"தமிழகத்தில் இனி கட்டுப்பாடுகள் வராது!" நிம்மதி அளித்த மா.சு! ஆனால் கடைசியில் சின்னதா ஒரு ட்விஸ்ட்
கோவை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 10 சதவிகிதத்தையும் தாண்டி உள்ளது.
இதனால் மக்களுக்கு ஊரடங்கு குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில், இது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
திடீர் வேகம்! ஒரே நாளில் இந்தியாவில் 18,930 பேருக்கு கொரோனா.. உயிரிழப்புகளும் அதிகரிப்பதால் அச்சம்

கோவை
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமைச்சர் மா. சுப்பிரமணியன் கோவை சென்றுள்ளார். அங்கு மதுக்கரை வட்டார பகுதியில் வருமுன் காப்போம் திட்டம், காசநோய் கண்காணிப்பு மற்றும் நடமாடும் கதிர்வீச்சு வாகனம், துணை சுகாதார நிலையம், ஆர்டி,பிசிஆர் புதிய எந்திரம் உள்ளிட்டவற்றை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்.

அமைச்சர் மா.சு
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழக முதலமைச்சர் காசநோய் வாகன குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களைத் தொடங்கி வைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக இங்கும் விழிப்புணர்வு வாகனம் தொடங்கப்பட்டு உள்ளது. பார்வை திட்டம் மூலம் இதுவரை 1.15 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.

பல்வேறு திட்டங்கள்
நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்காக மொத்தம் 136 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் 18 அறிவிப்புகள் கோவை மாவட்டத்தைச் சார்ந்தது. காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவச் சிகிச்சையில் 22 லட்சம் வரை பயன்பெறலாம். கோவை அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் குறித்து ஆய்வு செய்யப்படும். தேவை ஏற்பட்டால் மற்றொரு எம்ஆர்ஐ இயந்திரம் வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

கொரோனா
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 6 மாதங்களில் பணிகள் துவங்கும். கோவைக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். கொரொனா பாதிப்பைப் பொறுத்தவரை 15க்கு மேற்பட்ட மாநிலங்களில் அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 95 சதவீதம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

வேகமாகப் பரவ காரணம்
அவர்களின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஓமைக்கிரான் எனப்படும் கொரோனாவான பிஏ4, பிஏ5 வைரஸ் தான் அதிகமாக உள்ளது. இதனால் பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை. இது வேகமாகப் பரவும் தன்மையுடையது என்றாலும் கூட அச்சம் தேவையில்லை" என்று அவர் தெரிவித்தார். கொரோனா அதிகரிக்கும் சூழலில் மீண்டும் கட்டுப்பாடுகள் வருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்
இது குறித்த கேள்விக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் இனி கட்டுப்பாடுகள் வராது. ஒரு இடத்தில் 40க்கும் மேற்பட்டோர்களுக்குத் தொற்றுகள் இருந்தால் மட்டும் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 2,743 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1062 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அங்கு 14.8 பாசிட்டிவ் விகிதமும் ஆக உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 11 மாவட்டங்களில் பாசிட்வ் விகிதம் 10 சதவிகிதத்தைத் தாண்டி உள்ளது.