கோவையில் 5 நாளாக போக்கு காட்டிய சிறுத்தை ஒரு வழியாக கூண்டிற்குள் சிக்கியது.. நள்ளிரவில் என்ன நடந்தது
கோவை: குனியமுத்தூர் பகுதியில் 5 நாட்களாக குடோனில் பதுங்கி இருந்த சிறுத்தையை வன ஊழியர்கள் பிடித்துள்ள நிலையில், சிறுத்தை எவ்வாறு சிக்கியது என்பது குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரையொட்டிய வனப்பகுதியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியேறிய மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை குனியமுத்தூர் பகுதியில் உள்ள குடோனில் பதுங்கியது.
இந்த சிறுத்தை இரவு நேரங்களில் தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இது குறித்து வனத்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
4-வது நாள்... கோவையில், குடோனுக்குள் வனத் துறையினருக்கு தண்ணி காட்டும் சிறுத்தை.. முடியல!

சிறுத்தை
இது குறித்துத் தகவலறிந்த வனத்துறையினர் சிறுத்தையை உயிருடன் பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டனர். குடோனை சுற்றி வலை விரித்தும், குடோனில் 2 வாயில்களிலும் இரண்டு கூண்டுகள் வைத்தும் சிறுத்தையைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலமும் சிறுத்தையின் நடமாட்டம் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தது.

5 நாட்களாகப் போக்குகாட்டிய சிறுத்தை
கூண்டு வைத்து 5 நாட்களாக வனத்துறையினர் காத்திருந்த போதிலும் கூண்டில் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வந்தது. கோவை வனத்துறையினரும் சிறுத்தை தானாகக் கூண்டில் வந்து சிக்கும் வரை பொறுமை காத்திருந்தனர். சிறுத்தை மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் கூண்டிற்குள் வராமல் இருந்து வந்தது. 5 நாட்களாக உணவு, தண்ணீர் போன்றவை இல்லாமல் இருந்த சிறுத்தை, உணவுக்காக குடோனில் இருந்து வெளியேற முயன்றது. 6வது நாளான நேற்று குடோன் வாயிலில் வைக்கப்பட்டிருந்த கூண்டு பகுதிக்குச் சிறுத்தை வந்தது.

6ஆவது நாளில் சிக்கியது
சிசிடிவி கேமரா மூலம் சிறுத்தையின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் சிறுத்தை முழுமையாகக் கூண்டிற்குள் வந்தவுடன் கதவை மூட தயாராக இருந்தனர். சிறுத்தை மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் கூண்டிற்குள் வந்த நிலையில், வன ஊழியர்கள் சமயோசிதமாகச் செயல்பட்டு கூண்டின் கதவை அடைத்ததால் சிறுத்தை கூண்டில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து உடனடியாக அங்கு வந்த கோவை மண்டல கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் வனத்துறை ஊழியர்களைப் பாராட்டினார்.

வனத்துறையினர் திட்டம்
இதனையடுத்து சிறுத்தையைப் பத்திரமாக அடர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் பகுதிக்குச் சிறுத்தையைக் கொண்டு சென்று அதிகாலை சிறுத்தையை விடுவிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். பொதுவாக ஊருக்குள் வரும் வனவிலங்குகள் மயக்க ஊசி செலுத்தியே பிடிக்கப்படும். ஆனால், அவ்வாறு செலுத்தப்படும் மயக்க ஊசியின் அளவு அதிகரித்தால் விலங்குகளின் உயிருக்கே அது ஆபத்தாகிவிட வாய்ப்புள்ளது. எனவே, மயக்க ஊசி செலுத்தாமல் 5 நாட்களாகப் பொறுமையுடன் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து அதை உயிருடன் பிடித்த வனத்துறையினரைப் பொதுமக்கள் மட்டுமின்றி விலங்கு நல ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்