போஸ்டரை கிழிப்பதில் காட்டும் அக்கறையை... மக்கள் பணியில் காட்டுங்கள்... கோவையில் கடுகடுத்த கமல்..!
கோவை: போஸ்டரை கிழிப்பதில் காட்டும் அக்கறையை மக்கள் பணியிலும் காட்ட வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் மீது பாய்ந்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

சட்டமன்றத் தேர்தலுக்கான 5-ம் கட்ட பிரச்சாரத்தை கோவையில் இன்று தொடங்கியுள்ளார் கமல்ஹாசன். இதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த அவரை விமான நிலையத்தில் வரவேற்க பெருமளவில் ம.நீ.ம. தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

இதனிடையே கமலை வரவேற்பதற்காக கோவை விமான நிலையப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகை மற்றும் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன. இந்த தகவல் கமல் கவனத்துக்கு சென்றதை அடுத்து, மக்கள் நீதி மய்யத்துக்கு இலவச விளம்பரம் தேடி கொடுத்ததற்காக அமைச்சர்களுக்கும், கோவை மாநகராட்சிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
எனது பேச்சை டேப் செய்யட்டும்... தெரிந்து தான் டெலிபோனில் பேசினேன்... ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
மேலும், இது போன்ற வேலைகளில் காட்டும் அக்கறையை மக்கள் பணியில் காட்டினால் தன்னை போன்றவர்கள் அரசியலுக்கே வந்திருக்க வேண்டியதில்லை எனத் தெரிவித்தார்.
இன்று கோவையில் பிரச்சாரத்தை தொடங்கும் கமல், திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யம் துணை தலைவரும், பொள்ளாச்சியை சேர்ந்தவருமான டாக்டர் மகேந்திரன் செய்திருக்கிறார்.