உயிரைப்பறித்த தீபாவளி மது விருந்து ... மதுபானம் அருந்திய 3 நண்பர்கள்... அடுத்தடுத்து பலி
தீபாவளி தினத்தை ஒட்டி ஜாலியாக மது அருந்திய 3 நண்பர்கள் அடுத்தடுத்து பலியான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷமான பண்டிகை தினம் சோகத்தில் முடிந்துள்ளது. மது அருந்தியவர்களின் மர்ம மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் அருந்ததியர் வீதியைச்சேர்ந்தவர்கள் பார்த்தீபன்(31) , சக்திவேல்(60) மற்றும் முருகானந்தம்(55). பார்த்தீபன் சக்திவேல் இருவரும் பெயிண்டர்களாக பணிபுரிந்து வந்தனர். முருகானந்தம் சமையல்காரராக பணியாற்றி வந்தார். தென்காசியை சேர்ந்த அவர் தொழில் நிமித்தமாக கோவையில் தங்கி இருந்ததில் மற்ற இருவருடன் பழகி நண்பராகியுள்ளார்.

நண்பர்களான மூவரும் எங்கு போனாலும் சேர்ந்தே போவார்கள். மூவருகும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. மூவரும் அவ்வப்போது ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி அதை மது அருந்தி கொண்டாட முடிவு செய்துள்ளனர். நேற்று மாலை மூவரும் மது அருந்தியுள்ளனர்.
பின்னர் மறு நாள் விடுமுறை என்பதால் கூடுதலாக மது அருந்த எண்ணி மாலை 6.30 மணி அளவில் மூவரும் மீண்டும் ஒரு முழுபாட்டில் மது பாட்டிலை வாங்கியுள்ளனர். பின்னர் யாருடைய தொந்தரவும் இல்லாமல் மது அருந்துவதற்காக அருந்ததியர் வீதியிலுள்ள, பட்டத்தரசிய்யம்மன் கோவில் எதிரே இருக்கும் , பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து 3 பேரும் மது அருந்தியுள்ளனர்.
தீபாவளி வாழ்த்து... புதுச்சேரி டிஜிபி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள்..!
விடிய விடிய 3 பேரும் மது அருந்தியுள்ளனர். காலையில் மது அருந்தி முடித்தவுடன் சக்திவேல் நான் கிளம்புகிறேன் என தனது வீட்டுக்கு கிளம்பியுள்ளார். மூவரும் அப்பகுதியை விட்டு கிளம்பியுள்ளனர். சக்திவேல் கோவிலின் பின்புறம் வந்தவர், போதை அதிகமானதால் கீழே உட்கார்ந்தவர் உட்கார்ந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். அவரை தொடர்ந்து பாரதியார் சாலையில் சென்ற முருகானந்தம் வழியிலேயே சாலையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதைப்பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு புகார் அளித்த நிலையில் போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பார்த்தீபன் தனது வீட்டருகே இறந்த நிலையில் கிடந்துள்ளார். பின்னர் அவரது உடலும் பிரேதப்பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியியல் துறையினர் மது அருந்த பயன்படுத்திய டம்ளர், கைரேகை, மது அருந்திய பாட்டில் மற்றும் அப்பகுதியிலுள்ள தடயங்களை எடுத்துச்சென்றனர். பந்தய சாலை காவல் துறையினர் மது அருந்திய மூன்று பேர் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூவரும் அருந்திய மதுவை எங்கு வாங்கினர், மூவரையும் கொல்ல யாராவது மதுவில் விஷம் கலந்தார்களா? அல்லது அவர்கள் வாங்கிய மது கள்ளச்சாராயம் வகையா? அல்லது மூவரும் தற்கொலை செய்துக்கொண்டார்களா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு ஆய்வு மற்றும் மதுபாட்டில் ஆய்வுக்குப்பின்னரே முழு உண்மை தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.