கெனவே இங்கே விலைவாசிகளால் நம்ம கிட்ட ஒட்டக் கறந்து, அடிமாடு மாதிரி அடங்கி ஒடுங்கி,மடி சுருங்கி நாமே நொந்து போய்க் கிடக்கோம்., என்று ஒரு முறை பேசினார்.

'இதில் மடி சுருங்கி' என்று சொல்லுகிற போது குரல் மெலிந்து மூக்கிலிருந்து ஒலிக்கும்.

சிவாஜி பல படங்களில் ஊர்ப் பெரிய மனிதராகவோ, அரசியல் வாதியாகவோ நடிக்கும் போது, இவரது உடல் மொழியைக் கடன் வாங்கி நடிப்பார். நாவலருக்கும் சிவாஜி என்றால் நிறையவே பிடிக்கும். "நடிகன்ன்னா அது சிவாஜிதான்" என்று தனிப்பட்ட முறையில் பேசுவதை நானே கேட்டிருக்கிறேன். அவரது பேச்சுத் திறமையே அவரை நோக்கி அண்ணாவை இழுத்து வந்தது. அண்ணமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மத்தியில், நாவலர் பெரிய ஹீரோ. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே முதல் மாணவர். இலக்கியம், வரலாறு, அரசியல் விஞ்ஞானம் போன்றவற்றில் எந்தக் கேள்வியைக் -கேட்டாலும் மடை திறந்த வெள்ளம் போல் சொற்பொழி வாற்றுவதில் வல்லவர்.

ஆரம்பத்தில் திக்குவாய்ப் பிரச்சினையால் சரியாகப் பேசமுடியாமல் தவித்த இவருக்கு முறையாகப் பேச்சுப் பயிற்சி தந்தவர் சக மாணவரான க.இராமையா (பின்னாளில் பேராசிரியர் அன்பழகன்). நெடுஞ்செழியன் வேகமாகப் பேசும்போது திக்கித் திணறி வார்த்தைகள் வராதபோது 'ங்' என்று ஒரு விதமாக சத்தம் வந்தது. அதையே அவரது பேச்சு பாணியாகக் கொண்டு வெற்றி பெற்றார். பலர் அவர் போல் பேச வேண்டும் என்று பயிற்சி எடுத்தனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்கக் கருத்துக்களைப் பரப்பிய மாணவர்கள் நன்னன், செழியன், அன்பழகன் வரிசை யில் முதன்மைப் பங்கு வகித்தவர் நாவலர்தான்.

அண்ணாவை இவர் கவர்ந்ததை, அண்ணா இவரைக் கவர்ந்ததை அண்ணாவே சொல்கிறார் கேளுங்கள். ' அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே தான் நான் நெடுஞ் செழியனைக் கண்டது. உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள் - நல்லவேளை அவருடைய துணைவியார் கண்டதில்லை என்று எண்ணுகிறேன்- தாடியுடன் நெடுஞ்செழியனை ! (தாடி, கருப்புக் கோட்டு என்று இளைய வயது பெரியார் ஈ,வெ.ரா போலக் காட்சியளிப்பாராம்)

அப்போது, தோழர் அன்பழகன் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றி வருபவர்-தோழர் நெடுஞ்செழியன் தானுண்டு தன் படிப்புண்டு என்று இருக்கும் போக்கினராகத் தோற்றமளித்து வந்தார். நான் அப்போது தோழர் அன்பழகன், கல்லூரியிலிருந்து வெளியேறியதும் கழகத்தில் வந்து சேருவார், தோழர் நெடுஞ்செழியன் எங்காவது கல்லூரியில் கம்பனின் கவித்திறமை பற்றி (கட்டாயத்தாலும்) இளங்கோ அடிகள் பற்றி (விருப்பத்துடனும்) எடுத்துரைத்துக் கொண்டு, தமிழின் எழிலைக் கண்டும் காட்டியும் பணியாற்றி வருவார் என்றே எண்ணிக்கொண்டேன். அது போல நடந்திருக்கக் கூடாதா என்று ஆயாசத்துடன் கேட்கும் அவர் துணைவியார் தெரிகிறார்கள். என்ன செய்யலாம்! அவரோ புயலில் குதித்து விட்டார்! என்று பதிவு செய்கிறார் அண்ணா.

அத்தோடு நில்லாமல் அவர் மீது பெரும் நம்பிக்கை கொண்டும் இருந்திருக்கிறார். அவர்கள் திரவிடர் கழகத்தினை விடுத்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த போது நாவலரையே அவர் பெரிதும் நம்பி இருக்கிறார். திராவிடர்கழகத்திலேயே பெரியாரிடத்திலேயே நல்ல பெயர் வாங்கியவர் நாவலர். தோழர் நெடுஞ்செழியனைப் பெரியார், தமது மேற்பார்வையில் வைத்திருந்து பார்த்தார் - அவரால் யார்மீதும் குற்றம் காணமுடியும் ஆனால், தோழர் நெடுஞ்செழியனிடம், அவராலும் ஒரு குறைகூடக் கண்டறிந்து கூற இயலவில்லை. அத்தகைய பணியாளர் என்று நாவலரைப் பற்றி வியக்கும் அண்ணா மேலும் எழுதுகிறார்.

"தமிழ் எப்படி எப்படி பேசுவதற்குரியது, இலக்கியம் பேச்சுடன் கலந்து வரும்போது எத்தகைய இன்பமளிக்கும் என்றெல்லாம் நான் பலமுறை எண்ணிப் பார்த்ததுண்டு - மனதிலே உருவெடுத்துக கொண்டிருந்த ஆசை நடமாடக் கண்டேன், தோழர் நெடுஞ்செழியன் கழக மேடையில் பேசத் தொடங்கியதும். கருவூர் ஆற்று மணலில் -நினைவிருக்கிறது - பெரியாரும் இருந்தார்-தோழர் நெடுஞ்செழியன் இலக்கியத்தை இனிய முறையிலே எடுத்தளித்தார். நல்ல விருந்து ஆயினும் என்ன செய்வது? நாளாவட்டத்தில், தலைவர் பெரியார், அபிப்ராயத்திற்கேற்பவும், தரத்தைச் சிறிதளவு தளர்த்தச் சொல்லி வற்புறுத்த வேண்டித்தான் வந்தது. தரத்தை வளரச் செய்யும் போக்கிலா ஆளவந்தார்கள் நமமை விட்டு வைக்கிறார்கள்! நடை இருக்கட்டும், நண்பரின் திறம் இருக்கிறதே, அது கண்டு நான் வியப்புற்றேன்." என்று குறிப்பிடுகிறார் அண்ணா.

தி.மு.கழகம் ஆரம்பிக்கப்பட்டு பெரிய விருட்சமாக வளர்ந்து வருகிறது. 1955இல் அண்ணா வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறது. கட்சியை யார் பொறுப்பில் விடுவது என்று யோசித்தாலும், அண்ணா ஏற்கெனவே தீர்மானித்து வைத்திருந்த படி நாவலரையே பொதுச் செயலாளர் பதவிக்குச் சம்மதிக்க வைக்கிறார். அதுவும் எப்படி, அவரே விவரிக்கிறார்.

"என்னிடம் இல்லாத - நான் விரும்பாததால், அல்ல, இயலாததால் - ஒரு அருங்குணம் நாவலரிடம் உண்டு - கண்டிருப்பீர்கள். ஓயாது உழைப்பது! எப்போதும் எங்கேயும் எதையாவது, எப்படியாவது செய்து கொண்டே இருப்பது. என்னாலே இதைக் கண்டு இரசிக்க முடியும் - ஆனால் என்னை அந்நிலைக்கு மாற்றிக் கொள்ள இயலவில்லை. நான் அடிக்கடி கனவு காண்கிறேன், -சோலையில் சொகுசாக உலவுவதுபோல அல்ல - அந்தக் காலம் மலை ஏறிவிட்டது - பொதுப்பிரச்னைகளைப் பற்றிக் கனவு காண்கிறேன். தோழர் நெடுஞ்செழியன் எப்போதும் காரியமாற்றிக் கொண்டே இருக்கும் இயல்பினர். நேரம் வீணாகி விட்டது என்று கூறத்தக்க போக்கிலே, அவர் இருந்ததை நான் கண்டதே இல்லை. இந்த இயல்பு, கழகத்துக்குப் பெருந்துணையளிக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை."

"இந்த எண்ணம் எனக்குத் தோன்றிய நாள் தொட்டு நான் தோழர் நெடுஞ்செழியனை இந்தப் பொறுப்புக்குப் பக்குவப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு, அவருடைய இல்லத்தை என் இருப்பிடமாக்கிக் கொண்டேன்! சிறிதளவு, என்னிடம், பழகுவதில் கூச்சமுள்ள சுபாவம் அவருக்கு எனவே, அவருடைய இல்லத்தை இருப்பிடமாக்கிக் கொண்டால் தான், என் எண்ணங்கள், நான் சரியென்று கருதும் முறைகள், என் ஆசைகள், எனக்குள்ள அச்சங்கள், இவை பற்றியும், துணைக்கழகங்கள், துளைக்கும் கழகங்கள், தூது விடும் கழகங்கள், வம்புக்கு இழுக்கும் கழகங்கள் ஆகியவை பற்றி என் கருத்து யாது என்பது பற்றியும், உரையாடி உரையாடி எடுத்துக்காட்ட முடியும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, அவர் வீட்டுச் சைவத்தைத் தாங்கிக்கொண் டிருந்தேன் ! வீட்டிலே என் குறும்புப் பார்வையைக் கண்டு தளருவார், எனினும் இயல்பு அவரை விடாது, மறுகணம், ஏதாவது வேலையைத் துவக்கிக் கொள்வார்."

"சிறையில் மூன்று திங்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தோம் - அங்கு என்ன வென்று கருதுகிறீர்கள் - ஆச்சாரியார் ராஜினாமாச் செய்வது போல, அவசரச் சட்டம் பிறப்பிப்பது போல, பாதுகாப்புக் கைதியாக ஆக்கப்படுவதைப் போல, பெரியார் கட்டித் தழுவிக் கொள்வது போல, இப்படிப் பலப்பல 'கனவுகள்' - விழித்தபடி - நான் கண்டு கொண்டிருப்பேன். அவர்? - வேலை! வேலை! வேலை! ஏதாவது செய்தபடி இருப்பார். இந்த அருங்குணத்தை நாம் நன்றாகப் பயன்படுத்தி, கழகத்தை மேன்மையுறச் செய்து கொள்ள வேண்டும்." என்றெல்லாம் குறிப்பிட்டு "நாவலர் கழகத்தின் காவலர்" என்று பெரிய கடிதம் எழுதுகிறார் தன் தம்பிகளுக்கு.

நாவலர் வேடிக்கைகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவர் வெளியூர் கூட்டங்களுக்காக வருகிற போது அந்த ஊர்த் தோழர்களிடம் அவ்வளவு வேடிக்கையாகப் பேசுவார். ஆனால் கேளிக்கைக்காரராக இருந்ததே இல்லை. அண்ணா சொல்வது போல வேலை வேலையிலேயே கவனமாக இருப்பார். அல்லது வாசிப்பில் லயித்திருப்பார். அவர் அமைச்சரான பிறகும் அப்படித்தான். அவர் துறையில் அவர் எடுக்கும் முடிவில் எந்த முதலமைச்சரும் மாற்ற வேண்டிய அவசியமிருக்காது. தேர்ந்து தெளிந்து முடிவெடுத்திருப்பார். ஒரு காரியத்தை அவரிடம் ஒப்படைத்த பின் அதை தலைவரோ தலைஅமி அமைச்சரோ யாரானாலும் அவர்கள் எதிர் பார்க்கும் அளவுக்கு, ஏன் அதற்கு அதிகமாகவே கச்சிதத்துடன் செய்து விடுவார். "தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்.." என்ற வள்ளுவரின் குறளுக்கு சரியான விளக்கம் அவர்தான். அவர் செயல் குறித்து ஐயமே யாருக்கும் எழாது. அதே நேரத்தில் அவர் துறையில் யாரின் அநாவசியத் தலையீட்டையும் விரும்ப மாட்டார்.

ஒரு சம்பவம். எனக்கு நன்கு அறிமுகமான ஒரு சட்டமன்ற உறுப்பினர். மிகவும் நேர்மையானவர். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகச் சிறப்பான பணியாற்றியவர். மிக முக்கியமாக அவர் தொகுதிக்குட்பட்ட, குற்றாலத்தில் பெண்களுக்கான கல்லூரியையும் அவரது சொந்த ஊரில் உயர்நிலைப் பள்ளையினையும் நிறுவினவர். ஒரு வகையில் நாவலரின் உறவினர். அவர் தன் தொகுதியில் ஒரு ஆண்கள் கல்லூரியும் அமைக்க எண்ணி, அதற்காகத் தொகுதியில் உள்ள ஒரு பெரிய நிலச்சுவான்தாரிடம் அவரது தந்தை பெயரில் உள்ள தொண்டு நிறுவனம் மூலமாக, அரசுக்குச் செலுத்த வேண்டிய Endowmet fund - காப்பு நிதியினைக் கோரியுள்ளார். அவரும் சம்மதித்து அதை இரண்டு அறுவடைப் பருவங்களில் (இரண்டு ஆறுமாதங்களில் அதாவது ஒரு வருடத்தில்), இரு தவணைகளாகத் தருவதாகச் சொல்லி இருக்கிறார். அந்த உறுதி மொழியுடன் நாவலரைச் சந்தித்தார்.

அவர், "அண்ணாச்சி, விதிப்படி ஒரே தவணையில்தான் கட்ட முடியும், உங்களுக்காக விதியை மாற்ற ஏதாவது குறுக்கு வழியைக் கண்டு பிடித்தால் இதே போலக் கோரிக்கையுடன் இன்னும் சில கட்சிக்காரர்கள் காத்திருக்கிறார்கள், அவர்களின் நோக்கம் உங்களின் நோக்கத்தைப் போல யோக்கியமானது என்று நான் கருதவில்லை, அதனால் அடுத்த ஆண்டே முழு Endowmet fund தொகையினையும் கட்டுங்கள் உடனே அனுமஹி வழங்குகிறேன், என்று சொன்னாராம். அந்த சட்ட மன்ற உறுப்பினருக்கு, இவரை விடவும் முதலமைச்சரிடம் அதிகச் செல்வாக்கு உண்டு. ஆனால் முதல்வரிடம் கேட்டால் நாவலரைக் கேளுங்கள் அவர் முடிவெடுத்தால் அதிலிருந்து மாற மாட்டார் என்று சொல்லி விடுவார் என்பதும் தெரியும். அதனால் அந்த திட்டத்தை ஒத்தி வைத்தார்.

ஆனால் அடுத்த ஆண்டிற்குள் ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அதனால்தான் கடைசி வரை அவரது துறையில் ஊழலற்றவராக அவரால் இருக்க முடிந்தது.

அப்போதையத் தலைமுறைக்கு அரசியலையும் அழகுத் தமிழையும் அறிமுகப்படுத்தியவை தி.மு.கவினர் தெருவுக்குத் தெரு, வட்டத்திற்கு வட்டம் உருவாக்கிய படிப்பகங்கள், மன்றங்களே. எங்கள் வட்ட்த்தில் கலைவாணர் படிப்பகமும் (1957இல் ஆரம்பிக்கப்பட்டது) மறுமலர்ச்சி மன்றமும் மும்முரமாகச் செயல் பட்டன. அவையே தேர்தல் காரியாலயங்களாகத் தேர்தல் நேரத்தில் இயங்கும். பொதுவாகவே அண்ணா தொடங்கி வைத்ததோ அல்லது அது அந்தக் கால வாசிப்பு முறையோ. திமுகவினருக்கு கிரேக்க நாகரிகம்,வரலாறு தத்துவங்கள், கதைகள் மீது பெரிய ஈடுபாடு உண்டு. அவ்வப்போது மேடைப் பேச்சுகளில் சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர் கர்த்துகளைச் சொல்லுவார்கள். அண்ணா ."'ரோமாபுரி ராணிகள்" நாவல் எழுதினார். கலைஞர் சாக்ரடீஸ் நாடகம் எழுதி சாக்ரட்டீஸ் என்னும் கிரேக்கப் பெரியாரில் தந்தை பெரியாரை நினைவு படுத்தினார். அத்தோடு பின்னாளில் 'ரோமாபுரிப்பாண்டியன்' எழுதினார்.

கண்ணதாசன் தனது பிரபலமான,"எங்கள் திராவிடப் பொன்னாடே.." பாடலில் 'எகிப்திய நாட்டின் நதிக்கரையில் எங்கள் இளந்தமிழ் வீரர் பவனி வந்தார்' என்று எழுதுவார்.

தமிழ்நாட்டிற்கும் ரோமிற்கும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்பு உண்டு என்பதைப் பலரும் சொல்லி வருகிறார்கள். புதுமைப்பித்தனின் நரகம் கதையில் வருகிற 'பைலார்க்கஸ்' என்ற கிரேக்கன் நினைவுக்கு வருகிறான்.

சாண்டில்யனின் யவன ராணியும். நாவலர் எழுதிய 'பண்டைக் கிரேக்கம்' என்ற நூல் முக்கியமானது 1954இல் வெளியான இந்த நூல் திருச்சி திராவிடப் பண்ணையால் வெளியிடப்பட்டது. சுமார் எண்பது பக்கங்களில் கிரேக்க சரித்திரம், இலக்கியம்,தொழில்கள், பண்பாடு, வழிபாட்டு முறைகள், கடவுள்கள் பற்றி ஒரு சரித்திர வழிகாட்டி (Notes) போல இருக்கும். எளிமையான பல்லை உடைக்காத நடை. ஆழமான தகவல்கள். விரிவான நிலப்பரப்பு விவரணைகள் என்று முக்கியமான நூல். இவையெல்லாம் அன்று ஒரு ஒரு திராவிட இயக்க மாணவனை செம்மைப்படுத்த பெரிதும் உதவின. இதை நான் படித்த காலத்தில்தான் (1963 வாக்கில்) திருநெல்வேலியில் Helen of Troy சினிமாஸ்கோப் படம் மறு வெளியீடாக வந்தது. அதில் உள்ள பாத்திரங்கள், அதன் கதையை ஓரளவு பின் தொடர இது பேருதவியாய் இருந்தது.

கல்லூரியில் ஹோமரின் யுலிஸ்ஸஸ், அக்கிலஸ் கதைகள் காதில் விழும்போதெல்லாம் அவர்கள் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் அல்லவா என்று தோன்றியிருக்கிறது. அதற்கு இந்த நூல்தான் ஆதாரம். இதை இப்போது கூட மறுபடி பதிப்பிக்கலாம். (இணையத்தில் கிடைக்கிறது https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt6kuUd&tag=#book1/3)

நாவலர் "ஜியார்டனோ புரூனோ" (Giardano Bruno) என்கிற கிரேக்க அறிஞரைப் பற்றி "ஜியார்டனோ புரூனோ" ஒரு கதை போல சுவாரசியமாக எழுதியிருக்கிறார். அவர் தனது இளம் வயதில் காப்பர்நிக்கஸ் போன்ற அறிவியல் வானவியல் மேதைகளின் கருத்தை ஒட்டிச் சிந்த்தித்தவர். கத்தோலிக்க மதவாதிகளால் ஐரோப்பாக் கண்டம் முழுவது துரத்தப்பட்டுக் கடைசியில் தான் பிறந்த ரோம் நட்டிற்கே பொய்யான வாக்குறுதியை நம்பி வந்து தீயில் பொசுங்கி மாண்டு போன, ஒரு கணித அறிவியலாளர், கவிஞர், தத்துவவாதி. எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுள் மறுப்பாளர். அவர்தான் இந்தப் பிரபஞ்சம் எல்லை அற்றது. சூரியக்குடும்பம் போல பல கிரக்க் குடும்பங்கள் (Cosmic pluralism) பால் வெளியில் இருப்பதாகச் சொன்னவர். பிரபஞ்சத்திற்கு மையம் என்ற ஒன்றே கிடையாது. எந்தப் புள்ளியையும் பேரண்டத்தின் மையப் புள்ளியாகக் கொள்ள முடியும் என்ற கருத்தை நிறுவியவர்.

இது சுமார் நாற்பது பக்க அளவில் சின்னப் புத்தகமாக இருக்கும். அப்போது வெளி வருகிற தி.மு.க. இயக்க வெளியீடுகள் எல்லாமே அப்படித்தான் இருக்கும். சினிமா கதை வசனம் பாட்டுப் புத்தகங்கள் போல இருக்கும். எட்டணா, (ஐம்பது நயாபைசா,) அல்லது ஒரு ரூபாய்க்குள் இருக்கும். எல்லாமே 1950 வாக்கில் வெளிவந்தவை. எங்கள் பக்கத்துத் தெருவில் இருந்த தி.மு.க சார்பில் இயங்கி வந்த 'மறுமலர்ச்சி மன்றம்" என்ற படிப்பகத்தில் இவையெல்லாம் கிடைக்கும் இன்றைக்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்பே இவர்களையெல்லாம் பற்றி அறிமுகம் செய்ய திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஆர்வமாய் இருந்திருக்கிறார்கள். இதைச் சமீபத்தில் படித்த போது, புரூனோவை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது நாத்திக வாதம் பேசுபவர்களுக்கு மஞ்சள் ஆடை அணிவிக்கப்படும் என்கிற செய்தி மனதைக் கவர்ந்து, கலைஞர் அணியும் மஞ்சள் துண்டும் தானாகவே நினைவு வந்தது.

நாவலரின் இன்னொரு முக்கியமான புத்தகம், "மொழிப்போராட்டம்" இதுவும் 1948இல் வெளிவந்தது. 1938 மொழிப்போராட்டத்தைச் சுட்டிக்காட்டி விட்டு பத்து ஆண்டுகள் கழித்து 1948இல் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்கான அவசியம் மறுபடி ஏற்பட்டிருப்பதைக் குறித்து விரிவான வாதங்களை வைத்திருப்பார். நாவலர். இந்தி எதிர்ப்பை வெறும் உணர்ச்சி ரீதியாக அணுகாமல் அறிவு பூர்வமான தர்க்கங்கள் மூலம் அணுகி இருப்பார். ஆனால் கடைசித் தொண்டனும் அதில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கும். இன்றைக்கும் கூட அவர் வைக்கும் வாதங்களே இந்தி திணிப்பு எதிர்ப்புக்குப் போதுமானவை. "சமஸ்கிருதம் இந்தியாவிற்கு வெளியே பிறந்து வழங்கி வந்த மொழிதான். எனவே அது இந்தியாவிற்கு அந்நியமொழியே. இந்தியை 150 வருடங்களுக்கு முன் (இன்றைக்கு 200 வருடங்கள் எனலாம்) சமஸ்கிருதத்தை பாரசீகம், அரபி மொழிகளிலிருந்து வார்த்தைகளஈ உருவி, தேவநாகரி லிபியில், ஒரு அவியலாக உருவாக்கின மொழி என்று விளக்கமாகச் சொல்லி இருப்பார். பொது மொழிக்கும் தேசிய மொழிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது என்று நிறுவியிருப்பார்.

எழுத்தில் நாவலரின் நடை என்பது பாலைப் புகட்டுவது போல என்று சொல்லலாம். அது கரும்பை வெட்டித் தோலுரித்து, கணு நீக்கி கஷ்டப்பட்டு கடித்துச் சுவைப்பது போலல்ல. அவர் அண்ணாவைப் போலோ கலைஞரைப் போலோ திரைப்படம் சார்ந்து இயங்கியவரல்ல. அப்போதைய திரைமொழியை அவர்கள் இருவரும் நிர்ணயித்தததால், அவர்களுடைய எல்லா எழுத்திலும் அதன் சாயல் இருக்கும். அது ஒரு வகை அலங்காரம். நாவலருடைய படைப்புகள், உரைகள் எல்லாமே அப்படி இருக்காது. ஆனால் இலக்கியங்கள் குறித்து அவர் பேசுகிற போது அதில் ஒரு தனி நயம் இருக்கும். அண்ணா இதைத்தான், "நடை இருக்கட்டும், நண்பரின் திறம் இருக்கிறதே, அது கண்டு நான் வியப்புற்றேன்." என்று குறிப்பிடுகிறார்.

ஆம். பலதுறைகளிலும் நாவலரின் திறம் என்பது தனித்துவமானது. பேச்சா, எழுத்தா, நிர்வாகமா, கட்சியை வளர்ப்பதா எதிலும் அவர் தனித்துவம் பெற்று விளங்கியவர். அவரது அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதில் ஒரு இயங்கியல் விதி இருப்பதைக் காண முடிகிறது. ஆனால் அவர் மனிதன் சிந்திக்க வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும் பகுத்தறிந்து பார்க்க வேண்டும். சிந்திக்க மறுப்பவன் அவனுக்கு, தானே துரோகியாகிறான். சிந்திக்க அஞ்சுபவன் மூடநம்பிக்கையின் அடிமையாகிறான் என்று நாவலர் ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சு இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது. மனிதர்களில் நல்லவர்களும் உண்டு கெட்டிக்காரர்களும் உண்டு. கெட்டிக்காரத்தனம் மிஞ்சும் போது அது மனிதரிடம் உள்ள நல்ல குணங்களை அழித்து விடும். அப்படிப் பலவீனத்திற்கு இடம் கொடுக்காமல் நல்லவராகவே தன் அரசியல், சமூக, சொந்த வாழ்க்கையை வாழ்ந்து விட்டுச் சென்றவர் நாவலர்.

எங்கே இருந்தாலும் அவருடைய திறமையால் கட்சியையும் ஆட்சியையும் எப்போதும் காத்தவர் அவர். கட்சியும் ஆட்சியும் ஒரு புறம் இருக்கட்டும். அவரது சமுதாயச் சிந்தனை, திராவிட இனச் சிந்தனை எந்தக் காலத்திலும் சமரசத்திற்கு இடம் கொடுத்ததே கிடையாது. அவரது இறுதிச் சடங்கின் போது கூட எந்த வைதீகமும் உள் நுழைந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவர் என்பார்கள். இறுதி வரை பெரியாரின் சீடராகவே வாழ்ந்தவர். ஒரு சுயமரியாதைக் குடும்பத்தில் அவர் பிறந்த காலத்தில், முழு வடிவம் பெற்று தன் உச்சத்தில் இருந்த திராவிட இயக்கத்தோடே அவர் வளர்ந்து, எண்பதாண்டு கால வாழ்வினை அதற்கே அர்ப்பணித்துக் கொண்டவர் நாவலர்.

அத்தோடு "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு," என்று ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு உரையின் முடிவிலும் முழங்கி முடிப்பாரே அதையே தன் வாழ்வாகக் கொண்டவர். ஆம் தமிழன் வாழ்வையும், தமிழையும் தன் வாழ்வாக வளமாகக் கொண்டு புரட்சிக் கவிஞரின் வாக்கை மெய்ப்பித்து, "நாவலர் தமிழினக் காவலர்" என்று நிருபித்து நம் நெஞ்சில் நிறைந்தவர் நாவலர் இரா. நெடுஞ்செழியன்.அந்தரங்கசுத்தியோடு யார் திராவிட இயக்க வரலாறு எழுதினாலும் அதன் அதிகப் பக்கங்களை நாவலர் நிறைத்து, நம் நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்பார் என்பதில் ஐயமில்லை.

அவரது மேடைத் தமிழில் சொன்னால், "இல்லவே இல்லி..."

இவ்வாறு கலாப்ரியா எழுதியுள்ளார்.

English summary
Writer Kalapriya Article on Dravidian Movement Leader Navalar Nedunchezhian.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X