முன்னாள் அமைச்சர் தாமோதரன் உயிரை காவு வாங்கிய கொரோனா - சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது
கோவை: கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் தாமோதரன் இன்று மாலை உயிரிழந்தார். அவரது உடல் கோவையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் தாமோதரன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அமைச்சரவையில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக பதவி வகித்தார். அதிமுகவில் எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள் மாநில துணைத் தலைவர், ஆவின் முன்னாள் தலைவர் என பல பொறுப்புகளில் பணியற்றியுள்ளார்.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பல அரசியல் தலைவர்களை காவு வாங்கியுள்ளது. தாமோதரன், கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா வைரஸில் இருந்து சற்று மீண்ட நிலையில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது தொற்றின் தீவிரத்தாலும், நுரையீரல் பாதிப்பினாலும் இன்று மாலை உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் அமைச்சர் தாமோதரன் மறைவிற்கு அதிமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் புதன்கிழமையன்று மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.