வீட்டிலிருந்து காணாமல் போன சிறுமி.. “இன்ஸ்டாகிராம் மூலம் கண்டுபிடித்து” ரயிலை மறித்து மீட்ட போலீஸ்!
கோவை: கோவையைச் சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டிலிருந்து மாயமான நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் போலீசார் அச்சிறுமியை மீட்டுள்ளனர்.
செல்போனில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்திக் கொண்டே இருந்ததால் பெற்றோர் திட்டியதற்காக வீட்டை விட்டு வெளியேறினார் கோவையைச் சேர்ந்த சிறுமி.
சிறுமியின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரில் சிறுமியைத் தேடி வந்த போலீசார், அவரது இன்ஸ்டாகிராம் தோழியைத் தொடர்பு கொண்டு அவர் மூலம் அச்சிறுமியை மீட்டுள்ளனர்.
நாட்றம்பள்ளியில்.. நள்ளிரவில் வீசிய சூறாவளி.. முறிந்து விழுந்த வேப்ப மரம்.. 6 வயது சிறுமி பரிதாப பலி

ஆன்லைன் வகுப்புக்காக
கோவையை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா பரவல் காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்ட போது, அவரது பெற்றோர், செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
அந்த செல்போனில் ஆன்லைன் வகுப்பில் படித்து வந்த அந்த மாணவி தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் செயலியை பதிவிறக்கி பயன்படுத்தி வந்துள்ளார். படிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் எல்லாம் செல்போனில் இன்ஸ்டாகிராமில் உலவி வந்துள்ளார்.

பெற்றோர் கண்டிப்பு
இதை கவனித்த அந்த மாணவியின் பெற்றோர் செல்போனை ரொம்ப நேரம் பயன்படுத்தக் கூடாது எனக் கண்டித்துள்ளனர். பெற்றோர் திட்டியதால் மன உளைச்சல் அடைந்த அந்தச் சிறுமி தனது சக இன்ஸ்டாகிராம் தோழியிடம் இதுகுறித்து பேசியிருக்கிறார்.
பின்னர் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமாகி விட்டார். அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காத நிலையில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இன்ஸ்டாகிராம் தோழி மூலம்
அந்த மாணவி தான் பயன்படுத்திய செல்போனுடன் மாயமானது தெரியவந்துள்ளது. ஆனால், அவரது எண் தொடர்பில் இல்லை. ஆனால், அவர் வைஃபை மூலம் இணைய வசதியை பயன்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து அந்த மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் தொடர்பில் இருக்கும் தோழி ஒருவரின் உதவியை நாடினர். போலீசார் மாணவியின் தோழியை இன்ஸ்டாகிராம் மூலம் பேச வைத்தனர். காணாமல் போன மாணவியிடம் நம்பும் வகையில் பேச வைத்துள்ளனர்.

ரயில் பயணம்
இதனையடுத்து மாணவி ரயிலில் பயணம் செய்து கொண்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். அவர் பேசிய நேரத்தையும், அந்த நேரத்தில் கோவையிலிருந்து செல்லும் ரயில்களின் விவரங்களையும் வைத்து அந்த மாணவி செல்லும் ரயில் கோவை-சென்னை விரைவு ரயில் என்பதைக் கண்டுபிடித்தனர். அவர் பயணித்த ரயில் அரக்கோணம் அருகே செல்வதை உறுதி செய்தனர். மாணவி முன்பதிவில்லாத பெட்டியில் இருக்கலாம் என்றும் ரயில்வே போலீசாரிடம் தெரிவித்தனர்.

மாணவியை மீட்ட போலீஸ்
அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு மாணவியின் புகைப்படத்தையும், அடையாளத்தையும் தெரிவித்தனர். ரயில் அரக்கோணம் சென்றதும் ரயிலில் பயணம் செய்த மாணவியை ரெயில்வே போலீசார் மீட்டனர். பின்னர் அவரை அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் மாணவியிடம் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னையை சேர்ந்த விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் கண்டித்ததால் அவருடன் தங்குவதற்காக மாணவி சென்னைக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மாணவிக்கு அறிவுரை கூறிய போலீசார் அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.