அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பெருமை பேசவில்லை...பெருமிதம் கொள்கிறேன் – முதல்வர்
கோவை: அரசுப்பள்ளி மாணவர்களுக்காக 7.5 இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் தற்போது 313 அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர் என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். நான் கிராமத்தில் இருந்து வந்தவன், 7.5 % இட ஒதுக்கீட்டால் பெருமை கொள்கிறேன் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "நீட் தேர்வு தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. இருப்பினும், அரசுப்பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதை அறிந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்காக 7.5 இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

உள் ஒதுக்கீடு மூலம் தற்போது 313 அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர் என்றார். அப்போது ஒரு செய்தியாளர் இதுபற்றி பெருமை பேசுகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர், நான் கிராமத்தில் இருந்து வந்தவன், 7.5 % இட ஒதுக்கீட்டால் பெருமை பேசவில்லை பெருமிதம் கொள்கிறேன் என்று சொன்னார்.
நீட் தேர்வை எதிர்க்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் படிக்கக் கூடிய 41% பேர் அரசுப்பள்ளி மாணவர்கள். கடந்தாண்டு 6 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். இந்தாண்டு 7.5% உள் ஒதுக்கீட்டால் 313 பேர் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆன்லைன் ரம்மிக்கு சட்டம் இயற்றுவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி, இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், எதுவும் பேச முடியாது என்றார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, வருவாய்த்துறை அமைச்சர் அதில் முழு கவனம் செலுத்தி வருகிறார். எந்த சூழலிலும் மக்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் முதல்வர் பழனிச்சாமி.