கொடநாடு கொலை : சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸ்
கோவை: கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக இளவரசியின் மகனும், சசிகலாவின் அண்ணன் மகனுமாகிய விவேக் ஜெயராமனிடம் கோவையில் தனிப்படை போலீசார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். கொடநாடு கொலை தொடர்பாக இதுவரை 30க்கும் மேற்பட்டவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள கொடநாடு எஸ்டேட்டை, 1991-96 காலகட்டத்தில், தான் முதல்வராக இருந்தபோது வாங்கினார் ஜெயலலிதா. இந்த கொடநாடு எஸ்டேட் சொத்துக்களில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் பங்கு இருக்கிறது.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் இந்த பங்களாவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது. அப்போது காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

கொடநாடு கொலை மர்மம்
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கனகராஜ், சயான், ஜெம்சீர்அலி, சந்தோஷ் சமி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய நபராக குற்றம் சாற்றப்பட்ட கனகராஜ், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக பணிபுரிந்தவர்.

திமுக ஆட்சி காலத்தில் விறுவிறுப்பு
அதிமுக ஆட்சி காலத்தில் கொடநாடு வழக்கில் பெரிதாக முன்னேற்றம் ஏதுமில்லாமல் இருந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் இந்த வழக்கு விசாரணையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி, தமிழ்நாடு அரசு தரப்பில், கொடநாடு வழக்கை மறுவிசாரணை செய்யவேண்டும்' எனத் தொடுக்கப்பட்டிருந்த மனுவுக்கு உதகை நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து விசாரணை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

சட்டசபையில் எதிர்ப்பு
கொடநாடு கொலை கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்க தற்போது எதிர்கட்சியாக உள்ள அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். மடியில் கனமிருந்தால்தான் வழியில் பயப்பட வேண்டும் என்று இந்த விசாரணை குறித்து கூறினார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

விவேக் ஜெயராமன்
கொடநாடு எஸ்டேட் மேலாளரிடம் தனிப்படை போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்திய நிலையில் சசிகலாவின் அண்ணன் மகனும் இளவரசி மகனுமாகிய விவேக் ஜெயராமனிடம் தனிப்படை போலீசார் கோவையில் விசாரணை 3மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

கோவையில் விசாரணை
கொடநாடு பங்களா உள்ளிட்ட சொத்துக்கள் தொடர்பாக விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியானது. கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தியது. கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விவேக் ஜெயராமனிடம் மணி நேரம் விசாரணை நடைபெற்றது.