கருணாநிதி படம் இருக்கே.. ஆணி அடித்து மோடி போட்டோவை மாட்டிய பாஜகவினர்.. கோவையில் அத்துமீறியவர் கைது
கோவை: பிரதமர் மோடி படத்தை மாட்டியே ஆக வேண்டும் என்று, அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அட்டகாசம் செய்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாரத பிரதமரின் உருவப்படத்தை வைக்க வேண்டும் என்று தமிழக அரசு 1978ம் ஆண்டு அரசாணை உள்ளது..
இந்த அரசாணையை அரசு அலுவலகங்களில் செயல்படுத்த வேண்டும் என்று சமீப காலமாகவே பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.. சில மாவட்டங்களில் இது தொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன..
போலி இந்துத்துவா பேசுது பாஜக.. கூட்டணி வெச்சு 25 வருஷம் வீண்- ஓவரா வருத்தப்படும் உத்தவ் தாக்கரே

பாஜகவினர்
இந்நிலையில், கோவையில் அரசு அலுவலகம் ஒன்றில் பாஜகவினர் அத்துமீறி நுழைந்து பிரதமர் மோடி படத்தை மாட்டி உள்ளனர்.. கோவை அருகே பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது... இந்த அலுவலகத்திற்குள் பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையிலான பாஜகவினர் திடீரென உள்ளே புகுந்தனர்.. அங்கே சுவற்றில் பிரதமர் மோடியின் படத்தையும் மாட்டினர்.

ஊழியர்கள்
இதை பார்த்த, பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் விரைந்து வந்து தடுத்தனர்.. ஆனால், அவர்களிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்... இப்படி அனுமதியின்றி ஆபீசுக்குள் நுழைந்து போட்டோ மாட்டுவது தவறு, வேண்டுமானால் அனுமதி பெற்றுக்கொண்டு வந்து படத்தை மாட்டிக்கொள்ளுங்கள், மாஸ்க் அணியாமல் அலுவலகத்திற்குள் வரக்கூடாது" என்று ஊழியர்கள் அவர்களிடம் சொன்னார்கள்.. ஆனால், அதை பாஜகவினர் கேட்கவில்லை.. இதனால், பாஜகவினருக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பிரதமர் மோடி
இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.. ஒரு ஸ்டூல் எடுத்து, அதன்மீது ஏறி நின்று சுவற்றில் ஆணி அடிக்கிறார்கள்.. பிறகு அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி சுவரில் மாட்டப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தின் பக்கத்திலேயே பிரதமர் மோடியின் போட்டோவை மாட்டுகிறார்கள்.. அங்கிருந்த ஊழியர்களிடம் கோபத்துடன் வாக்குவாதம் புரிந்தனர்.

ஸ்டாலின் போட்டோ
"இங்கே முதல்வர் ஸ்டாலின் படம் இருக்கு.. கருணாநிதி படம் இருக்கு.. அப்படின்னா பிரதமர் மோடியின் படமும் வைக்க வேண்டும்.. நாங்க மாட்டி வைத்துள்ள இந்த பிரதமர் மோடியின் போட்டோவை கழற்றினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்.. இந்த போட்டோவை கழற்றினால் அதுக்கு திமுக தான் காரணம்" என்று பாஜகவினர் மிரட்டல் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.. இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வழக்குபதிவு
இதையடுத்து, அரசு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது... அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்... இந்த சம்பவம் காரணமாக பூலுவம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனிடையே, பாஜகவினர் மோடியின் போட்டோவை மாட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.