"இந்த ஆட்டம் போதுமா? கொழந்த" - குடியரசு தின விழா அணிவகுப்பு குறித்து திமுகவினரின் அதிரடி போஸ்டர்
கோவை : டெல்லியில் ராஜபாதையில் குடியரசு தின நிகழ்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற நிலையில், இந்த ஆட்டம் போதுமா கொழந்த என திமுகவினர் கோவையில் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் மாநிலங்கள் சார்பாகவும், மத்திய அரசின் துறைகள் சார்பாகவும் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பானது, இந்த ஆண்டு 'இந்தியா 75' என்ற தலைப்பின் கீழ் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் இடம்பெற வேண்டி விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் பறை சாற்றுகின்ற வகையில் அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகள் மத்திய அரசின் தேர்வுக் குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது.
சசிகலா புஷ்பா.. அன்று முதல் இன்றுவரை ஓயாத சர்ச்சை.. லேட்டஸ்ட் லிஸ்டில்

அனுமதி மறுப்பு
தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், வட இந்தியாவில் ஜான்சிராணி பிறப்பதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆங்கிலேயர்கள் வரி வசூல் உரிமை பெற்ற தொடக்க காலத்திலேயே அவர்களுக்கு எதிராக யுத்தம் நடத்தி வெற்றி வாகை சூடிய வீரமங்கை வேலுநாச்சியார், அவர்தம் தளபதிகள் மாமன்னர்கள் மருது சகோதரர்கள் ஆகியோரது உருவங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் மத்திய அரசு இந்த அலங்கார ஊர்தியை அனுமதிக்கவில்லை.

முதல்வர் உத்தரவு
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் டெல்லியில் அணிவகுக்க அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின நிகழ்வில் பங்கேற்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கு பெரும் வரவேற்பு எழுந்த நிலையில் சொன்னபடியே இன்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன.

சென்னையில் அணிவகுப்பு
சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெரினா கடற்கரைச் சாலையில் கம்பீரமாக தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. அந்த அலங்கார ஊர்திகளில் செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார், வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், பெரியார், ஆகியோரின் சிலைகளும் தமிழக அரசின் இலச்சினையுடன் ஒய்யாரமாக வலம் வந்தன. இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. டெல்லியில் வாய்ப்பு மறுக்கப்பட்டால் என்ன ? தமிழகத்தில் கெத்தாக வலம் வந்த அலங்கார ஊர்திகள் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கருத்து பதிந்து வருகின்றனர்.

வைரலாகும் போஸ்டர்
இந்நிலையில் கோவை மாநகரில் லங்கா கார்னர், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் "இந்த ஆட்டம் போதுமா? கொழந்த..." என திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். கோவை மாநகர் கிழக்கு மண்டலம் பெரிய கடை வீதி சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டரில் சிதம்பரனார், வேலு நாச்சியார், பாரதியார், மருது சகோதரர்கள், பெரியார் ஆகியோரின் புகைப்படங்களும், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, முதல்வர் முக ஸ்டாலின், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.