கோவையில் நாங்க கூட்டம் போட்டா அது திமுக ஆட்சிக்கு முடிவு காலம்.. கொந்தளித்த எஸ்பி வேலுமணி !
கோவை : கோவையில் அதிமுக கூட்டம் நடத்தினால் திமுக ஆட்சிக்கு முடிவு காலம் என்பதே நிதர்சனமான உண்மை. எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தால் தான் தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் கிடைக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பேசியுள்ளார்.
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் குழப்பங்களுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி அணி, திமுக அரசுக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.
மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்தி வரும் நிலையில், கோவைக்கு திமுக அரசு ஒன்றும் செய்யவில்லை எனக் கூறி, திமுக அரசைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்பாட்டில் இன்று நடைபெற்று வருகிறது.
அதிமுக ஆட்சி தான் தமிழகத்துக்கு பொற்காலம்.. திமுக அரசால் எந்த பயனுமே இல்லை.. எடப்பாடி விமர்சனம்

வேலுமணி
அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவருமான தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி தலைமையில், கோவை சிவானந்தா காலனியில் இன்று அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்திய தமிழ்நாடு அரசை கண்டித்து நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

பார்த்து பார்த்து செய்தார் எடப்பாடி
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தலைமை உரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகால வளர்ச்சி கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு தேவையானதைப் பார்த்துப் பார்த்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தார். சாலைகள், பாலங்கள் என அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது" எனத் தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு முடிவு காலம்
மேலும் பேசிய எஸ்பி வேலுமணி, "அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது. கோவையில் போராட்டம் அறிவித்ததும் இந்த பகுதிக்கே வராமல் இருந்த அமைச்சர் எ.வ.வேலு அடிக்கடி கோவை வருகிறார். சாலை பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. கோவையில் அதிமுக கூட்டம் நடத்தினால் திமுக ஆட்சிக்கு முடிவு காலம் என்பதே நிதர்சனமான உண்மை. எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தால் தான் தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் கிடைக்கும்.

விவாதிக்க தயாரா?
நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாத முதலமைச்சர் ஸ்டாலின் தான் அதிமுகவை பார்த்து கேள்வி கேட்கிறார். கோவையில் அதிமுக அரசு கொண்டு வந்த அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளையும் திமுக அரசு முடக்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமியோடு முதலமைச்சர் ஸ்டாலின் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? அவருக்கு தைரியம் இருக்கிறதா?

ஈபிஎஸ்ஸை முதல்வராக்குவோம்
திமுக அரசை வீழ்த்தி, மீண்டும் அதிமுக அரசு அரியணை ஏற வைப்போம், எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம். திமுக ஆட்சி மக்களை ஏமாற்றி விட்டது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்" எனப் பேசினார்.