ஆளுநர் பற்றி செய்தி வெளியிட லஞ்சம்? - ‘கவர்’ கொடுத்த பல்கலை. நிர்வாகம் - செய்தியாளர்கள் அதிர்ச்சி!
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று 37வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த பட்டமளிப்பு விழாவுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு கவரில் வைத்து லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
வயிற்றில் ஒரு பருக்கை இல்லை.. மதுவை நினைவிருக்கா? 4 வருடமாகியும் கிடைக்காத நீதி.. கலங்கும் குடும்பம்
ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் பத்திரிகையாளர்களுக்கு 'கவர்' கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டமளிப்பு விழா
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று 37வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் ஆராய்ச்சிப் படிப்பு முடித்த 1,687 மாணவர்களுக்கும், முதுநிலை, இளநிலை படிப்புகளில் முதலிடம் பிடித்த 267 மாணவர்களுக்கும் பட்டங்களும், தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

ஆளுநர் - அமைச்சர்
தி.மு.க அரசு உடனான தமிழக ஆளுநர் ரவியின் மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், இந்த நிகழ்வில் ஆளுநரும், அமைச்சர் பொன்முடியும் ஒன்றாக கலந்துகொண்டனர்.
மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழக மாணவர்கள் எந்த மொழியையும் கற்கத் தயாராக உள்ளனர் எனவும், புதிய கல்விக்கொள்கையின் நல்ல திட்டங்களை ஏற்கத் தயார் என்றும்m தெரிவித்தார்.

பத்திரிகையாளர்களுக்கு ஃபைல்
இந்த பட்டமளிப்பு விழாவிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற அனைத்து செய்தியாளர்களுக்கும் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு ஃபைல் வழங்கப்பட்டுள்ளது. அதில் இந்த பட்டமளிப்பு விழா தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும், அந்த பைல்களில், பல்கலைக்கழக பதிவாளர் பெயரிட்ட ஒரு கவரில் 500 ரூபாய் நோட்டும் வைக்கப்பட்டிருந்தது. ஆளுநர் பங்கேற்கும் விழாவில் செய்தியாளர்களுக்கு 500 ரூபாய் லஞ்சம் கொடுத்த நிகழ்வு பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

கவரில் பணம்
மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், கல்வியையும் போதிக்கும் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில், செய்தியாளர்களுக்கு மறைமுகமாக கவரில் வைத்து லஞ்சம் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர். மேலும் சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் கோவை பாரதியார் பல்கலை. வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.