வேலைக்கு வர மறுத்த ஜார்க்கண்ட் பெண் மீது கொடூர தாக்குதல்.. கோவை மில் மேனேஜர் உள்பட இருவர் கைது
கோவை: கோவை நூற்பாலையில் பணிபுரிந்து வந்த ஜார்க்கண்ட் மாநில பெண் தொழிலாளியை கடுமையாக தாக்கிய மில் பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண் கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவையில் ஸ்பின்னிங் மில் மேலாளர் ஒருவர், தனது மில்லில் பணிபுரியும் பெண் ஒருவரை தாக்கியதில் அந்தப் பெண் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு சமூக வலைதளங்களில் பல கண்டனங்கள் எழுந்த நிலையில் கோவை மாவட்ட காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த சம்பவம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூல் ஆலை விடுதியில் நடைபெற்றது தெரியவந்தது.
கோவை அருகே 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்... பதுக்கி வைத்த 3 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர்

இளம்பெண்
அந்த விடுதியில் பணிபுரிந்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் வேலைக்கு வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விடுதியின் காப்பாளர் அந்தப் பெண்ணை தாக்கி உள்ளார். இந்த வீடியோ வைரலானது. இதையடுத்து புகார்களின் பேரில் சரவணம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

இருவர் கைது
அங்கு விசாரணை நடத்தி அந்த விடுதியின் காப்பாளர் லதா, மேலாளர் முத்தையா ஆகிய இருவரை கைது செய்து பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண் தாக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டுள்ள திமுக எம்பி செந்தில்குமார், நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலைவாய்ப்பு இல்லை
வடமாநிலங்களில் வேலைவாய்ப்புகள் இல்லாததால் மற்ற மாநிலங்களில் பணி செய்ய நிறைய ஆண்களும் பெண்களும் வருகிறார்கள். அவ்வாறு வருவோர் கட்டட வேலை, ஹோட்டல் வேலை, வீட்டு வேலை, பனியன் தொழிற்சாலை, ஸ்பின்னிங் மில் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

மனிதாபிமானம்
தமிழகத்தை பொருத்தமட்டில் கோவை, திருப்பூர், சென்னை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இது போல் வயிற்று பிழைப்புக்காக வரும் தொழிலாளர்களுக்கு தமிழ் தெரியாததால் சில சூப்பர்வைசர், மேஸ்திரி, மேனேஜர் உள்ளிட்டோர்கள் மரியாதை இல்லாமல் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது பெண் என்றும் பாராமல் கதற கதற கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதம் எங்கே, மனிதாபிமானம் எங்கே என கேட்கும் அளவுக்கு இந்த செயல்கள் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.