"கூட்டாட்சி தத்துவத்தைக் காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்!" சென்னையில் யஷ்வந்த் சின்ஹா திட்டவட்டம்
சென்னை: தமிழகம் வந்துள்ள எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரினார்.
இந்தியாவில் இப்போது குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் விரைவில் முடியும் நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
உன்னதமான உயர்ந்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா.. முதல்வர் ஸ்டாலின், கூட்டணி தலைவர்கள் வாழ்த்து
இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடிவு செய்தது.

யஷ்வந்த் சின்ஹா
அதன்படி டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பின்னர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று, பல்வேறு கட்சிகளை சந்தித்து தனக்கு ஆதரவு கோரி வருகிறார். அதன்படி இன்று சென்னை வந்த அவர், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.

நன்றி
அப்போது முதல்வர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு நன்றி கூறி பேச்சைத் தொடங்கினார் யஷ்வந்த் சின்ஹா. அவர் பேசுகையில், "என்னை வாழ்த்தி வரவேற்ற அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் நன்றி. மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழும் இந்த நேரத்தில் நாம் இங்குப் பேசிக் கொண்டு இருக்கிறோம். பாஜக அங்கு முதல்வர் பதவியை ஏற்கவில்லை, ஏனென்றால் ஆட்சி நீடிக்காது என அவர்களுக்குத் தெரியும். இதனால் பலி ஆடாக ஒருவரை முதல்வர் பதவியில் அமர்த்தி உள்ளனர்.

மதிக்கவில்லை
மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தைத் துளியும் மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. அவர்கள் அரசியலமைப்பு சட்டங்களை ஒவ்வொன்றாக மீறி வருகின்றனர். ஆளுநர்கள் என்பவர்கள் குடியரசுத் தலைவரின் பிரதிநிதிகள் தான். ஆளுநர்கள் அரசியலமைப்பிற்கு உட்பட்டே செயல்பட வேண்டும். தமிழகம் உட்பட பல மாநில ஆளுநர்களின் செயல்பாடுகள் வருத்தம் அளிக்கிறது. பல மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசுகளுடன் மோதல் போக்கைக் கொண்டு உள்ளனர்.

இந்துத்துவ சித்தாந்தம்
மகாராஷ்டிரா பாஜக தலைவர் அம்மாநில அரசைக் கவிழ்ப்போம் எனத் தொடர்ந்து கூறி வந்தார். அதற்கு அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா. அப்போது இருந்த மகாராஷ்டிர அரசு இந்துத்துவ சித்தாந்தம் ஏற்றுக்கொள்ளத்தால் அரசை கவிழ்ப்போம் என்றார்கள். அதாவது ஒரு அரசு, இந்துத்துவ கொள்கையை ஏற்காமல் மதச்சார்பின்மையைப் பின்பற்றக் கூடாது என்பதே அவர்கள் கூறுகின்றனர்.

குரல் கொடுப்பேன்
மத்திய அரசின் அத்துமீறல்களுக்கு எதிராக கடந்த காலங்களிலும் குரல் கொடுத்துள்ளேன். வரும் காலத்திலும் அவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக எனது போராட்டம் தொடரும். பல எதிர்க்கட்சியில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி பொது வேட்பாளராக என்னை தேர்ந்தெடுத்துள்ளன. சில ஊடகங்கள் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு நான் முதல் சாய்ஸ் இல்லை, நான்காம் சாய்ஸ் எனக் கூறுகிறார்கள்.

கவனிப்பேன்
ஆனால் 10ஆவது சாய்ஸாக இருந்தாலும் ஒத்துக் கொண்டு இருக்கிறேன். ஏனென்றால் இது நாட்டின் அரசியலமைப்பைக் காப்பதற்கான போராட்டம் குடியரசு தலைவர் பதவியில் அமர்ந்தால், நான் அரசியலமைப்பு சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை துல்லியமாகக் கவனிப்பேன். நான் குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டால் ஆளுநர்கள் மாநில அரசுகளை மரியாதைக் குறைவாக நடத்த விட மாட்டேன். நாடாளுமன்றம் முறையாகச் செயல்படுவதை உறுதி செய்வேன்.

தமிழகம்
தமிழ்நாட்டிற்கு என தனித்துவமான சிறப்பு உள்ளது. தமிழ்நாடு என்றும் அதன் உரிமைகளுக்கும் மொழிக்கும் கலாசாரத்திற்கும் போராடும். முன்னோர்கள் நமக்குக் கொடுத்தவற்றை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. நீங்கள் அளிக்கும் ஆதரவை பார்க்கும் போது தேர்தலில் நிச்சயம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்று அவர் பேசினார்.