தமிழகத்தில் மெல்ல கிளைகளை விரிக்கும் ஆம் ஆத்மி! கோவையில் புதிய அலுவலகம் திறப்பு!
கோவை: குஜராத், இமாச்சல் பிரதேசம் மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவையில் ஆம் ஆத்மி கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்த அவர் இதனைக் கூறினார்.
சென்னைக்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி கட்சிக்கு அதிக ஆதரவாளர்கள் இருப்பது கோவை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகள்! இமாச்சலில் ஆம் ஆத்மிக்கு பெரிய அடி..பாஜகவில் இணைந்த பெருந்தலைகள்

ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகம் கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் துவங்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் முதல் அலுவலகமாக கோவையில் துவங்கப்பட்ட இதற்கான விழாவில், மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

வசீகரன் பேட்டி
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மாற்றத்தை தருவதாக கூறினாலும், அது போன்ற எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியை நோக்கி மக்கள் வரத் தொடங்கியிருப்பதாக கூறிய அவர் தமிழக முதல்வரே டெல்லிக்கு சென்று அங்குள்ள அரசுப் பள்ளிகளை பார்வையிட்டது கெஜ்ரிவாலின் சாதனைகளுக்கு உதாரணமாக தெரிவித்தார்.

மக்கள் நலன்
ஊழலில்லாத, கடன் இல்லாத, மக்களின் நலன் காக்கும் அரசாக டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் செயல்பட்டதன் விளைவாகவே பஞ்சாப்பில் தங்களுக்கு வெற்றி கிடைத்ததாக குறிப்பிட்ட அவர், இந்த வெற்றி தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தல்களில், குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தொடரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கிளை விரிக்கும் கெஜ்ரிவால்
டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து குஜராத், இமாச்சல் பிரதேசம் மாநிலங்களில் அதீத கவனம் செலுத்த தொடங்கியுள்ள கெஜ்ரிவால் அங்கு ஆட்சியை பிடிப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தியிருப்பது வசீகரனின் பேட்டி மூலம் தெரிய வருகிறது. இதனிடையே தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சியின் கிளைகளை மெல்ல விரிவாக்கம் செய்யும் பொருட்டு சென்னைக்கு அடுத்தபடியாக மாவட்ட தலைநகரம் ஒன்றில் (கோவையில்) முதல் முறையாக கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.