பார்க்கத்தாய்யா இவன் முரட்டுப் பய.. ஆனா பாசத்துல இந்த "கருவாயன்" ரொம்ப ஒஸ்தி!

கோவை: பார்க்க முரட்டுப்பயதான்.. ஆனாலும் எதிரிகளையே நண்பனாக்கி பாசத்தை பொழிபவன் இந்த செல்லக்குட்டி கருவாயன் சின்னதம்பி!
தமிழகம் முழுசும் ரெண்டு மூணு நாளாக சின்னதம்பி நாமம் உச்சரிப்புதான். காட்டுக்குள்ளிருந்து உறவுகளை தேடி, உணவை தேடி 3 நாட்களாக நடையாய் நடந்து, மயங்கி விழுந்து.. கடைசியில் கோர்ட் வரை புகார் சென்று கும்கி ஆவதிலிருந்து "கிரேட் எஸ்கேப்" ஆனவர்தான் சின்னதம்பி!
இந்த செல்லப்பையன் சம்பந்தமான போட்டோக்கள், வீடியோக்கள், செய்திகள் நம் மனசை என்னவோ செய்து விட்டது. அதனால்தான் இன்னமும் இந்த சின்னதம்பி புராணம் தொடர்கிறது.

கொஞ்சி விளையாட்டு
எப்படியாவது சின்னதம்பியை பிடித்து கொண்டு காட்டுக்குள் பத்திரமாக விட்டு விட வேண்டும் என்று போலீசார் சாப்பாடு, தண்ணி இல்லாமல் தவியாய் தவித்து வருகிறார்கள். ஆனால் இந்த சின்னதம்பியோ, தன்னை அடக்க வந்த கும்கி யானைகளுடன் கொஞ்சி விளையாடி கொண்டிருக்கிறான்.

ஊட்டி விடுகிறான்
கலீம் என்ற கும்கி யானையுடன் சின்னதம்பி விளையாடுவதும், தன்னுடைய தும்பிக்கையால் கலீமின் தும்பிக்கையை தொட்டு தடவி மகிழ்வதும், என ஒரே பூரிப்பாய் இருக்கிறது. இதில் வாயில் எதையோ எடுத்து ஊட்டி வேறு விடுறான். இதன்பிறகு கும்கி மாரியப்பன் வரவழைக்கப்பட்டது.

தோழனாக்கி விட்டான்
எத்தனை பேர் வந்தால் என்ன? எதிரிகளையே தோழனாக்கி காட்டுபவன்தானே சின்னதம்பி. சின்னதம்பியை அடக்க வந்த கலீமும், மாரியப்பனும் பாச மழையில் நனைந்தே விட்டார்கள். முதன்முதலில் கலீம் வந்தபோது அதற்கு சின்னதம்பி பற்றி தெரியாது.

டச்சிங்தான்
அதனால் லேசாக இடித்துவிட்டது. ஆனால் விடுவானா நம்ம முரட்டு பய.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் நட்பு தாண்டவமாட ஆரம்பித்துவிட்டது. எதிரியாக வந்த கும்கியை கொஞ்சுவதும், சாப்பாட்டை ஊட்டி விடுவதும், என ஒரே டச்சிங்... டச்சிங்...தான்!!

2 யானைகள்
இந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் 2 ஆண் யானைகள் பொதுவாக விளையாடாதாம். அதுவும் இல்லாமல் பாசத்துக்கு ஏங்கி கிடந்த சின்னதம்பி, அதை தன் எதிரியிடமே உரிமையாக பெற்றும் விட்டதுதான் காரணம். அதாவது யாரையும் அவன் எதிரியாகக் கூட நினைக்கவில்லை என்பதுதான் இந்த பாசம் காட்டும் பாடமாகும்.

மிரண்டு விடுமாம்
சின்னதம்பியை பார்க்க மக்கள் கூடுகிறார்களாம். ஆனால் போட்டோ எடுக்கும்போது ஃபிளாஷ் பட்டதும் யானைகள் மிரண்டு விடுமாம். அதனால் பொதுமக்களை போலீசார் போட்டோ எடுக்க தடுத்து வருகிறார்கள். பாவம் போலீசுக்குதான் இப்போது நிறைய வேலையும் பொறுப்பும் கூடியிருக்கிறது. சின்னத்தம்பியை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவனால் யாருக்கும் பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதும் சேர்ந்து கொண்டு விட்டது.

கலீமின் மைன்ட் வாய்ஸ்
ஆனால் சின்னதம்பியோ "பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க, அவனை தவிர உறவுகாரரன் யாரும் இங்க இல்லை" என்று ஒரே இணைப்பும்-பிணைப்புமாக கிடக்கிறான்... அதேபோல "உள்ள மட்டும் நானே உசிரைக் கூடத்தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கோன்னு சொல்லுவேன்" இது மாரியப்பன் மற்றும் கலீலின் மைன்ட் வாய்ஸாக இருக்கக் கூடும்.. கிட்ட போய்க் கேட்டால் தெரியும்!