ஆளுநர் விழாவில் ’500 ரூபாய் கவர்’! கொந்தளித்த செய்தியாளர்கள்..நடவடிக்கை எடுப்பேன்! துணைவேந்தர் உறுதி
கோவை : கோவை பாரதியார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் செய்தியாளர்களுக்கு 500 ரூபாய் பணம் கொடுத்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் காளிராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறறது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கோடையை இதமாக்க வரும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை காத்திருக்கு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா
இந்த விழாவில் ஆராய்ச்சி படிப்பில் பட்டம் பெற்ற 1687 மாணவர்கள், முதுநிலை, இளநிலை பட்டங்களில் பல்கலை அளவில் முதலிடம் பெற்ற 267 மாணவர்களும், பட்டங்களையும், தங்க பதக்கத்தையும் நேரடியாக பெற்றனர்.

500 ரூபாய் கவர்
1,504 பேருக்கு எம்.பில் பட்டமும், 1,50,424 பேருக்கு இளநிலை பட்டமும், 48,034 பேர் முதுநிலை பட்டம் என 2,04,362 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் 40 இருக்கைகள் பத்திரிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. செய்தி தொடர்பான தகவல் அடங்கிய பைல்கள் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் தகவல்கள் அடங்கிய பேப்பர்களுடன், பதிவாளரின் பெயர் கொண்ட கவரில் 500 பணம் வைத்து வழங்கப்பட்டது.

பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு
அனைத்து இருக்கைகளிலும் செய்தியாளர்களுக்கு இந்த பைல் வழங்கப்பட்ட நிலையில், அதில் பணம் பணம் வைத்து வழங்கப்பட்டதற்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பிற்பகல் பட்டமளிப்பு விழா நிறைவடைந்த நிலையில் பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தரிடம் பத்திரிக்கையாளர்களுக்கு லஞ்ச பணம் கொடுக்கப்பட்டது குறித்து முறையிட்டனர்.

துணைவேந்தர் காளிராஜ்
இந்த விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் இது குறித்து விசாரித்து தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். பெட்ரோல் அலவுன்ஸ்ஸாக கொடுத்து இருப்பார்கள் என துணைவேந்தர் காளிராஜ் கூறியதற்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோவையில் பரபரப்பு
இந்நிலையில், தன்னுடன் இருந்த பாதுகாவலரிடம் பணத்தை கொடுத்து விடும்படியும், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுத்த பின் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தெரிவிப்பதாகவும் துணைவேந்தர் காளிராஜ் தெரிவித்தார். இதனையடுத்து பத்திரிகையாளர்கள் பணத்துடன் கொடுத்த கவரை திரும்பி ஓப்படைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.