கோவையே அசந்து போச்சு.. பட்டுப்புடவை, மல்லிகைப்பூவுடன் மைக்கை பிடித்த ஆப்பிரிக்க பெண்.. சபாஷ் மாப்ளே
கோவை: ஆப்பிரிக்கா நாட்டு பெண்ணை தமிழக இளைஞர் இந்தியா அழைத்து வந்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட சம்பவம், கோவையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது... இவர்களின் போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் தம்பதி சுப்பிரமணியம் - தர்மலட்சுமி.. இவர்களது சொந்த ஊர் கோவில்பட்டி. இவர்களது மகன் முத்து மாரியப்பன்.. 30 வயதாகிறது.. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கேம்ரூனிற்கு சென்று வேலை பார்த்து வருகிறார்.
5 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.. தீயாய் வீசும் காற்று.. டெல்லி மக்களுக்கு எச்சரிக்கை
அங்குள்ள ஆயில் மற்றும் கியாஸ் நிறுவனத்தில் சிஎன்சி மெஷின் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார்... அப்போது அதே கம்பெனியில் அக்கவுண்டண்டாக பணியாற்றியவர் வால்மி இனாங்கா மொசொக்கே.. இவருக்கு வயது 26.

தொடர்பு
வேலை பார்த்த இடத்தில் 2 பேருக்கும் நட்பு ஏற்பட்டு, அதுவே காதலாக கனிந்தது.. மாரியப்பன் வேலைக்கு போனபோதே காதலில் விழுந்துவிட்டார்.. 8 வருடமாகவே இருவரும் காதலித்து வந்துள்ளனர். 2 வீட்டிலும் தங்கள் காதலை சொல்லவும், 2 வீட்டிலுமே எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் திருமணத்திற்கு ஓகே சொல்லி உள்ளனர்.. காதலி கிறிஸ்துவ மதம்.. காதலன் இந்து மதம்.

காதலி
எனினும், இந்தியாவில் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்ய வேண்டும் என்று தன்னுடைய ஆசையை, காதலி விருப்பப்பட்டுள்ளார்.. இந்த ஆசையை இளைஞர் தன் வீட்டில் சொல்லவும், அவர்களும் சம்மதம் சொல்லி உள்ளனர்.. இதையடுத்து கோவையில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது... மணமகளின் அம்மா, பெரியப்பா மொக்கோசோ லூக்காஸ் ஜேம்ஸ், பெரியம்மா ஷோபி எஞ்சே நமொன்டோ உள்ளிட்ட மொத்தம் 10 பேர் இந்தியாவுக்கு வந்திருந்தனர்.

பட்டுப்புடவை
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் களை கட்ட தொடங்கியது.. இதில் ஆப்பிரிக்க மணப்பெண்ணான வால்மி இனாங்கா மொசொக்கேவிற்கு, பட்டுபுடவை கட்டி, நகைகள் அலங்கரித்து, பூச்சூட்டப்பட்டு, மலர் பந்தலின் கீழ் ஊர்வலமாக மணமேடைக்கு அழைத்து வந்தனர்... மணமகள் பார்ப்பதற்கே வித்தியாசமாக, படுஅழகாக காணப்பட்டார்.. மணமகளைவிட அவரது உறவினர்கள் அதற்கு மேல் கலக்கிவிட்டார்கள்..

பெரியப்பா லூக்காஸ்
மணமகளின் பெரியப்பா லூக்காஸ் உட்பட நமது பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்தவாறு வந்தனர்... மணமகளின் அம்மா, பெரியம்மா, தழைய தழைய பட்டுப்புடவை கட்டியிருந்தனர்.. ஆனால், அவர்கள் பூ வைக்கவில்லை.. ஹேர் கட்டிங், ஹேர்கலரிங்குடனேயே அவர்கள் கலர்புல்லாக காணப்பட்டனர்.. இதையடுத்து, புரோகிதர் வேத மந்திரம் ஓத, ஆப்பிரிக்க மணப்பெண்ணுக்கு, தமிழக மணமகன் முத்து மாரியப்பன் தாலி கட்டினார்.. தொடர்ந்து இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர்.. பிறகு, மணமகன் அம்மி மிதித்து மெட்டி அணிவித்தார்.

கிறிஸ்தவ முறை
இதற்கு பிறகு கிறிஸ்தவ முறைப்படி, மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்தனர். இறுதியாக, அனைத்து உறவினர்களிடம் ஆசிபெற்றுக்கொண்டனர்.. நிறைய குரூப் போட்டோக்களையும் எடுத்துக்கொண்டனர்... திருமணம் முடிந்த கோலத்தில் மணமேடையில் இருந்தவாறு, மணமகள் மைக்கை பிடித்து பேச ஆரம்பித்தார்.. ஆப்பிரிக்க பெண் என்ன பேச போகிறாரோ, என்ற ஆர்வம் அனைவருக்குமே அதிகரித்தது..எடுத்ததும் தமிழில் "வணக்கம்" என்றதும் கைதட்டல்களால் மண்டபமே அதிர்ந்தது.

வணக்கம்
தொடர்ந்து பேசிய மணமகள், "எனக்கு இந்திய கலாச்சாரம் ரொம்பவும் பிடிக்கும்... இந்தியர்களை அதைவிட பிடிக்கும்.. அதனால்தான் நான் இந்து முறைப்படி திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்... எனது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்ததால் இந்தியா வந்து திருமணம் செய்து கொண்டேன்... இந்த நிகழ்வுமூலம் நானும் இந்தியாவில் ஒருத்தி ஆகி விட்டேன்... நான் நினைத்தது இப்போது நடந்து விட்டது... என் கனவும் பலித்து விட்டது... என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் இது" என்று நெகிழ்ந்து கூறினார்.

ஆச்சரியம்
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆப்பிரிக்க மணமகளின் உறவினர்கள் தமிழக பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து பங்கேற்றதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தது.. அத்துடன் வெளிநாட்டு பெண், நம்ம ஊர் மருமகள் ஆகிவிட்ட நிலையில், கோவையே பூரித்து போயுள்ளது.. இவர்களின் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பார்த்த தமிழக மக்கள், தம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்..!